PUBLISHED ON : அக் 23, 2021

திருச்சி, பொன்மலை ரயில்வே பள்ளியில், 1960ல், 7ம் வகுப்பு படித்தபோது, வகுப்பாசிரியராக இருந்தார் முத்துராமலிங்கம்.
வகுப்பில் தமிழ் தவிர, இரண்டாம் பாடமாக சிறப்பு தமிழ் அல்லது சமஸ்கிருதம் போதிக்கப்பட்டது.
என்னுடன், ஐந்து பேர் சமஸ்கிருதம் படித்தோம். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் தரவரிசை போடுவதற்கு, ஆங்கிலம், கணக்கு, அறிவியல், பூகோளம் மற்றும் தமிழ் மதிப்பெண்களை அட்டையில் எழுதுவார் வகுப்பாசிரியர்.
சிறப்பு தமிழுக்குரிய மதிப்பெண்ணையும் அவரே எழுதி விடுவார். இதற்கு காரணம், இந்த பாடங்களை எல்லாம் அவரே நடத்தி வந்தார். சமஸ்கிருதப் பாடத்தில் வாங்கிய மதிப்பெண்ணை, எங்களிடம் கேட்பார்.
உட்கார்ந்த இடத்திலிருந்து, உரத்த குரலில் கூறுவோம். ஒருவன், 58 மதிப்பெண் வாங்கியிருந்தான். அதை தெளிவற்ற முறையில், 'ஐ' என்பதை, 'எ' என உச்சரித்து, 'எம்பத்தெட்டு' என கூறினான்.
இதனால் தரவரிசையில் உயர்ந்து, வகுப்பில் முதல், 10 இடத்துக்குள் வந்து விட்டான். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவன், 'ஆசிரியரிடம் புகார் கூறப் போகிறேன்...' என்றான். அதை அசட்டை செய்தபடி, 'மிரட்டுகிறாயா... புழு மாதிரி நசுக்கிடுவேன்...' என்றான். பயத்தில் புகாரை தவிர்த்தான் அந்த மாணவன்.
என் வயது, 73; என் பேரப்பிள்ளைகளிடம் அந்த நிகழ்வை கதை போல் கூறுகிறேன். திரும்பத் திரும்ப ஆர்வத்துடன் கேட்டு மகிழ்கின்றனர்.
- கி.முத்துகிருஷ்ணன், சென்னை.
தொடர்புக்கு: 96001 99478
