PUBLISHED ON : அக் 23, 2021

முன்கதை: மிருகம், பறவை போன்ற உயிரினங்களை நேசிக்கும் சிறுவன் சந்திரஜெயன், அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மாமாவுடன், அன்டார்டிகாவுக்கு சென்றான். அங்குள்ள சூழல் பற்றி கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டான். இனி -
''இப்ப, 10 வயது சிறுவருக்கு, 20 வயது வாலிபருக்குரிய அறிவு இருக்கு; இரண்டாயிரத்துல பிறந்தவர்கள், தொழில் நுட்பம் சார்ந்த நவீன குழந்தைகள்; அவர்கள் பிறக்கும் போது, கணினி அறிவும், திறன்பேசி அறிவும் பெற்றிருக்கின்றனர் மாமா...'' என்றான் சந்திரஜெயன்.
''இக்கால குழந்தைக்கு தொழில் நுட்பம் சொல்லித் தர வேண்டாம்; வாழ்க்கையை தான், சொல்லித் தர வேண்டும்; உறவை பேண கற்று கொடுக்க வேண்டும்...'' என்றார் விஞ்ஞானி யோகிபாபு.
''கசப்பான உண்மை...''
சிறிது துார பயணத்திற்கு பின், துருவ பகுதியில் செய்யப்பட்ட விசேஷ பிஸ்கெட்டை சாப்பிட்டபடி, ''குளிர் எப்படி இருக்கிறது மருமகனே...'' என்றார்.
''கத்தியால் குத்தி கிழிக்கிறது; உதடு, கை விரல் நுனி, கால் விரல் நுனி எல்லாம் அறுந்து விழுந்துடும் போல இருக்கிறது...''
''நான் குளிரை ரசிக்கிறேன்... அதை வெறுப்பாக பார்த்தால், தீவிரமாக தாக்கும்; அன்பாக பார்த்தால், கட்டியணைத்து கொண்டாடும்...''
''வானத்தை பாருங்க... பறப்பவை ஆல்பட்ராஸ் பறவைகள் தானே...''
''ஆமாம்... அவை, தெற்கு சாயல் ஆல்பட்ராஸ் என அழைப்பர்... இறக்கை நீளம் 11 அடி; இரண்டு மனிதரை, ஒருவர் மேல் ஒருவராக நிறுத்தினால், ஆல்பட்ராஸ் பறவையின் இறக்கை நீளம் வரும்... அதிக பட்சம், 15 கிலோ எடை இருக்கும். தினமும், தன் உடல் எடையில், 12 சதவீதம் அளவுக்கு, இரை உண்ணும்; உடல் நீளம், 3.5 அடியிலிருந்து, 4.5 அடி வரை இருக்கும்...''
''இவை எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும்...''
''ஐம்பது ஆண்டுகள் வரை வாழும்; ஆறு ஆண்டுகள் வரை கூட, இவை நிலத்தை தொடாமல் பறக்கும் இயல்பு உடையவை. பறக்கும் போதே துாங்கும் என்பர். ஒரே ஒரு முட்டையிடும்; அதை அடை காத்து குஞ்சு பொரிக்கும்; குஞ்சு பறக்க, ஆறு மாதங்கள் ஆகும்...''
''ஆல்பட்ராஸ் பறவைகளை பற்றி ஏதாவது மூட நம்பிக்கை உள்ளதா...''
''இருக்கு... ஆல்பட்ராஸ் பறவை கப்பலை பின் தொடர்ந்து பறக்கும்; அதில் ஏதாவது உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பறந்து வரும். அதை கொன்றால், துரதிஷ்டம் தொடரும் என்பர்...''
பேசிக் கொண்டிருந்த போதே, வெண்மை டாலடிக்கும் ஆல்பட்ராஸ் பறவை வாகனத்தில் அமர்ந்தது.
அருகில் பார்ப்பது முதல் முறை என்பதால், 'கொத்தி விடுமோ' என பயந்தார் யோகிபாபு.
''விரட்டி விடலாமா மாமா...''
''விரட்டினால் கோபப் பட்டு கொத்தி விடும்...''
''அப்படின்னா என்ன செய்வது...''
''சிறிது நேரம் பொறுத்திரு... தானே பறந்து போய் விடும்...''
ஆல்பட்ராஸ் பறவையின் கண்ணில் ஏதோ செய்தி ஒளிந்திருந்தது; அதன் கண்களை ஊடுருவி பார்த்தார் மாமா. எதையும் அறிய முடியவில்லை.
அச்சமயம், ஏழெட்டு ஆல்பட்ராஸ் பறந்து வந்து, இருவரின் வாகனத்திலும் அமர்ந்தன. வினோதமாய் சத்தம் எழுப்பின; உடலில் ஒருவகை வாசனை வீசியது.
இரண்டு வாகனமும் தடுமாறின.
வாகனத்தை நிறுத்தினர். அவற்றில் இருந்து இறங்கி, டெலஸ்கோப்பிக் வாக்கிங் போலுடன் ஓட ஆரம்பித்தனர்; ஆல்பட்ராஸ் பறவைகள் துரத்த ஆரம்பித்தன.
''எங்காவது துாக்கிப் போய் போட்டு விடுமோ மாமா...''
''தெரியலயே...''
''கொத்துமோ...''
பயத்துடன் வினவினான் சந்திரஜெயன்.
''கொத்து வாங்க தயாராய் இருப்போம்...''
பறவையின் பார்வையில், மிருகம் மிரண்டு ஓடுவது போல் பிரமை கூட்டின; தலைதெறிக்க ஓடினர். வெகுதுாரம் ஓடி அண்ணாந்து பார்த்தனர்; துரத்தி வந்த பறவைகளை காணவில்லை.
''எவ்வளவு துாரம் ஓடி வந்திருப்போம்...''
''மூன்று கி.மீ., ஓடி வந்திருப்போம்...'' என்றார் யோகிபாபு.
'உஷ்...' என சீறல் சத்தம் காற்றில் எழுந்தது.
''என்ன சத்தம் இது... பாம்பு சீறுற மாதிரியே இருக்கு...''
''காற்று தான் கொஞ்சம் வேகமாக அடிக்குது...''
''பனி சூறாவளியா இருக்குமோ...'' என்றான் சந்திரஜெயன்.
நொடிக்கு நொடி காற்றின் வேகம் அதிகரித்தது.
''நீ சொன்ன மாதிரி, பனி சூறாவளியா இருக்கும்...'' என்றார் யோகிபாபு.
காற்றில், பனியின் வெண்படலம் சூழ்ந்தது; ஒரே இடத்தில் நிற்க முடியாமல் தவித்தனர்.
பனிப்புயல் இருவரையும் இழுத்து கீழே தள்ளியது.
காற்றின் வேகம், 60 கி.மீ., தாண்டி அடித்தது.
''சரியா மாட்டிக்கிட்டோம்; என்னை கட்டி அணைச்சுக்க மருமகனே...'' என்றார்.
அணைத்துக் கொண்டான் சந்திரஜெயன்.
காற்றின் வேகம் அபாயகரமாய் கூடியது; 100 கி.மீ., வேகத்தில் புயல் வீசியது. பனியை வழித்து வீசியது; இதில் சிக்கிய இருவரும், 500 அடி துாரத்தில் சென்று விழுந்தனர்.
திடீரென்று காலடி நிலம் நடுங்கியது; புலியின் உறுமல், சிங்கத்தின் கர்ஜனை, யானையின் பிளிறல் எழுந்தது.
- தொடரும்...
- வஹித்தா நாசர்
