தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புத்திசாலி தீர்ப்பு!

புத்திசாலி தீர்ப்பு!

புத்திசாலி தீர்ப்பு!


PUBLISHED ON : ஜூலை 18, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்டின் அருகே புலியூர் கிராமத்தில் வசதிகள் குறைவு. மாமிசம் உண்ணும் விலங்குகள் அடிக்கடி வந்து செல்லும் என்பதால் சொற்பமாகவே மக்கள் வசித்தனர். தொந்தரவு தரும் விலங்குகளை கூண்டில் அடைத்து காட்டில் விடுவித்தனர்.

ஒரு நாள் -

வலிமையான புலி கூண்டில் சிக்கியது. தப்ப முயன்றும் முடியவில்லை. கூண்டை, கால்களால் எட்டி உதைத்தது. உறுமியபடியே நடைபோட்டது. கோபத்தில் பற்களை, 'நற நற' வென கடித்தது.

அந்த பக்கம் வந்த முதியவரைக் கண்டதும் மிகவும் சாந்தமாக, 'ஐயா... தயவு செய்து கூண்டை திறந்து விடு; என்னை காப்பாற்று...' என்றது.

'திறந்து விட்டால் என்னை கொன்று விடுவாயே...' என்றார் முதியவர்.

'இல்லை... சத்தியமாக கொல்ல மாட்டேன்... என்னை நம்பு...' என்றது புலி.

முதியவருக்கு பரிவு ஏற்பட்டது; கூண்டின் கதவை திறந்தார்.

குதித்து வெளியேறிய புலி, 'மிகவும் பசியாக இருக்கிறது; உன்னை கொன்று தின்னப் போகிறேன்...' என்றது.

பயந்து நடுங்கியபடி, 'கொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறாயே... நினைவில் இல்லையா...' என்றார்.

'உண்மை தான்; ஆனால், இப்போது பசி தாங்க முடியவில்லை; அதனால் சத்தியத்தை மீறுவதை தவிர வேறு வழியில்லை...' என்றது புலி.

தப்ப எண்ணி வேகமாக ஓடினார் முதியவர்; அவரை பிடிக்க பாய்ந்தது புலி. குகையையும், மரங்களையும் சுற்றியபடி ஓடிக்கொண்டிருந்தவரை துரத்தியது புலி.

அந்த வழியாக வந்த நரி, சற்று நேரம் இதை வேடிக்கை பார்த்தது. பின், 'நீங்கள் இருவரும் ஓடிப்பிடித்து விளையாடுகிறீரா... அப்படியானால், நானும் சேர்ந்து கொள்கிறேன்...' என்றது.

நாவறண்டபடி, 'ஐயோ... விளையாட்டு இல்லை; இந்த புலி என்னை கொன்று தின்ன முயற்சிக்கிறது; தப்பி பிழைக்க ஓடிக் கொண்டிருக்கிறேன்... எப்படியாவது காப்பாற்று...' என்றார் முதியவர்.

நிதானமாக யோசித்தது நரி. பின் சிரித்தபடியே, 'அன்பு மிக்க புலிமாமா, முதியவர் சொல்வது உண்மையா...' என்று கேட்டது.

'ஆம்... மிகவும் பசியாக இருக்கிறது; இங்கே சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. அதனால் தான் முதியவரை அடித்து சாப்பிடப்போகிறேன்...' என்றது புலி.

ஓடிக்கொண்டிருந்த முதியவர், 'கூண்டிலிருந்து விடுவித்து உதவிய என்னையே சாப்பிட விரும்புகிறதே... இது நியாயமா...' என்றார்.

இதைக் கேட்ட நரி, 'ஐயா...நீங்கள் சொல்வதில் உண்மை இல்லை. புலி எவ்வளவு பெரிய உருவமாக இருக்கிறார். இந்த சிறிய கூண்டில் எப்படி அடைபட்டிருக்க முடியும்... அவதுாறாக எதையும் சொல்லாதீர். கூண்டுக்குள் புலி புகுந்திருப்பதைப் பார்த்தால் தான், நீங்கள் சொல்வதை நம்புவேன்...' என்றது.

இதைக் கேட்ட புலிக்கு கடும் கோபம் வந்தது. முதியவரை துரத்தவதை நிறுத்திவிட்டு, அதிவேகமாக குதித்து கூண்டிற்குள் புகுந்தபடி, 'இப்போதாவது நம்புகிறாயா...' என்றது.

வேகமாகச் சென்று கூண்டின் கதவை அடைத்த நரி, 'உன்னை காப்பாற்றிய முதியவரை கொன்று தின்ன முயற்சித்தாய்; நன்றியில்லாத நீ இந்த கூண்டுக்குள்ளேயே இரு...' என்றது.

நரிக்கு நன்றி கூறிய முதியவர் தன் வழியே நடந்தார். கூண்டுக்குள் கதறிக் கொண்டிருந்தது புலி.

தளிர்களே... நரியைப் போல் நிதமானமாக சிந்தித்தால், இக்கட்டான நேரங்களில் சிறப்பாக செயல்படலாம். நல்லவர்களுக்கு உதவலாம்.

கே.என்.ராமகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us