PUBLISHED ON : பிப் 05, 2016

'அய்யய்யோ! இவன் இங்கே வந்து விட்டானே அப்படியானால் என் கதி...' சட்டென்று தன் வீரர்களைக் கூப்பிட்டு, ''யாரோ ஒரு பைத்தியம் என் பெயரைச் சொல்லி ஓடிவருகிறது பாருங்கள்... உடனே, அவனை அடித்து நொறுங்கி கையை, காலை முறித்துப் போடுங்கள்,'' என்று மிக மிடுக்காக உத்தரவிட்டு தன் பரிவாரங்கள் சூழப் புறப்பட்டுப் போய்விட்டான்.
வீரர்களும் மணிகண்டனை அடித்து நொறுக்கினர். மணிகண்டன் வலியால் துடித்தான். பிறகு அப்படியே மயங்கிப் போனான்.
இந்தக் காட்சியை புதரிலிருந்து கண்ட ஒரு நல்ல பாம்பு, சரசரவென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்கு மன்றாடி தன் நினைவின்றிக் கிடந்தவனை அணுகியது.
''நல்ல உள்ளம் படைத்தவரே... அன்று என்னை அந்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றினாய். இப்போது உன்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டுப் போயிருக்கும் உன் அயோக்ய நண்பன், 'டேய்! பாம்பையெல்லாம் படகில் ஏற்றாதேடா, அது உன்னை அப்படியே கடித்துவிடும்' என்று சொன்ன போது, 'இது என் படகு நான் யாரை வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்வேன். மனிதர்களைப் போல் இது செய்நன்றியை மறக்காது. உனக்கு பயமாக இருந்தால் நீ நகர்ந்து உட்கார்' என்று சொல்லி என்னை அன்பாய் வருடிக்கொடுத்தாய். அந்த உதவியை நான் மறந்து விடுவேனா? உன்னைக் காப்பாற்றுவது என் கடமை,'' என்று சொல்லி விட்டு தன் நாக்கால் மணிகண்டனின் முகம், உடல் என்று காயம் பட்ட இடம் அத்தனையும் தடவிக்கொடுக்க...
கண் இமைக்கும் நேரத்தில் அத்தனை காயமும் காணாமல் போய், மணிகண்டனுக்கு முற்றிலுமாக நினைவு திரும்பி விட்டது.
''மணிகண்டா எழுந்திருக்காதே... இன்னும் சிறிது நேரம் இப்படியே படுத்திரு... அன்று நீ எனக்குச் செய்த உதவிக்குக் கைமாறாக என் மந்திர சக்தி அனைத்தையும் உனக்குக் கொடுத்து விடுகிறேன்,'' என்று கூறி அந்த மந்திர சக்தி நிறைந்த பாம்பு, சட்டென்று சில மூலிகைகளைத் தன் சக்தியால் வரவழைத்தது.
''ஜாக்கிரதை இதனைப் பத்திரமாக வைத்துக்கொள். எதிர்காலத்தில் உனக்கு இது மிகத் தேவையாக இருக்கும். உம் எழுந்திரு. உனக்கு எல்லா நன்மைகளும் உண்டா கட்டும்,'' என்று வாழ்த்தியது.
பிறகு, அரண்மனையை நோக்கிப் புறப்பட்டான் மணிகண்டன்.
அரண்மனையில், அரசரின் ஒரே மகள் திடீரென்று உடல் நலம் குன்றிப் படுத்த படுக்கையாகிவிட்டாள். பேசும் திறன், கேட்கும் திறன் அனைத்தையும் இழந்துவிட்டாள்.
சந்திர பிம்பத்திற்கு இணையாக இருந்த அவளது முகமெல்லாம் திட்டுத் திட்டாய் ஏதோ கறும்புள்ளிகள். கை, காலும் லேசாக சுருங்க ஆரம்பித்து விட்டது.
திறமை வாய்ந்த அரண்மனை வைத்தியர்கள் அனைவரும் இனி அரசகுமாரி பிழைப்பது அரிது என்று கைவிரித்து விட்டனர்.
அரசர் தன் மகளின் நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார்.
பிறகு ஒரு அறிவிப்பு செய்தார்.
''தன் மகளை, பழைய வசீகரத் தோற்றத்துடன் நடமாட வைப்பவர்களுக்கு அளப்பற்ற செல்வத்தையும், என் மகளையும் தருவேன்!'' என்றார்.
எண்ணற்ற மனிதர்கள் இளவரசியை குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்தனர். அனைவரும் செயலற்றுப் போய் திரும்பி விட்டனர்.
இந்த அறிவிப்பைப் படித்த மணிகண்டன் அங்கிருந்த காவல்காரரிடம், ''என்னை அரசரிடம் அழைத்துச் செல்லுங்கள்,'' என்றான்.
அவரும் அவனை அழைத்துச் சென்றார்.
''அரசே! உங்கள் மகளை என்னால் குணப்படுத்த முடியும்,'' என்றான் மணிகண்டன்.
'ஊஹூம்! எத்தனை பெரிய, பெரிய வைத்தியர்கள் எல்லாம் கை விரித்து விட்ட பின்னர், உன்னால் என்ன செய்துவிட முடியும்!' என்று உள்ளூர எண்ணினார்.
''சரி எதற்கும் பார்க்கலாம்!'' என்று சொல்லி அவனை அரசகுமாரி படுத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அறைக்குள் சென்றவன் பாம்பு கொடுத்த மூலிகைகளை எடுத்து, ''அரசே! இதனை அரசகுமாரியின் உடல் முழுவதும் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும். மூன்று முறை தலை முதல் கால் வரை அழுத்தித் தேய்த்தால் போதும். உடனே இளவரசி பூரண குணமடைந்து விடுவார்,'' என்றான்.
முற்றிலும் நம்பிக்கை இழந்த அரசன், 'போகட்டும் மருந்து, கஷாயம் என்ற தொந்தரவு ஏதுமின்றி இந்த மூலிகையால் தானே உடலில் தேய்க்கச் சொல்லுகிறான். அதையும் செய்து பார்த்து விடலாம்' என்று எண்ணியவர், உடனே தாதிகளைக் கூப்பிட்டு மணிகண்டன் சொன்னபடி செய்ய சொன்னார்.
அவர்களும் அப்படியே செய்தனர்.
சிறிது நேரம் சென்றதும், தூக்கத்தில் இருந்து எழுபவளைப் போல இளவரசி புத்தம் புது மலராக எழுந்து உட்கார்ந்து மிகவும் கலகலப்பாக தன் தந்தையுடன் பேச ஆரம்பித்தாள்.
அரசரின் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது?
''மணிகண்டா! உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அனைத்து வைத்தியங்களாலும் கைவிடப்பட்ட என் மகளை இப்படி ஒரே நிமிடத்தில் உயிர்ப் பித்து விட்டாயே... இன்றிலிருந்து நீ என் அரண்மனை வாசி... என் மகள் விருப்பப் பட்டால் உனக்கு அவளையே திருமணம் செய்து வைக்கிறேன்,'' என்று கூறினார்.
இவை அனைத்தையும் கேள்விப்பட்ட அந்த துரோகி கோபாலுக்கு பயம் பிடித்துக் கொண்டது. 'தன்னைப் பற்றி மன்னரிடம் வத்திவைத்து விட்டால் அப்புறம் தன் கதி? மேலும், மணிகண்டன் இங்கு இருக்கும் வரை அவன் கண்ணில் படாமல் இருக்க வேண்டும்...' என்று தீர்மானித்தான்.
அன்று தனிமையில் அரசரைச் சந்தித்தவன்... ''அரசே! அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இவன் படிப்பறிவு இல்லாதவன். இவன் கையில் ஏதோ மந்திரசக்தி வாய்ந்த மூலிகை இருக்கிறது என்பதற்காக உங்கள் மகளை இவனுக்கு மணம் முடித்துக் கொடுப்பதா என்ன?
''இதனைப் போன்ற மூலிகை இன்னும் பலரிடம் கூட இருக்கலாம். இவன் அதிர்ஷ்டம் இவன் முந்திக் கொண்டு விட்டான். இவன் நம் அரசகுமாரிக்கு ஏற்றவனா என்பதைத் தீர்மானிக்க இவனுக்கு மற்றுமொறு சோதனையை வைக்கலாமே,'' என்றான்.
''உம்... நீ சொல்வதும் சரிதான்... இவனது தகுதியைச் சோதிக்க நீ தான் வேறு ஏதேனும் யோசனை கூற வேண்டும்,'' என்றார்.
கோபாலின் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும். மறுநாள், மணிகண்டனை அரசர் கூப்பிட்டார்.
''மணிகண்டா! நீ ஒரு சாதாரண கூலித் தொழிலாளி. உனக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் முன் நீ அவளுக்கு எவ்விதத்திலேனும் ஏற்றவனா என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?
''நாளைக் காலை ஆறு மணிக்கு இங்கே வரவேண்டும். உன்னிடம் ஒரு மரப்பெட்டி கொடுக்கப்படும். அதில் ஆறு கிலோ உமியுடன், ஆறு கிலோ எள் கலந்து இருக்கும். சூரியன் உச்சி வானத்தைத் தொடும் முன் நீ அந்த எள்ளை உமியிலிருந்து பிரித்து தனித்தனியே வைத்து விடவேண்டும். சரியா?'' என்றார்.
இதைக் கேட்டதும், அப்படியே சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டான் மணிகண்டன்.
இது எப்படி சாத்தியம். அன்று காலை நேரமாதலால் நிறைய பறவைகள் அங்கும், இங்கும் பறந்து கொண்டிருக்க...
சாரி சாரியாக எறும்புகள் உணவைச் சேர்ப்பதில் முனைந்திருக்க... அங்கே மணிகண்டன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தது.
''ஓ! அன்று நாம் அனைவரும் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது நம் அனைவரையும் தன் படகில் ஏற்றி வந்து நமக்கு உயிர்ப்பிச்சை அளித்தவர் அல்லவா இவர்? இவர் ஏன் இப்படிச் சோர்வாக உட்கார்ந்திருக்கிறார்,'' என்று மிக அக்கறையோடு அவனை அணுகி பறவைகள் விபரம் கேட்டன.
அரசர் தனக்கு இட்ட சோதனையைப் பற்றி சொன்னவுடன், ''அட, இதற்காகவா இப்படி கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் எங்களுக்கு உயிர்ப்பிச்சை அளித்தீர்கள். அதனை நாங்கள் மறந்து விடுவோமா? கவலையை விடுங்கள். இதோ நாங்கள் அனைவருமாகச் சேர்ந்து இந்த வேலையை மிக விரைவாகச் செய்து முடித்து விடுகிறோம்,'' என்று சொல்லி எள்ளையும், உமியையும் மிக விரைவிலேயே பிரித்து எடுத்து வைத்துவிட்டன.
சூரியன் மேல் வானத்தைத் தொடும்போது நான் வருவேன்... அதற்குள் இந்த வேலையை முடித்து விட வேண்டும் என்று சொன்ன அரசன், 'அவன் என்ன செய்கிறான்' என்பதைப் பார்க்க வந்தவருக்கு ஒரே ஆச்சரியம். இரண்டே மணிநேரத்தில் வேலையை முடித்திருந்தான்.
''மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதே,'' என்று அவனை பாராட்டினார்.
இதைக் கேட்ட கோபாலுக்கு ஆத்திரம் தான் வந்தது.
''அரசே! அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடாதீர்கள். இன்னும் ஒரு சோதனை வைக்கலாம். அதில் அவன் வெற்றியடைந்து விடுகிறானா பார்க்கலாம்,'' என்றான்.
அதற்குள் அங்கு வந்த இளவரசி, ''தந்தையே என் அழகை இழந்து உயிரை இழக்க இருந்த என்னை காப்பாற்றி, என் அழகை திரும்பக் கொடுத்தவர் இவர். இவருக்கு அரச பரம்பரையினர் பழக்க வழக்கங்களை கற்றுத் கொடுத்தால் போதும், திறமைசாலியாகி விடுவார். அதை விடுத்து... மாற்றி, மாற்றி போட்டி வைப்பது தவறு. உடனே, எங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்!'' என்றாள்.
உடனே அரசரும் புத்தி தெளித்து மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டார்.
''இந்த அபூர்வ சக்திகள் தங்களுக்கு எப்படி கிடைத்தது,'' என்றார்.
எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான் மணிகண்டன்.
கோபாலின் சுயரூபம் தெரிந்து அரசரை ஏமாற்ற நினைத்த அவனை சுண்ணாம்புக் காளவாயில் இட்டு கொளுத்தினர்.
இளவரசியுடனும் தன் அம்மாவுடனும் இன்பமாக வாழ்ந்தான் மணிகண்டன்.
முற்றும்.
சாரதா விஸ்வநாதன்
