
நீலமேகம் பெரிய பணக்காரன். இளகிய மனம் படைத்தவன். பசி என்று யாராவது வந்து விட்டால் போதும், அவரை வீட்டினுள்ளே அழைத்து, வெள்ளித் தட்டில் உணவு பரிமாறுவான்.
ஒருநாள் இரவு -
பசியோடு அலைந்து திரிந்த நாய் ஒன்று எங்கும் உணவு கிடைக்காததால், நீலமேகத்தின் வீட்டு வாசலில் தற்செயலாக வந்து படுத்துக் கொண்டது.
அதை கவனித்த நீலமேகம், ஒரு வெள்ளித் தட்டில் சாதம் எடுத்து வந்து அதற்குக் கொடுத்தான். நாயும் அவனை நன்றியோடு பார்த்துவிட்டு சாதத்தை ஆவலோடு உண்ணத் துவங்கியது.
அப்போது, ஒரு பிச்சைக்காரன் அங்கே வந்து நின்று, ''ஐயா! பசி உயிர் போகிறது உணவு தாருங்கள்!'' என்றான்.
அவன் வாலிபனாகத்தான் இருந்தான். ஆனால், அழுக்கான கிழிந்த உடைகள் அணிந்திருந்தான்.
அவனைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. அவனை உள்ளே அழைத்து வந்த நீலமேகம், ஒரு பெரிய வெள்ளித் தட்டில் சூடான சாதம் பரிமாறினான்.
''ஐயா! நான் வெளியூர்க்காரன். வேலை தேடி இந்த ஊருக்கு வந்தேன்; வேலை எதுவும் கிடைக்கவில்லை; கையில் காசும் இல்லை,'' என்றான் அந்த பிச்சைக்கார இளைஞன்.
''முதலில் சாப்பிடு! பின் பேசிக் கொள்ளலாம்,'' என்றான் நீலமேகம்.
இளைஞன் உண்டு முடித்ததும், மனமாற நன்றி சொல்லி புறப்பட்டான்.
''தம்பி! இந்த இரவு நேரத்தில் நீ எங்கே போகப்போகிறாய்? இன்றிரவு இங்கேயே தங்கி ஓய்வெடுத்துக்கொள். விடிந்ததும் போகலாம்!'' என்று தலையணையும், போர்வையும் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான் நீலமேகம்.
இளைஞனும், அவற்றைப் பெற்று, அங்கேயே படுத்தான்.
இரவு உணவை முடித்தவுடன், கூடத்தில் வந்து படுத்துக் கொண்டான் நீலமேகம்.
பிச்சைக்கார இளைஞனுக்கு உறக்கமே வரவில்லை. நெடுநேரம் புரண்டு புரண்டு படுத்தான். அவன் நினைவு முழுவதும் அந்த வெள்ளித் தட்டுக்களையே சுற்றிச் சுற்றி வந்தது.
'அவற்றை திருடிச் சென்று விற்றால் நிறைய பணம் கிடைக்கும்' என்று நினைத்தான். அதற்கு மேல் அவனால் படுத்திருக்க முடியவில்லை. எழுந்து சுற்றிலும் பார்த்தான்.
நீலமேகம் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். இதுதான் சமயம் என்று நினைத்து, மெல்ல எழுந்து, ஓசைப்படாமல் சமையலறைக்குள் சென்று, அங்கிருந்த சில வெள்ளிப் பாத்திரங்களை மூட்டை கட்டி ஓசைப்படாமல் கூடத்திற்கு எடுத்து வந்தான்.
நீலமேகம் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதை மறுபடியும் உறுதிசெய்து வாயிற் கதவை ஓசைப்படாமல் திறந்து வெளியே வந்தான். கதவை மெல்ல இழுத்து அடைத்துவிட்டு, படியில் கால் வைத்த போது, இரவில் உணவு உண்டுவிட்டு அங்கேயே படுத்திருந்த நாய், அவனைப் பார்த்து பலமாகக் குரைத்தது.
அவன் பயந்து ஓட முற்பட்டான். அதற்குள் நாய் பாய்ந்து வந்து, அவனது கிழிந்த வேஷ்டியை கவ்விப் பிடித்தது.
நாய் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த நீலமேகம், கூடத்தில் அந்தப் பிச்சைக்கார இளைஞனைக் காணாது மேலும் திடுக்கிட்டான்.
வாயில் கதவு வேறு லேசாகத் திறந்திருப்பதைப் பார்த்தான். அதே சமயம், வெளியே நாய் குரைக்கும் சத்தமும், அதைத் தொடர்ந்து யாரோ அலறும் சத்தமும் கேட்டது. நீலமேகம் ஓடிச் சென்று கதவைத் திறந்து பார்த்தான்.
அங்கே-
அவன் இரவில் உணவிட்ட நாய், அந்த பிச்சைக்கார இளைஞனை ஓட விடாமல் அவன் காலை கவ்விப் பிடித்திருப்பதையும், அவன் கிலிபிடித்த முகத்தோடு தவிப்பதையும் கவனித்தான்.
அவனுக்கு வினாடியில் எல்லாமே விளங்கி விட்டது. உடனே, ஓடிச் சென்று பிச்சைக்காரன் கையிலிருந்த மூட்டையைப் பிடுங்கி, பிரித்துப் பார்த்தான். அதில் அவனுக்குச் சொந்தமான விலை உயர்ந்த வெள்ளிப் பாத்திரங்கள் இருந்தன.
''அட அயோக்கியப் பயலே! உண்ட வீட்டிலேயே திருட எப்படிடா உனக்கு மனம் வந்தது? நீ எல்லாம் ஒரு மனிதனா? அந்த நாய்க்கு நான் ஒருவேளை உணவுதான் கொடுத்தேன். அந்த வாயில்லாப் பிராணிக்கு இருக்கும் செய்நன்றி, ஆறறிவு படைத்த உனக்கு இல்லாமல் போய்விட்டதே...
''நீயெல்லாம் ஒரு மனிதனே இல்லை. அந்த நன்றியுள்ள நாயுடன் உன்னை ஒப்பிடுவதே தவறு. நீ மகா மகாக் கேவலமானவன்.
''இந்த வெள்ளிப் பாத்திரம் வேண்டுமென்று கேட்டிருந்தால், நானே கொடுத்திருப்பேன். இப்படித் திருடி மனித குலத்தையே கேவலப்படுத்திவிட்டாயே... இதோ! இந்த பாத்திரங்கள்தானே உனக்கு வேண்டும். தாராளமாக எடுத்துச் செல். ஆனால், இனிமேல் திருடாதே. இந்தப் பாத்திரங்களை விற்று நேர்மையாக உழைத்துப் பிழை,'' என்றான் நீலமேகம்.
நீலமேகத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிச்சைக்கார இளைஞன் மேல், சாட்டையடிகளாக விழுந்தன. அவற்றை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
''ஐயா! என்னை மன்னித்துவிடுங்கள். நான் திருடன் இல்லை; பிச்சைக்காரன்தான். ஆனால், இந்த வெள்ளிப் பாத்திரங்களைப் பார்த்ததும் மனம் சபலப்பட்டு விட்டது. என்னை மன்னியுங்கள்.
''இனி நான் எங்கும் திருடமாட்டேன். பாடுபட்டு உழைத்து உண்மையான மனிதனாக வாழ்வேன்; இது சத்தியம். எனக்கு இந்தப் பாத்திரங்கள் வேண்டாம். உங்கள் ஆசீர்வாதத்தை மட்டும் கொடுங்கள்.'' என்று சொல்லி அழுதான் பிச்சைக்கார இளைஞன்.
நீலமேகம் அவனை மன்னித்து, ஆசீர்வதித்தார். அந்த நாயும், சிநேகிதத்துடன் வாலை ஆட்டி அவனுக்கு அன்பை தெரிவித்தது.

