
ஒன்றும் அறியாதவன் போல, ''ஐயா! நான் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன?'' என்று கேட்டான்.
''கூடத்தில் விலை உயர்ந்த பீங்கான் ஜாடிகள் இரண்டு உள்ளன. ஒன்று பெரியது; இன்னொன்று சிறியது; நீ அந்தப் பெரிய ஜாடியை சிறிய ஜாடிக்குள் வைக்க வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய முதல் வேலை,'' என்றார் அவர்.
''இவ்வளவு எளிய வேலையை வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை,'' என்றான் செல்லப்பன்.
கையில் தடி ஒன்றுடன் கூடத்திற்குள் நுழைந்தான். அந்தத் தடியால் பெரிய ஜாடியை ஓங்கி அடித்தான். அப்படியே அந்த ஜாடி உடைந்து நொறுங்கியது.
பதைபதைத்த அவர், ''டேய்! நான் என்ன சொன்னேன்? நீ என்ன செய்கிறாய்? நீ வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் இந்த ஜாடியை வாங்க முடியாது. அதை உடைத்து நொறுக்கி விட்டாயே!'' என்று அலறினார்.
''ஐயா! சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்கச் சொன்னீர்கள். பெரிய ஜாடியை உடைத்து நொறுக்கினால்தான் சிறிய ஜாடியில் வைக்க முடியும். இதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஊரில் உள்ளவர்களை வேண்டுமானால் விசாரித்துப் பாருங்கள், நான் செய்ததுதான் சரி என்பர்,'' என்றான் அவன்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார் பண்ணையார்.
''ஐயா! நீங்கள் சொன்னது போல முதல் வேலையை முடித்து விட்டேன். நான் செய்ய வேண்டிய இரண்டாவது வேலை என்ன?'' என்று பணிவுடன் கேட்டான் செல்லப்பன்.
'உன் திறமையை என்னிடமே காட்டுகிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்' என்று கறுவினார் அவர்.
''அந்த அறைக்குள் நிறைய நெல் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. எல்லா நெல்லும் ஈர நெல். நீ அங்கிருந்து நெல்லை வெளியே எடுத்துச் செல்லக் கூடாது. எல்லா நெல்லையும் காய வைக்க வேண்டும். இதுதான் இரண்டாவது வேலை,'' என்றார்.
''இதுவும் எளிய வேலைதான்,'' என்றான் செல்லப்பன்.
அந்த வீட்டுக் கூரையின் மேல் ஏறினான். கூரையைப் பிரித்துக் கீழே தள்ளத் தொடங்கினான்.
பதறிய அவர், ''டேய்! கூரையைப் பிய்த்து ஏன் எறிகிறாய்? கீழே இறங்கு,'' என்று கத்தினார்.
ஆனால், அவனோ கூரை முழுவதையும் கீழே தள்ளிய பிறகே கீழே இறங்கினான்.
''ஐயா! கூரை முழுவதையும் எடுத்தால்தான் கதிரவன் ஒளி நேராக உள்ளே பாயும்; நெல் காயும். உங்கள் வேலையை முழுமையாக முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் நீங்கள் இறங்கச் சொல்லியும் நான் இறங்கவில்லை,'' என்றான்.
'மாளிகை போன்று இருந்த என் வீடு, இப்போது கூரை இல்லாமல் குட்டிச் சுவரைப் போலக் காட்சி அளிக்கிறதே. இவன் மிகுந்த திறமைசாலியாக இருக்கிறான். நான் சொன்னதைச் செய்கிறான். எனக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்துகிறான். நான் இடும் மூன்றாவது வேலையை எவனாலும் செய்ய முடியாது. இவன் ஏமாற்றம் அடையப் போகிறான்' என்று நினைத்தார் பண்ணையார்.
''ஐயா! நான் செய்ய வேண்டிய மூன்றாவது வேலை என்ன?'' என்று கேட்டான்.
''என் தலையின் எடை என்ன என்று நீ சரியாகச் சொல்ல வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய மூன்றாவது வேலை,'' என்றார்.
''கடினமான வேலை வைப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். இவ்வளவு எளிய வேலை வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை,'' என்றான்.
தோட்டத்திற்குச் சென்றான். அங்கே காய்த்திருந்த பூசணிக் காய்களில் ஒன்றைப் பறித்தான். அதை தூக்கிக் கொண்டு அவரிடம் வந்தான்.
''உங்கள் தலையின் எடையும், இந்தப் பூசணிக் காயின் எடையும் ஒன்றுதான். இம்மியளவும் வேறுபாடு இருக்காது. சரியாக எடை போட்டுப் பார்க்க உங்கள் தராசு இங்கே உள்ளது. இதில் ஒரு தட்டில் பூசணிக்காயை வைக்கிறேன். இன்னொரு தட்டில் உங்கள் தலையை வெட்டி வைக்கிறேன். இரண்டும் சரியாக இருக்கும். அப்படி இல்லாவிட்டால், நீங்கள் எனக்குப் பத்துப் பணம் தர வேண்டாம்,'' என்றான்.
கூர்மையான கத்தி ஒன்றை எடுத்த அவன், ''உங்கள் தலையைக் காட்டுங்கள். வெட்டுகிறேன்,'' என்று அவர் அருகில் வந்தான்.
'ஐயோ! இவனிடம் நன்றாகச் சிக்கிக் கொண்டேனே... என் தலையை வெட்டாமல் விட மாட்டான் போல இருக்கிறதே... என்ன செய்வேன்?' என்று நடுங்கினான் பண்ணையார்.
''இந்த பூசணிக்காயின் எடையும், என் தலையின் எடையும் ஒன்றுதான். என் தலையைத் தராசுத் தட்டில் வைத்து எடை பார்க்க வேண்டாம். சொன்னபடி உனக்குக் கூலியைத் தந்து விடுகிறேன்,'' என்றார் பண்ணையார்
''நீங்கள் சொன்ன வேலையைச் செய்து முடித்தால்தான் பத்துப் பணம் கூலி என்றீர்கள். செய்து முடித்து விட்டே கூலியை வாங்கிக் கொள்கிறேன். உங்கள் தலையைக் காட்டுங்கள்,'' என்றான்.
''என்னை மன்னித்துவிடு, நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். என் தலையை வெட்டாதே,'' என்று கெஞ்சினார்.
''நீங்கள் எத்தனை பேரை இப்படி ஏமாற்றி இருப்பீர்கள். அவர்கள் உள்ளம் என்ன பாடுபட்டு இருக்கும்? அதற்குத் தகுந்த தண்டனை உங்கள் தலையை வெட்டுவதுதான். கொடியவராகிய நீங்கள் சாவதுதான் எல்லாருக்கும் நல்லது,'' என்றான்.
''நான் யார் யாரை ஏமாற்றினேனோ அவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டாகப் பணம் தந்து விடுகிறேன். நீ கேட்கும் பணத்தையும் தருகிறேன். இனி நான் நல்லவனாக நடந்து கொள்வேன். யாருக்கும் துன்பம் தர மாட்டேன். என் மீது இரக்கம் காட்டு,'' என்று அழுது புலம்பினார் பண்ணையார்.
''நீங்கள் ஏமாற்றியவர்களை எல்லாம் அழையுங்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு பங்கு பணம் தாருங்கள். உங்களை உயிருடன் விடுகிறேன்,'' என்றான்.
அவரும் அப்படியே செய்தார். தான் வந்த வேலை முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டான் செல்லப்பன்.
முற்றும்.