PUBLISHED ON : நவ 30, 2019

ஐரோப்பியரான போர்ச்சுகீசியர் கட்டிய ஆலயத்தால் புகழ்பெற்றது, சென்னை, பரங்கிமலை. இங்குள்ள, புனித துாயதோமா உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
விடுமுறையை கழித்த விதம் பற்றி கட்டுரை எழுத சொன்னார் ஆசிரியர் மார்ட்டின். எழுதியவற்றை எங்களையே, மாற்றி மாற்றி திருத்தச் சொன்னார்.
என்னிடம் வந்ததை படித்து சிரித்தேன். பக்கத்திலிருந்தவனும் ஏளனத்தை உதிர்த்தான். இப்படி, கைமாற்றி அலட்சியமாக சிரித்துக் கொண்டிருந்தோம். காரணத்தை கேட்டார் ஆசிரியர்.
அந்த கட்டுரையில், 'என் அப்பா முடி திருத்தும் கடை வைத்துள்ளார். விடுமுறையில் அவருக்கு துணையாக இருந்து, தொழிலை கற்றுக் கொண்டேன்...' என, எழுதியிருந்தான். ஏளனமான சொற்களால் அதை தெரிவித்தோம்.
எழுதியவன் தர்ம சங்கடத்துடன், எழுந்து நின்றான். ஆசிரியர் மிக அமைதியாக, 'கட்டுரை எழுதிய பாபுவின் அற்புத அனுபவத்தை பாராட்டும் வகையில் கைதட்டுங்கள்...' என்றார். புரியாமல் விழித்தோம்.
உடனே, 'விடுமுறையில் எல்லாரும் பெற்றோருக்கு செலவு வைத்துள்ளீர்கள்; பாபு மட்டுமே வருவாய் ஈட்டி தந்துள்ளான். தொழிற்பயிற்சியும் பெற்றுள்ளான். தொழிலில், கீழ்மை என்று எதுவும் இல்லை...' என்றார்.
கேலிபேசிய நாங்கள், தவறை உணர்ந்தோம். 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதை உணர்த்திய ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.
- மல்லிகா குரு, சென்னை.
