PUBLISHED ON : நவ 30, 2019

சுந்தரர் பாடிய, 'கவ்வைகடல்...' என, துவங்கும் தேவாரப் பதிகம் இனிமையானது. இந்த பாடல் பெற்ற திருச்சுழி, திருமேனிநாதர் கோவில் உள்ள மாவட்டம் விருதுநகர். இங்குள்ள ஆசிலாபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2009ல், 5ம் வகுப்பு படித்த போது, நிகழ்ந்த சம்பவம்...
பள்ளி வாசலில் எள்ளு, கடலைமிட்டாய், இடிமாவு, கார அப்பளம் என, தின்பண்டங்கள் விற்பார் வைராக்கியம் பாட்டி. அவரிடம் கடலைமிட்டாய் வாங்கி, தோழியருடன் பகிர்ந்து கொண்டிருந்தேன்.
பலவீனமான நிலையில், 75 வயதான பாட்டி, திடீர் என மயங்கி சாய்ந்தார். செய்வதறியாது திகைத்து ஓடி, தலைமை ஆசிரியரை அழைத்து வந்தேன். அவரது அறிவுரைப்படி மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.
மறுநாள் இறந்து விட்டதாக அறிந்து, மிகவும் துயரம் அடைந்தேன். எந்த வயதிலும், உழைத்து வாழ முடியும் என, நிரூபித்தவரின் மரணம் அதிர்ச்சி தந்தது.
கல்லுாரியில், இளங்கலை படிக்கிறேன். அந்த பாட்டியிடம், சில்லறை மாற்றாக பெற்ற, 1 ரூபாய் நாணயத்தை, நினைவாக வைத்திருக்கிறேன்.
பிறர் கையை எதிர்பார்க்காத வைராக்கியம் தான், வலியில்லாத வாழ்க்கை என்பதை அவரிடம் கற்றுக் கொண்டேன்.
- வே.பிரியா, விருதுநகர்.
