PUBLISHED ON : ஆக 10, 2018

கோவை மாவட்டம், ஓடைநகர் துவக்கப் பள்ளியில், 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. வகுப்பாசிரியை வாணி, 'இரவில் அதிக நேரம் படிப்பதை விட, அதிகாலை, 5:00 மணிக்கு எழுந்து படியுங்கள். துாங்கி எழும்போது, மனம் அமைதியாக இருக்கும்; பாடம், மனதில் நன்கு பதியும்...' என்று அறிவுரை கூறினார்.
'அதிகாலைதான், நன்கு துாக்கம் வருகிறது... அதிக நேரம் துாங்கிவிடுகிறேன்...' என்றேன்.
அது, தவறான நடைமுறை என்று வலியுறுத்தி, 'அதிகாலையில் குளித்து, இறைவனை வணங்கிய பின் படிப்பது மட்டுமின்றி, எந்த வேலை செய்தாலும், சிறப்பாக அமையும். அந்த நாள் முழுவதும், சோம்பலின்றி, சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். இதை அனுபவத்தில் உணர்ந்ததால்தான், 'சோம்பித்திரியேல்...' என அறிவுறுத்தி உள்ளனர்' என்றார் ஆசிரியை.
இப்போது எனக்கு வயது, 68. இன்று வரை, அந்த ஆசிரியை கூறிய அறிவுரையை பின்பற்றி வருகிறேன்.
- பி.லக்ஷ்மி, திருப்பூர்.
