PUBLISHED ON : டிச 29, 2013

தமிழகம்
ஜன., 3: எனக்கு அடுத்து, ஸ்டாலின் இருக்கிறார் என தி.மு.க., தலைவர் கருணாநிதி பேச்சால் பரபரப்பு. இதற்கு 'தி.மு.க., ஒன்றும் சங்கரமடமல்ல' என அழகிரி பதில்.
ஜன., 10: சென்னை பரங்கிமலையில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாலம், இடிந்து விழுந்தது. ஒருவர் பலி.
ஜன., 14: ஈரோடு அருகே பஸ் - மினி வேன் மோதிய விபத்தில் 6 பேர் பலி. 16 பேர் காயம்.
ஜன., 15: தாகம் தீர்த்த வள்ளல்: முல்லை பெரியாறு அணை மூலம், தமிழகத்தின் 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. இயற்கை இடர்பாடு, நிதி சிக்கல் உள்ளிட்ட பல சோதனைகளை கடந்து, தனது சொத்தை விற்று அணையை கட்டியவர் இங்கிலாந்து இன்ஜினியர் பென்னிகுயிக். இவரது சேவையை கவுரவிக்கும் விதமாக, 1.25 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை ஜன., 15ல் முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்.
ஜன., 23:யாரென்று புரிகிறதா! : நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து, சென்சார் போர்டு அனுமதியும் பெற்று திரையிட தயார் நிலையில் இருந்த, 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு, முஸ்லிம் அமைப்புகள் திடீர் எதிர்ப்பு. ஜன., 23ல் படத்தை வெளியிட தமிழக அரசு தடை. இதையடுத்து கமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 'படம் வெளியாகவில்லை எனில், நாட்டை விட்டே வெளியேறுவேன்' என பேட்டியளித்தார். அரசின் தடைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இறுதியில் சில காட்சிகள் நீக்கப்பட்டு பிப்., 7ல், படம் வெளியானது.
இந்தியா
ஜன.2: கற்பழிப்பு சம்பவங்கள் இந்தியாவின் தேசிய பிரச்னையாக இருக்கிறது என ஐ.நா., கருத்து.
ஜன., 3: ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக உர்ஜித் படேல் நியமனம்.
ஜன., 3: இந்திய அறிவியல் காங்கிரசின் 100வது மாநாடு கோல்கட்டாவில் நடந்தது.
* 14வது நிதி ஆணையத்தின் தலைவராக ஒய்.வி.ரெட்டி நியமனம். இவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்.
ஜன.5: இந்தியாவின் முதல் குடல் மாற்று அறுவை சிகிச்சை 'சாப்ட்வேர்' இன்ஜினியருக்கு வெற்றிகரமாக செய்யப்பட்டது.
ஜன.,7: குரோர்பதி நிகழ்ச்சியில் முதல் முறையாக 5 கோடி ரூபாய் பரிசை பஞ்சாப்பை சேர்ந்த இல்லத்தரசி சன்மீட் கவுர் பெற்றார்.
ஜன.,7: உலகின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கியை, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிஸிக்ஸ் (ஐ.ஐ.ஏ.,) வடிவமைத்தது.
ஜன., 8: காஷ்மீரில், பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வந்து, இந்திய ராணுவ வீரர்கள் இருவரின் தலையை துண்டித்து சென்றது.
* இச்சம்பவம் நாடு முழுவதும் எதிரொலித்தது. இதைத்தொடர்ந்து இன்று வரை எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்கின்றன.
* இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ஆந்திராவின் எம்.ஐ.எம்., கட்சி எம்.எல்.ஏ., அக்பரூதின் ஓவாய்சி, நிர்மல் போலீசாரால் கைது.
ஜன., 9: ஜார்க்கண்டின் டால்டன்கஞ்ச் என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 7 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி.
ஜன.,12: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் ரத யாத்திரை நடந்தது.
ஜன.,13: இந்தியாவில் 2வது ஆண்டாக போலியோ பாதிப்பு ஒன்று கூட பதிவாகவில்லை என ஐ.நா., அறிக்கை.
ஜன., 16: பயிரை மேய்ந்த வேலி: அரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆட்சியில் இருந்த போது, 3,206 ஆசிரியர் பணியிட நியமனத்தில் முறைகேடு செய்த வழக்கில் ஜன., 16ல் கைது செய்யப்பட்டார். அவருடன் மகன் அஜய் சிங் சவுதாலாவும் கைதானார். இருவருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஜன.,17: மானிய விலையில் வழங்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6லிருந்து, 9ஆக மத்திய அரசு உயர்த்தியது.
ஜன.,18: ஜார்கண்ட்டில் அர்ஜூன் முண்டோ தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்.
ஜன.,19: காங்., கட்சியின் துணை தலைவராக ராகுல் நியமனம்.
ஜன.,20: கோல்கட்டாவில், சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் திறப்பு.
ஜன.,24: ஆண்டுதோறும் ஜன., 24ம் தேதி பெண் குழந்தைகள் தினமாக மத்திய அரசு அறிவிப்பு.
* சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவுக்குப்பின், தலைவராக உத்தவ் தாக்கரே நியமனம்.
* டில்லியில் நடந்த 64வது இந்திய குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பூடான் மன்னர் ஜிக்மே கேசா நாம்கி பங்கேற்பு.
* சமூக சேவை, கலை , இலக்கியம், தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 'பத்ம' விருதுகள் அறிவிப்பு. எஸ்.ஜானகி, ஸ்ரீதேவி, சிவதாணுப் பிள்ளை உள்ளிட்ட 108 பேர் தேர்வு. எஸ்.ஜானகி, விருது ஏற்க மறுப்பு.
உலகம்
ஜன.,1: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கடேஷ் மன்னாருக்கு கனடாவின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் கனடா' விருது வழங்கப்பட்டது.
ஜன.,2: இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் ஏற்கனவே செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, அணுசக்தி மையங்களின் பட்டியலை பரிமாறிக் கொண்டன.
* நேபாளத்தில் வீட்டுக்கு, 2 மரங்கள் கட்டாயம் வளர்க்க வேண்டும் என, அந்நாட்டு அரசு உத்தரவு.
ஜன., 3: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமி பேரா, அமெரிக்க பார்லிமென்ட்டில் எம்.பி., ஆக பதவியேற்பு.
ஜன., 4: மரணத்தை வென்ற மலாலா: தலிபான்களால் சுடப்பட்டு, இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா, ஜன., 4ல் 'டிஸ்சார்ஜ்' ஆனார். இவருக்கு இந்தாண்டு உலகின் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையும் ஒன்று.
ஜன., 5: அயர்லாந்து நாட்டின் சர்வதேச அமைதி விருது, பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு வழங்கப்பட்டது.
ஜன.,7: இணையதளம் ஆண்டுக்கு 830 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறது என ஆராய்ச்சியில் தகவல்.
ஜன.,16: ஊழல் வழக்கில் பாக்., பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் கைது. பதவியும் பறி போனது.
* 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர்கள் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தனர் என ஆய்வில் தகவல்.
ஜன.,18: சீன எழுத்தாளர் ஜாவோ ஜியாங் தமிழில் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார்.
ஜன., 27: பிரேசிலில் நைட் கிளப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 245 பேர் பலி.
'நியூஸ் ரேங்க்'
1. மீண்டும் ஒபாமா: அமெரிக்காவின் அதிபராக 2009ல் முதன்முறையாக பதவியேற்ற ஒபாமா, 2012 டிசம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற, ஜன., 21ல் 2வது முறையாக அதிபராக பதவியேற்றார்.
2. 'கை'யை மறைக்குமா: பா.ஜ., தேசிய தலைவராக இருந்த நிதின் கட்காரியின் பதவிக்காலம் முடிந்ததால், புதிய தலைவராக ராஜ்நாத் சிங் ஜன., 23ல் தேர்வு. இவர் ஏற்கனவே ஒருமுறை தலைவராக இருந்துள்ளார்.
3. முதல் சுரங்கப்பாதை: உலகில் முதன்முதலாக இங்கிலாந்தில் சுரங்கப்பாதை (பாகர் ஸ்ட்ரீட்) அமைக்கப்பட்டது. இது பல நாடுகளுக்கு முன்னோடியாக அமைந்தது. இது ஜன., 9ல் 150 ஆண்டுகளை நிறைவு செய்தது.
விளையாட்டு
ஜன. 3: வெள்ளி விழா: ஒருநாள் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி 25 ஆண்டுகள் ஆனதை, பெங்கால் கிரிக்கெட் சங்கம் கொண்டாடியது. இதற்காக கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த விழாவில் கவாஸ்கர், கபில்தேவ், வெங்கசர்க்கார், வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா உள்ளிட்ட இரு நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவுரவிக்கப்பட்டனர். இவர்கள் திறந்த 'ஜீப்பில்' மைதானத்தை வலம் வந்தனர்.
ஜன. 6: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றியது.
* சென்னை ஓபன் டென்னிஸ் பைனலில், ஸ்பெயினின் ராபர்டோவை வீழ்த்திய, செர்பியாவின் டிப்சரிவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
* சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையரில், சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, பிரான்சின் பெனாய்ட் பேரி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
* கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி ஓய்வு.
ஜன. 19: இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடந்த ஒருநாள் போட்டியில், அதிவேகமாக (93 இன்னிங்ஸ்) 4000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் விராத் கோஹ்லி (96 போட்டி, 4028 ரன்கள்).
ஜன. 26: ஆஸ்திரேலிய ஓபன் பைனலில், சீனாவின் லி நாவை வீழ்த்திய பெலாரசின் அசரன்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜன. 27: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 3-2 என கைப்பற்றியது.
ஜன. 27: ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பைனலில், இங்கிலாந்தின் முர்ரேவை வீழ்த்திய செர்பியாவின் ஜோகோவிச், சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜன. 28: சவுராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில் வென்ற மும்பை அணி, 40வது முறையாக சாம்பியன்.
