PUBLISHED ON : டிச 29, 2013

தமிழகம்
ஏப்., 1: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், மாநிலங்கள் வாரியாக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அமல். இதனால் தமிழகத்தில் ஒருநாள் ஊதியம் 148 ரூபாயாக உயர்வு.
ஏப்., 2: இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, நடிகர் சங்கம் சார்பில், சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதம்.
ஏப்., 3: இலங்கை பிரச்னை காரணமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் திறக்கப்பட்டன.
ஏப்., 6: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதிநெருக்கடி மற்றும் முறைகேடுகளுக்கு காரணமாக இருந்ததாக, அதன் துணைவேந்தர் ராமநாதன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ஏப்., 8: தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் 2 நாள் சஸ்பெண்ட்.
ஏப்., 15: தமிழகத்தில் கடலில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 45 நாள் தடைக்காலம் நிறைவு.
ஏப்., 17: வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் விதமாக, 1 கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்.
ஏப்., 18: ராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் நாகையில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவிப்பு.
ஏப்., 27: மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜூ, மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்.
இந்தியா
ஏப்., 7: டில்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது.
* அணு ஆயுதங்களை தாங்கிக்கொண்டு 2 ஆயிரம் கி.மீ., தூரம் வரை சென்று தாக்கும் அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை.
ஏப்., 14: டில்லியில் மாலத்தீவு பாதுகாப்பு துறை அமைச்சர் முகமது நஷீம், பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி சந்திப்பு.
ஏப்., 15: காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில், சீன ராணுவம் 10 கி.மீ., உள்ளே ஊடுருவியது. இந்த ஆண்டு அதிக முறை சீனா அத்துமீறியது.
ஏப்., 18: 2010ல் புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கில், முக்கிய குற்றவாளியான இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதி ஹிமாயத் அலி பெய்க்கிற்கு புனே கோர்ட் மரண தண்டனை வழங்கியது.
ஏப்., 19: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
ஏப்., 26: ஒடிசாவின் ராயகடாவில், மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலி.
ஏப்., 26: மத்திய உள்துறை செயலராக, ஆர்.கே.சிங்கிற்கு பதிலாக, அனில் கோஸ்வாமி நியமனம்.
ஏப்., 27: காஷ்மீர் கவர்னராக என்.என். வோஹ்ரா மீண்டும் நியமனம்.
ஏப்., 29: விவசாயிகள் பயிர்க்கடன் உள்ளிட்ட மானியங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கான, 'கிரஷி கார்டை' அறிமுகப்படுத்தியது.
உலகம்
ஏப்., 1: ஜப்பானுக்கு சொந்தமான ஷெனக்கு தீவில், 3 சீனர்கள் அத்துமீறி வந்ததாக ஜப்பான் குற்றச்சாட்டு.
ஏப்., 2: ஓரின சேர்க்கை திருமணத்துக்கு, உருகுவே அரசு அனுமதி.
ஏப்., 5: இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில், 6 பேர் கொண்ட இந்திய எம்.பி.,க்கள் குழு இலங்கைக்கு பயணம். கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
ஏப்., 6: இந்தோனேசியாவில் ரிக்டரில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம்.
ஏப்., 7: அனுமதி இல்லாத கட்டடம்: மகாராஷ்டிராவின் தானே நகரில், 7 மாடி கட்டடப்பணி நடந்தது. ஏப்., 7ல் திடீரென இக்கட்டடம் இடிந்து விழுந்ததில் 74 பேர் பலியாகினர். போலீசார் விசாரணையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. இதையடுத்து கட்டட உரிமையாளர்கள், சட்ட விரோதமாக அனுமதியளித்த அரசு அதிகாரிகள் என 11 பேர் கைதாகினர்.
ஏப்., 17: ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 என பதிவானது. இதில் 50 பேர் பலியாகினர்.
ஏப்., 18: நினைத்ததெல்லம் நடந்துவிட்டால்: ராணுவ புரட்சி மூலம் பாகிஸ்தானின் அதிபராகிய பர்வேஷ் முஷாரப், 2008 தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து லண்டனில் தஞ்சம் புகுந்தார். ஆட்சியில் இருந்த போது, 50க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் மற்றும் கைது செய்தது உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது தொடரப்பட்டது. இந்நிலையில் 2013 தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரலாம் என பேராசையோடு பாக்., வந்த முஷாரப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் தேர்தலில் போட்டியிட தடை விதித்ததோடு, ஏப்., 18ல் கைதும் செய்யப்பட்டார்.
ஏப்., 20: சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிசுவான் மாகாணத்தில் ரிக்டர் அளவில் 7 என நிலநடுக்கம் ஏற்பட்டது. 200 பேர் பலி. ஆயிரம் பேர் காயம்.
ஏப்., 21: ஈராக்கை விட்டு அமெரிக்க படை 2011 இறுதியில் வெளியேறியது. இதன்பின் முதன் முதலாக இங்கு தேர்தல் நடந்தது.
ஏப்., 21: நேபாள 'டிவி'யில் 'டாக் ஷோ' நிகழ்ச்சியில் ஒருவர் தொடர்ந்து 62 மணி, 12 நிமிடங்கள் பேசி சாதனை.
ஏப்., 22: நைஜீரியாவில் ராணுவத்துக்கும், பிரிவினைவாதிகளுக்கு இடையே நடந்த சண்டையில் 185 பேர் பலி.
ஏப்., 26: 100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய டைட்டானிக் கப்பலில், வயலின் இசைத்த வைலேஸ் ஹார்ட்லே என்பவர் எழுதிய கடிதம், 75 லட்சத்துக்கு ஏலம்.
ஏப்., 22: வங்கதேச அதிபராக அப்துல் ஹமீது போட்டியின்றி தேர்வு.
ஏப்., 23: ஓரின சேர்க்கை திருமணத்துக்கு, 14வது நாடாக பிரான்ஸ் அரசு அனுமதி.
ஏப்., 24: மோசமான விபத்து: வங்கதேசத்தின், தாகா நகரில் இயங்கி வந்த 'ராணா பிளாசா' என்ற 8 அடுக்கு வணிக வளாகம் ஏப்., 24ல் இடிந்து விழுந்தது. இங்கு அதிகளவிலான கடைகள், அலுவலகங்கள் இருந்ததால், ஊழியர்கள், பொதுமக்கள் என 1,200 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 2,500 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கட்டட விபத்தில் இவ்வளவு பெரிய இழப்பு, வரலாற்றில் இதற்கு முன் ஏற்பட்டதில்லை.
ஏப்., 25: வட கிழக்கு ஆசிய நாடுகளின் 22வது மாநாடு புரூனேயில் நடந்தது.
ஏப்., 30: நெதர்லாந்து மன்னராக, வில்லெம் அலெக்சாண்டர் முடி சூடினார். அந்நாட்டின் அரசியாக 33 ஆண்டுகளாக அரியணையில் இருந்த பீட்ரிக்ஸ், உடல் நிலை காரணமாக, தனது மகனுக்கு முடி சூட்டினார்.
* விளையாட்டிலும் பயங்கரவாதமா: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 1897 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாரத்தான் ஓட்டப்போட்டியில், 2 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 3 பேர் பலியாகினர். 264 பேர் காயமடைந்தனர்.
'நியூஸ் ரேங்க்'
1. மதுரையில் 'சேட்டிலைட் சிட்டி': மதுரை விமானநிலையம் அருகே, தோப்பூரில் 586 ஏக்கரில், 'சேட்டிலைட் சிட்டி' அமைக்கப்படும் என ஏப்., 4ல் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு. இதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
2. வரவேற்கத்தக்க தீர்ப்பு: புற்று நோய்க்கான மருந்துக்கு, இந்தியாவில் காப்புரிமை கோரி, சுவிட்சர்லாந்தின் மருந்து தயாரிப்பு நிறுவனம், 'நோவார்டிஸ்' தாக்கல் செய்த மனுவை, ஏப்., 1ல் சுப்ரீம் கோர்ட், தள்ளுபடி செய்தது.
3. பா.ஜ., அலுவலகம் தப்பியது: ஏப்., 17ல், பெங்களூருவின் மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ள கர்நாடக பா.ஜ., தலைமை அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் 16 பேர் காயம்.
விளையாட்டு
ஏப்.,7: தென் கொரியாவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் பைனலில் இந்தியாவின் ஹீனா சித்து 8வது இடம் பிடித்தார்.
* சிகரத்தை தொட்ட டென்னிஸ்: பெங்களூருவில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'ஆசிய-ஓசியானா குரூப்-1' முதல் சுற்றுக்கான 'பிளே ஆப்' போட்டியில் இந்தியா, இந்தோனேஷிய அணிகள் மோதின. அனுபவ லியாண்டர் பயஸ், இளம் சோம்தேவ் , யூகி பாம்ப்ரி, சனம் சிங் அசத்த, இந்திய அணி 5-0 என முழுமையாக வென்றது. இம்மகிழ்ச்சியில் மூவர்ணக்கொடியுடன் இந்திய அணியினர்.
ஏப்., 20: சச்சினின் மெழுகுச்சிலை ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் திறக்கப்பட்டது.
