PUBLISHED ON : மார் 04, 2018

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்வோர், மூன்று சாகசங்களை விரும்புவர். ஒன்று, திறந்த வாகனத்தில் சென்று வனவிலங்குகளை காண்பது... இரண்டாவது, 'பன்ஜி ஜம்பிங்' எனப்படும், உயரமான பாலத்திலிருந்து குதித்து, சாகசம் புரிவது!
மூன்றாவது, ஆழ்கடல் பயணம் மற்றும் நீர் விளையாட்டுகள்.
நைஸ்னா என்ற நகரத்திலிருந்து, இரண்டு மணி நேரம் காரில் பயணம் செய்தால், புளவ்கிரான்ஸ் என்ற இடத்தில், 'பன்ஜி ஜம்பிங்' செய்ய வசதி உள்ளது. 'ரேஸ் அட்ரினலின்' என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள, பன்ஜி ஜம்பிங் தான், உலகிலேயே மிக உயரமானது.
புளவ்கிரான்ஸ் நதியின் மேல், இரண்டு மலைக்குன்றுகளை இணைத்து, 450 மீட்டர் நீளம், 252 மீ., உயரத்தில் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் பாலத்தின் மீது வாகனங்கள் செல்கின்றன. அதன் கீழ் நடுப்பகுதியில் தான், பன்ஜி ஜம்பிங் சாகசம் நடைபெறுகிறது.
'ரேஸ் அட்ரினலின்' என்ற அந்நிறுவனம், 1996 முதல் இந்த சாகச விளையாட்டில் ஆர்வலர்களை ஈடுபடுத்தி வருகிறது. ஒருவர் கூட விபத்தில் சிக்கியதில்லை; அந்த அளவுக்கு, 100 சதவீத பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குதிக்க வைக்கின்றனர்.
ஒரு முறை குதிக்க, நம் இந்திய ரூபாய் மதிப்பில், ஏழாயிரமும், இரண்டாவது முறை குதிக்க, ஐயாயிரம் ரூபாயும் வசூலிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தம், இதய நோய், எலும்பு பிரச்னை உள்ளவர்களை குதிக்க அனுமதிப்பதில்லை. அதிகபட்சம், 120 கிலோ எடை, குறைந்தபட்சம், 50 கிலோ எடை இருப்பவர்களை மட்டுமே குதிக்க அனுமதிக்கின்றனர்.
பாலத்தை தாண்டி, பக்கவாட்டில் செயல்படும் அலுவலகத்தில் நம் பெயர் மற்றும் முகவரி போன்றவற்றை தெரிவித்து, பணத்தை செலுத்தியதும், உடல் எடையை கணக்கிட்டு, அதற்கு ஏற்ற, தடிமனான பிளாஸ்டிக் கயிறுகளை உடலில் பிணைத்து, அவற்றை இரும்பு கிளாம்புகளுடன் இணைக்கின்றனர்.
இரு மலைகளுக்கு இடையே, 'பன்ஜி ஜம்பிங்' சாகச விளையாட்டில் கலந்துகொள்வதற்கான முன்னேற்பாடுகளை செய்த பின், பாலத்தின் கீழே, 500 மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இரும்பு பாலத்தில் நடந்து, நடுப்பகுதியை அடைய வேண்டும்.
இரும்பு பாலத்தின் கீழ், அதல பாதாளம். பாலத்தின் மீது நடந்து செல்லும்போது, கால் வைக்கும் இடத்தில், அதிக இடைவெளி உள்ள இரும்பு பிரேம் போடப்பட்டுள்ளது. நடந்தபடி கீழே பார்த்தால் தலை சுற்றும்.
ஒவ்வொருவராக குதிக்க அனுமதிக்கப் படுகின்றனர். அதற்கு முன், உடலில் சுற்றப்பட்டுள்ள பிளாஸ்டிக் கயிறு மற்றும் கிளாம்புகளின் உறுதி தன்மையை சோதிக்கின்றனர். பின், கால்களில் பிளாஸ்டிக் கயிறுகளை பிணைத்து, எந்த சூழ்நிலையிலும் அவிழாமல் இருக்கும் வகையில், இரும்பு கிளாம்புகளுடன் அதை பிணைக்கின்றனர்.
இதை, ஒவ்வொரு கட்டமாக கேமராவில் படம் எடுத்து, அதை வேறு ஒரு இடத்தில் இருப்பவர் ஆராய்ந்து பார்த்து, 'ஓகே' சொன்ன பிறகே, குதிக்க வைக்கின்றனர்.
மிகப் பெரிய சாகசமாக கருதப்படுவதை படம் எடுக்க, பாலத்திற்கு வெளிப்புறத்தில், வனம் மற்றும் மலையில் ஆங்காங்கே கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
'குதிக்க தயார்' என, ஆர்வமாக வந்தவர்களில் சிலர், அந்த இடத்திற்கு வந்ததும், 'உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கிறது...' எனக் கூறி, வெளியேறுகின்றனர்; சிலர் பயத்தில் முகம் வெளிறி, அதிகமாக வியர்த்து விறுவிறுக்கின்றனர்.
குதிப்பதற்காக, பாலத்தின் விளிம்பை அடைந்த போது, படபடப்பாகி விட்டது. கால்களை கட்டி, அதில், ஸ்பிரிங் கயிற்றை இணைத்ததும் நடக்க முடியாது. இரு புறமும் இருவர் நம்மை விளிம்பு வரை நகர்த்தி செல்கின்றனர். விளிம்பை தொட்டதும், 'நேராக பாருங்கள்; கையை மேலே துாக்குங்கள்...' என்கின்றனர். அவ்வாறு செய்ததும், பிடித்து கீழே தள்ளி விடுகின்றனர்.
பாலத்தின் மேலிருந்து கீழே, 30 - 45 வினாடிகள் தலைகீழாக பயணித்து, காலில் கட்டியிருந்த ஸ்பிரிங் கயிறு நம்மை மேல் நோக்கி இழுக்கும் போது தான், கண்கள் திறக்கின்றன.
நான் கண்ணை திறந்து பார்த்த போது, எதிரே இருந்த மலை முகட்டில், பிரமாண்ட வினாயகர் சிலை இருப்பது போல தோன்றியது. 'ஆண்டவா... நன்றி; இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய, பாஸுக்கு நன்றி...' என, மனதார நினைத்து, மேலும், கீழுமாக கயிற்றில் தலைகீழாக தொங்கி, உடல் மேலே, கீழே போவதை அனுபவித்தேன்.
ஒன்றிரண்டு நிமிடங்களில், 'சுந்தரம், சுந்தரம்...' என, அழைத்தபடி ஒருவர் கயிற்றில் இறங்கி, என் அருகே வந்து, என் மார்பில் தொங்கிய கிளாம்பில், கயிற்றை சொருகி, மேலே துாக்குமாறு, பாலத்தில் இருந்தவருக்கு சைகை செய்தார்.
அதன் படி, பாலத்தின் மேல் இருந்து இயந்திரம் மூலம் துாக்கப்பட, பன்ஜி ஜம்பிங் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
'அடேங்கப்பா... இவ்வளவு உயரத்திலிருந்து குதித்து உயிருடன் வந்து விட்டோமே...' என, நினைத்த பொழுதில் உடலில், 'அட்ரினலின்' திரவம் சுரந்து, என்னை ஆட்டம் போட வைத்தது. என்னைப் போலவே, குதித்து முடித்து வெற்றிகரமாக மேலே ஏறியவர்களுடன், ஆங்கில பாடலுக்கு ஆட்டம் போட்டேன்.
பத்து நாட்கள் சுற்றுப்பயணம் என கூறினாலும், ௧௩ நாட்கள் ஆனது. தென் ஆப்ரிக்காவை விட்டு வர மனம் வருந்தியது.
இப்படி பல சாகசங்களுடன் தென் ஆப்ரிக்கா பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. பயண அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து, அசை போட்டபடி ஊர் வந்து சேர்ந்தோம்.
இந்தியர்கள்!
தென் ஆப்ரிக்காவின், டர்பன் நகரில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். அனைத்து நகரங்களிலும், சொற்ப எண்ணிக்கையில் இருந்தாலும் நல்ல நிலைமையில் உள்ளனர், இந்தியர்கள். ஜார்ஜ் என்ற குட்டி நகரில், 'மீனாச்சி ஓட்டல்' என்ற பெயரில், உணவகம் நடத்தி வரும், 45 வயது தம்பதி, மது வகைகளுடன், இந்திய உணவை வழங்குகின்றனர்.
அந்த ஓட்டலை நடத்தி வரும் மீனாட்சி என்பவர், ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்; எனினும், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தென் ஆப்ரிக்கா தான்.
அவரின் கணவரும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் தான். அவர், தன் தாத்தா, சென்னையை சேர்ந்த, முனுசாமி நாயுடு என்கிறார்.
அது போல, அனைத்து நகரங்களிலும், இந்தியர்கள் நடத்தும் ஓட்டல்களை காண முடிகிறது. அங்குள்ள இந்தியர்கள், அந்த ஓட்டல்களுக்கு அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
அந்த ஓட்டல்களில், மிகப் பெரிய அளவில் மதுபான ஷோ ரூம் உள்ளதை பார்க்கும் போது, பிரமிப்பாக உள்ளது.
'வெட் டவல்' வரவேற்பு!
சாதாரண ஓட்டலாக இருந்தாலும், நட்சத்திர ஓட்டலாக இருந்தாலும், தெருவோர உணவகங்களாக இருந்தாலும், மதிய நேரத்தில் சென்றால், 'வெட் டவல்' எனப்படும், நறுமணம் நிறைந்த, குளிர்ந்த நீரில் நனைத்த, சில்லென்ற டவலை தந்து, 'வெல்கம் டிரிங்க்' தருகின்றனர்.
அந்த குளிர்ச்சியான சிறிய டவலால் முகம், கழுத்து, கைகளை துடைத்ததுமே, புத்துணர்ச்சி பொத்துக்கொண்டு வருகிறது.
வெயில் நிறைந்த நம் ஊர்களிலும், வெயிலில் அலைந்து வருவோருக்கு, குளிர்ச்சியான நறுமண டவல் கொடுத்து, வரவேற்கலாம்.
- முற்றும் -
ஏ.மீனாட்சிசுந்தரம்
