PUBLISHED ON : மார் 04, 2018

ஹார்டுவர்டு பல்கலையில் ஜல்லிக்கட்டு பாடல்!
சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள, ஹார்டுவர்டு பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார், கமல்ஹாசன். அப்போது, தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி அணிந்து சென்றிருந்தார். இந்நிலையில், தற்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள, ஜல்லிக்கட்டு என்ற படத்தின், ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட பாடலும், ஹார்டுவர்டு பல்கலையில் வெளியிடப்பட்டுள்ளது.
— சி.பொ.,
நிவின்பாலியின் நயன்தாரா கனவு நனவாகிறது!
வளர்ந்து வரும் எல்லா இளவட்ட நடிகர்களுக்குமே ஒரு படத்திலாவது நயன்தாராவுடன், 'டூயட்' பாட வேண்டும் என்பது கனவாக இருந்து வருகிறது. இது, மலையாள நடிகர், நிவின் பாலிக்கும் இருந்து வந்த நிலையில், தற்போது, மலையாளத்தில் தயாராகும், லவ் ஆக் ஷன் டிராமா என்ற படம் மூலம் நயன்தாராவுடன் இணைகிறார், நிவின் பாலி. மேலும், நயன்தாரா தனக்கு ஜோடி என்றதும், இன்ப அதிர்ச்சியடைந்த அவர், தன் உடல் எடையை குறைத்து, நடிக்கப் போவதாக சொல்லி, தீவிரமாக, 'டயட்ஸ்' கடைப்பிடித்து வருகிறார்.
—சி.பொ.,
துப்பறிவாளராக த்ரிஷா!
மோகினி மற்றும் கர்ஜனை படங்களை தொடர்ந்து, கதையின் நாயகியாக த்ரிஷா நடிக்கும் படம், குற்றப்பயிற்சி. தமிழ் சினிமாவில், முதல் பெண் துப்பறிவாளர் கதையில் உருவாகும் இப்படம், 1980களில் நடந்த ஒரு மர்ம கொலை சம்பந்தப்பட்டதில் உருவாகிறது. இப்படத்திற்காக, சில அதிரடி துப்பறிவு சம்பந்தப்பட்ட கதைகளை பார்த்து, தன்னை தயார்படுத்தி வருகிறார், த்ரிஷா. காணக் கிடைத்தது கார்த்திகை பிறைப்போல!
— எலீசா
சுந்தர்.சியின் அடுத்த பிளான்!
கலகலப்பு 2 படம் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து, அப்படத்தின் மூன்றாம், நான்காம் பாகங்களையும் இயக்கப் போவதாக சொல்கிறார், இயக்குனர், சுந்தர். சி. மேலும், வாரணாசி லொகேஷன் என்றாலே, அங்குள்ள அகோரிகள் மற்றும் சாமியார்களைதான் பெரும்பாலும் படமாக்குவர். ஆனால், கலகலப்பு 2 படத்தில், வாரணாசியின் இயற்கை அழகையும், கங்கை நதியின் அழகையும் அழகாக படம் பிடித்து காண்பித்த, சுந்தர்.சி, கலகலப்பு 3 படத்தையும் இதுபோன்று, இந்தியாவிலுள்ள அழகான இன்னொரு லொகேஷனில் படமாக்கயிருக்கிறார்.
— சி.பொ.,
கறுப்பு பூனை!
அங்காடி தெரு நடிகை, இரண்டெழுத்து நடிகருடன் தனக்கு காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை என்று வெளிப்படையாக, 'ஸ்டேட்மென்ட்' கொடுத்த பிறகும், அவர் மீது நம்பிக்கை இல்லாமல், அவரது அபிமான நடிகர்கள் சிலர், தொடர்ந்து அவரை ஓரங்கட்டி வருகின்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, அவர்களை தனித்தனியாக சந்தித்து, தன்னிலை விளக்கம் அளித்து, மீண்டும் தன்னை ஆதரிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
அகர்வால் நடிகை, சம்பள விஷயத்தில், கோடிகளை சொல்லியடித்து வருவதால், அவர் மீது கடும் அதிருப்தியுடன் காணப்படுகின்றனர், தயாரிப்பாளர்கள். இருப்பினும், சில மேல்தட்டு நடிகர்களை, அம்மணி முந்தானையில் முடிந்து வைத்திருப்பதால், நடிகையின் மார்க்கெட் அமோகமாகவே உள்ளது. இதனால், மேல் தட்டு நடிகர்கள் தன் பக்கம் இருக்கும் வரை, தயாரிப்பாளர்களால் தன்னை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்ற நம்பிக்கையில், நடிகர்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தி வருகிறார்.
சினி துளிகள்!
* கிளாமரை தவிர்த்து, 'பர்பாமென்ஸ் ஸ்கோப்' உள்ள வேடங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார், அஞ்சலி.
* மன்னர் வகையறா படத்தை அடுத்து, ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார், விமல்.
* வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டுமென்றால், தனக்கே கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டுமென்று கண்டிஷன் போடுகிறார், காஜல் அகர்வால்.
அவ்ளோதான்!
