/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
படுக்கையில் ஓய்வெடுக்க 13 லட்சம் ரூபாய்!
/
படுக்கையில் ஓய்வெடுக்க 13 லட்சம் ரூபாய்!
PUBLISHED ON : ஏப் 28, 2019

என்ன... நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆக வேண்டும். ஜெர்மனியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தான், இந்த பரிசு தொகையை அறிவித்திருக்கின்றனர்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், 60 நாட்கள் படுக்கையில் படுத்துக்கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்! இதனால், அவர்களுக்கு என்ன லாபம் என்கிறீர்களா... விண்வெளி வீரர்கள் மிதந்தபடி இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏனென்றால், அங்கு எந்த கோள்களின் ஈர்ப்பு விசையும் கிடையாது. அதற்காக, முழுவதும் இல்லை என்றும் சொல்ல முடியாது.
விஞ்ஞானிகள் அதை, 'மைக்ரோ கிராவிட்டி' அதாவது, மிக குறைவான ஈர்ப்பு விசை என்கின்றனர். இந்த, மிக குறைவான ஈர்ப்பு விசையின் அளவை உடலில் சோதிக்கவும், எடையின்மை காரணமாக, உடலில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை தெரிந்து கொள்வதற்காக தான், இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு போகும் விண்வெளி வீரர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு தீர்வு கண்டுபிடிக்க இது உதவும் என, நம்புகின்றனர்.
ஐரோப்பிய கண்டத்திலுள்ள, ஜெர்மனி நாட்டின், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பத்திற்கான நிறுவன அதிகாரி, ஹான்ஜோர்க் டிட்டஸ் கூறும்போது, 'இந்த மிக குறைந்த ஈர்ப்பு விசை சம்பந்தமான சோதனைகள், விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்கு மேலும் ஒரு கவசமாக இருக்கும்...' என்றார்.
புகைப்படத்தில் உள்ளது போல, இந்த படுக்கை, தலை பக்கம், 6 டிகிரி தாழ்ந்து இருக்கும். இது, எதற்காக என்றால், உடலில் உள்ள திரவங்கள் உடலின் மேல் பகுதிக்கு செல்வதில் உள்ள பிரச்னைகளை ஆய்வு செய்வதற்காக தான். அப்போது தான், விண்வெளி வீரர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடிக்க முடியும்.
இந்த சோதனையில் ஈடுபடுவோருக்கு, பல் விளக்குதல், காலை கடன், சாப்பாடு, குளியல் என்று அனைத்துமே படுக்கையில் தான்.
எடை இல்லாத சூழ்நிலை நீடிக்கும்போது, எலும்பு மற்றும் தசை வளர்ச்சியில் குறைபாடு, இதய செயல்பாட்டில் மாற்றம், உடலின் மேல் பகுதிக்கு செல்லும் திரவங்களின் அளவு குறைதல், மலம் கழிப்பதில் பிரச்னை என்று, பல தொந்தரவுகள் ஏற்படும்.
மேலும், பலவீனம், தலை சுற்று, முகம் வீங்குதல், உள் காது தொந்தரவுகள் மற்றும் முதுகு வலியும் வரும். இதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த ஆய்வை, 'நாசா'வுடன், ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியும் இணைந்து, இரண்டு கட்டமாக நடத்துகின்றன.
ஏற்கனவே, மார்ச் மாதம், முதல் கட்டமாக, 12 பேர், இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றனர்.
அடுத்த கட்டமாக, செப்டம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இந்த முறை, தன்னார்வலர்களாக, பெண்களையும் எதிர்பார்க்கின்றனர்.
ஜெர்மனியின், கோலோன் நகரில் இதற்கான தேர்வு நடக்கிறது. விரும்பும் தன்னார்வலர்களுக்கு, ஜெர்மன் மொழி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
என்ன... ஜெர்மனி கிளம்பி விட்டீர்களா!
— ஜோல்னாபையன்.