
உலகம் எப்படி தன் போக்கில் இயங்குகிறதோ, அதுபோல, தெய்வமும் அருள்மழை பொழிந்து கொண்டே இருக்கும்.
அதை உணர்வது தான், உண்மையான பக்தனின் கடமை; ஆத்மார்த்தமான வழிபாடு ஒருபோதும் பொய்க்காது.
வழிபாடுகளில் மிகுந்த ஈடுபாடு உடைய அண்ணன் ஒருவர், 'தம்பி... இந்தா, இது சாளக்கிராமம்; மகாவிஷ்ணுவின் வடிவம். இதை வைத்து, ஒரு மாதம் பூஜை செய்து வா... கெடுதல் விலகும்; நன்மை உண்டாகும்...' என்று கூறி, சாளக்கிராமம் ஒன்றை, தம்பியிடம் தந்தார்.
திருமணமாகி, மூன்று பிள்ளைகள் உடைய தம்பியும், மூத்த சகோதரர் சொன்னபடி, முறையாக சாளக்கிராம பூஜையை செய்யத் துவங்கினார். 29 நாட்கள் முடிந்து, 30வது நாள்...
'ஹும்... ஒரு மாதமாக நீங்களும் பூஜை செய்து தான் இருக்கிறீர்கள். எதையும் காணோமே...' என்று அங்கலாய்த்தார், அவரது மனைவி.
சலிக்காமல் அவரும், 'அதைப் பற்றி கவலைப்படாதே... நான் பூஜை செய்வதைப் பார்த்து, நம் பிள்ளைகளும் பூஜை செய்யத் துவங்குவர் அல்லவா... நல்லது தானே அது...' என்று கூறியவர், 'சரி... பூஜைக்கு நேரமாகி விட்டது...' என்றார்.
அப்போது, அவரின் பிள்ளைகள் மூவரும், 'அப்பா... நாங்கள் கங்கையில் நீராட விரும்புகிறோம்...' என்றனர்.
தந்தைக்கு ஏனோ மனமில்லை. 'இப்போது வேண்டாம். இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்...' என்றார்.
அப்போது அங்கு வந்த குமாஸ்தா, 'ஏன் தடுக்கிறீர்கள்... என்ன பயம்? கவலைப்படாதீர்கள்... இவர்களுக்கு துணையாக நான் போகிறேன்; பத்திரமாக கூட்டி வருகிறேன்...' என்றார்.
அனுமதி கொடுத்த தந்தை, அவர்கள் புறப்பட்டுச் சென்றதும், பூஜையில் அமர்ந்தார். முறைப்படி பூஜைகள் நடந்து முடிந்தன.
சற்று நேரம் ஆனது. கங்கைக்கு நீராடப் போயிருந்த நால்வரும், புழுதி படிந்த உடம்போடு வந்து நின்றனர்.
'என்ன ஆயிற்று?' என்று கேட்டார், தந்தை.
'நாங்கள் நால்வரும் கங்கையில் நீராடி திரும்பிக் கொண்டிருந்தோம். கண்களுக்கு எதிரில் பல அடுக்குகளுடன் ஒரு பெரும் மாளிகை, சரிந்து விழுந்து சிதறியது. ஓர் அடி முன்னால் போயிருந்தால் கூட, எங்கள் கதை முடிந்திருக்கும்.
'எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்த ஒரு காளை மாடு, ஒரு குதிரை, மூன்று ஆட்கள் என, ஐந்து ஜீவன்கள் உயிரிழந்தன. ஏதோ, தெய்வம் காப்பாற்றியது...' என்றார், குமாஸ்தா.
பிள்ளைகள் பிழைத்ததை எண்ணி, பூஜை செய்து வந்த சாளக்கிராமத்தைப் பார்த்து, மனதார நன்றி செலுத்தினார்.
அங்கு வந்த அவரது மனைவி, 'நீங்கள் சொன்னது உண்மை தான். தெய்வம் ஏதோ ஒரு வழியில் நம்மைக் காப்பாற்றுகிறது என்பதை உணர்ந்தேன். நால்வரும் பிழைத்து விட்டனர்...' என்றார், கண்ணீர் மல்க.
நுாறு ஆண்டுகளுக்கு முன், வங்காளத்தில் நடந்த நிகழ்ச்சி இது. அடியார்களை காப்பாற்ற ஆண்டவன் மறப்பதில்லை; மறுப்பதும் இல்லை.
பி.என்.பரசுராமன்
ஆலய அதிசயங்கள்!
எல்லா வைணவ திருத்தலங்களிலும், பெருமாளின் இடது கையில் தான், சங்கு காணப்படும். விழுப்புறம் மாவட்டம், திருக்கோவிலுாரில் உள்ள பெருமாள் மட்டுமே, வலது கையில் சங்கு வைத்துள்ளார்.