தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/30 முழம் வேட்டி கட்டும் சுவாமி!

30 முழம் வேட்டி கட்டும் சுவாமி!

30 முழம் வேட்டி கட்டும் சுவாமி!


PUBLISHED ON : செப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்கள் நான்கு முழம் அல்லது எட்டு முழம் வேட்டி கட்டுவது வழக்கம்; பெண்கள் கூட அந்தக்காலத்தில், 16 முழம் சேலை தான் கட்டினர். ஆனால், மூன்று முழம் வேட்டி ஒன்றையும்,

30 முழ வேட்டி ஒன்றையும் கட்டும் சிவனைக் காண, புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல்

விருத்தபுரீஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

இரண்டாம் சுந்தர பாண்டியன் எழுப்பிய இக்கோவிலில், பிரமாண்டமான ஆவுடையாருடன் கூடிய லிங்கத்துடன் எழுந்தருளியுள்ளார், விருத்தபுரீஸ்வரர். 'விருத்தம்' என்றால், பெரியது.

தஞ்சை, பெரிய கோவிலில் உள்ள லிங்கம், 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் லிங்கம், 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆனால், திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் ஆலய லிங்கம், 9 அடி உயரமே உடையதென்றாலும், ஆவுடையார் பீடம், 82.5 அடி சுற்றளவு உடையது. இது, தஞ்சை மற்றும் கங்கைகொண்டசோழபுரத்தை விட பெரிதாகும். இதனால், ஆவுடையாருக்கு வஸ்திரம் அணிவிக்கும் போது, ஒருவர் பிடித்துக் கொள்ள, இன்னொருவர் ஆவுடையாரை சுற்றி வந்து கட்டுவார்.

லிங்கத்திற்கு மூன்று முழம் வேட்டியும், ஆவுடைக்கு, 30 முழம் வேட்டியும் கட்டப்படுகிறது. இதை வைத்து தான், 'மூன்று முழமும் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வட்டார மொழி, இப்பகுதியில் சொல்லப்படுகிறது.

இங்கே முழம் என்பது, 'தச்சு முழம்' என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரு தச்சுமுழம் என்பது, 2.75 அடி; அப்படியானால், 82.5 அடி நீளமுள்ள வேட்டி கட்ட வேண்டும். இதை உத்தேசமாக, 90 அடிக்கு நெய்து விடுகின்றனர். சிவனுக்கு அபிஷேகம் செய்ய, ஆவுடையை சுற்றி கட்டியுள்ள பலகை மீது ஏறிக் கொள்வர்.

இத்தலத்தில், கார்கவ முனிவர் தவம் செய்த போது, அசுரன் ஒருவன் புலி ரூபம் எடுத்து, முனிவரைக் கொல்ல முயன்றான். கோபமடைந்த முனிவர் அவனை புலியாகவே இருக்கும்படி சபித்தார்.

ஒருமுறை, பார்வதிதேவி மானிட வடிவில் இப்பகுதிக்கு வந்த போது, பார்வதி மீது பாய்ந்தது புலி. காளியாக மாறி, புலியை எட்டி உதைத்தாள், அம்பாள். தாயின் திருவடி பட்டதும், சுயரூபம் பெற்ற அசுரன், 'அன்னையே... நான், உங்கள் அருகிலேயே இருக்கும் வரம் தர வேண்டும்...' என்றான். அதன்படி, பெரியநாயகி அம்மன் எதிரே நந்தி வடிவில் அமர்ந்து விட்டான். இது, 'வியாக்ர நந்தி' எனப்படுகிறது. 'வியாக்ரம்' என்றால், புலி என்று பொருள்.

மொட்டைக்கோபுர நுழைவு வாயிலில் உள்ளது, காளியம்மன் சன்னிதி. அவள் உக்கிரமாக இருந்ததால், ஊரில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. எனவே, சன்னிதியை பூட்டி விட்டனர். கண்ணாடி தடுப்புக்குள் இருக்கும் சூலத்தை மட்டும் தரிசிக்கலாம்.

கோவில் வாசலைக் கடக்கும் போது, ஊர்மக்கள் தங்கள் காலணிகளை கழற்றி, கையில் எடுத்துச் செல்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.

முனிவர் ஒருவரின் சாபத்தால், தன் சக்தியை இழந்தார், செவ்வாய் பகவான். நாரதரின் அறிவுரைப்படி இத்தலத்தில் வழிபட்டு, இழந்த சக்தியை மீண்டும் பெற்றார். செவ்வாய்க்கே தோஷம் போக்கியதால், இங்கு, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபடுகின்றனர்.

புதுக்கோட்டையில் இருந்து, 30 கி.மீ., தூரத்தில் உள்ளது, அறந்தாங்கி. இங்கிருந்து, 42 கி.மீ., தூரம் சென்றால் திருப்புனவாசலை அடையலாம். மதுரையில் இருந்து காரைக்குடி வழியாக அறந்தாங்கி சென்றும், திருப்புனவாசலுக்கு செல்லலாம்.

- தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us