PUBLISHED ON : மே 28, 2017

முப்பரிமாண அட்டையில், கண்களில் ஒற்றிக் கொள்ளும் நிறத்தில், 'வழுவழு' தாள்களில் புத்தகங்கள் வந்து கொண்டிருக்கும் இக்காலத்திலும், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகாவில், விஜயபுரம் கிராமத்தில், சித்த மருத்துவராக பணியாற்றும் கோவிந்தராசன், கடந்த, 39 ஆண்டுகளாக, 'தாழம்பூ' என்ற கையெழுத்து பத்திரிகையை நடத்தி வருகிறார்.
பள்ளியில் படிக்கும் போதே, சிற்றிதழ் நடத்தி வந்த இவர், பின், ஓவிய ஆசிரியர் படிப்பை முடித்து, தன் குடும்பத் தொழிலான, மருத்துவ தொழிலுக்கு வந்த பின், மீண்டும், சிற்றிதழ் ஆசை அவருள் துளிர் விட்டது. அந்நேரம், வானொலியில், 'தாழம்பூவின் நறுமணத்தில் தரமிருக்கும்... நல்ல தரமிருக்கும்...' என்ற பாடல் காற்றில் மிதந்து வர, தன் சிற்றிதழுக்கு, 'தாழம்பூ' என்று பெயர் வைத்தார்.
கடந்த, 1977ல், கையால் எழுதி, தயாரித்த இதழை, 'பிலிப்பைன்ஸ்' வானொலிக்கு அனுப்பி வைத்தார்; வானொலியில், 'தாழம்பூ' பற்றி, விரிவான விமர்சனம் வரவே, நிறைய பேர், கோவிந்தராசனை தொடர்பு கொண்டு, 'எங்களுக்கு அந்த இதழ் கிடைக்குமா?' என்று கேட்க, உற்சாகமடைந்த கோவிந்தராசன், 20 -- 30 கார்பன் பேப்பர்களை வைத்து எழுதி, ஓவியம் வரைந்து, அடுத்தடுத்து இதழ்கள் தயாரித்து, அனுப்பி வந்தார்.
இந்நிலையில், 'போட்டோ காபி' எடுக்கும் இயந்திரம் வரவே, கார்பன் வைத்து எழுதும் வேலை குறைந்தது. இரு மாதத்திற்கு ஒருமுறை, 24 பக்கங்கள் கொண்டதாக வரும், 'தாழம்பூ' இதழ் முழுவதையும், இவரே எழுதி, தேவையான படங்களையும் வரைந்து விடுகிறார்; கவிதைகள், பிரதான இடம் பிடித்துள்ளன. மருத்துவம் சார்ந்த பிரபலங்களின் பேட்டி, வாசகர்கள் கடிதங்கள் மற்றும் தமாசு உட்பட, பல விஷயங்களும் இடம் பெற்றுள்ளன.
கம்ப்யூட்டர் வந்த பின், 'எதற்கு கையால் எழுத வேண்டும்...' என்று எண்ணி, தட்டச்சு செய்து, இதழ்களை வெளியிட்டார். ஆனால், வரவேற்பு இல்லாமல் போகவே, மீண்டும், கையால் எழுதி, போட்டோ காபி எடுத்தே, 'தாழம்பூ' பத்திரிகையை நடத்தி வருகிறார்.
இப்போது, காபி எடுக்கும் செலவு கூடி விட்டதால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தான், இதழ் வெளியாகிறது. 100 நிரந்தர வாசகர்கள் இருக்கின்றனர். ஆண்டு சந்தா, 100 ரூபாய்; அனைவருக்கும், இதழ், தபாலில் அனுப்பி வைக்கப்படுகிறது.
'தொட்டு விடும் தூரத்தில், வெற்றியும் இல்லை; அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை...' என்பதை, கொள்கையாக கொண்டு செயல்படும் கோவிந்தராசனுக்கு, யாராவது, ஒரு போட்டோ காபி மிஷன் நன்கொடையாக வழங்கினால், பெரிதும் சந்தோஷப்படுவார்.
அவரது மொபைல் எண்: 96880 13182.
- எல்.முருகராஜ்
