தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் ஏன் பிறந்தேன்? (20)

நான் ஏன் பிறந்தேன்? (20)

நான் ஏன் பிறந்தேன்? (20)


PUBLISHED ON : மே 28, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.

பதிபக்தி பட கதாநாயகனான கே.பி.கேசவன், எங்களிடம், 'ஒரு படத்தில் நடிப்பதற்காக, மும்பை செல்லவிருக்கிறேன்; அதில், நீங்களும் நடிக்கிறீர்களா?' என்று கேட்டார்.

உள்ளத்தில் மகிழ்ச்சி துளிர் விட, அதை அடக்கி, 'என்ன வேடம்?' என்று கேட்டேன்.

'வில்லன் வேடம்; ஆனால், அப்பாவியான கதாபாத்திரம்...' என்றார்.

கும்பிட போன தெய்வம், குறுக்கே வந்தது போல் இருந்தது, அந்த செய்தி!

'எப்போ மும்பைக்கு போகப் போறீங்க?' என்று கேட்டேன்.

'எப்போது என்பது இருக்கட்டும்... நாளைக்கு என்னுடன் வருகிறீர்களா... ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்கிறேன்...' என்றார்.

இதுப்பற்றி, என் தாயிடம் பேசிய போது, 'சரி போய் வாருங்கள்...' என்றார்.

கே.பி.கேசவனோடு சென்றோம்; சில நாட்களில் படத்தில் நடிக்க ஒப்பந்தமானோம்.

வாத்தியார், கந்தசாமியை சந்தித்து, விஷயத்தை சொன்னேன். அவர், வருத்தப்பட்டாலும், 'இன்ஸ்பெக்டர் வேடம் இன்னும் உனக்காக காத்திருக்கிறது...' என்றார்.

எம்.கே.ராதா அண்ணன், 'எப்படியாவது நல்லா நடிச்சு, நல்ல பேரோடு வந்து சேரு; அப்பாவ நான் சமாதானம் செய்துக்குறேன்...' என்றார்.

எதிர்காலத்தை பற்றிய பெரிய எதிர்பார்ப்போடு, மும்பைக்கு பயணமானோம்.

'பரமேஸ்வரி சவுண்ட் பிக்சர்ஸ்' என்ற அப்படக் கம்பெனியின் உரிமையாளர் நல்ல மனிதர்; அவருடைய இரு குமாரர்களும், மும்பையில் எங்களுடன் தங்கியிருந்தனர்.

மூத்தவர், ராமசாமி செட்டியார் மிகவும் நல்லவர்; ஆனால், யாருடனும் அதிகமாய் நெருங்கிப் பழகமாட்டார். அவருடைய தம்பி, ராசமாணிக்கம் செட்டியாரோ, தான் முதலாளியின் மகன், மற்றவர்கள் தன்னிடம் சம்பளம் வாங்கி, வேலை செய்பவர்கள் என்ற எண்ணமில்லாமல், எல்லாருடனும் நெருங்கி அளவளாவும் குணம் கொண்டவர்.

இதன் காரணமாக, எங்களுக்கு கம்பெனியை பற்றியோ, கம்பெனி முதலாளியை பற்றியோ, எந்த பிரச்னையும் எழவில்லை. உணவு, தங்குமிடம் முதலிய வசதிகளுக்கும் எந்த குறையும் இல்லை.

என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர், டி.எஸ்.பாலையா. இருவரும் நாடக கம்பெனியில், முதன் முதலாக சந்தித்த நாளிலிருந்தே நண்பர்களாக பழகி வந்தோம்.

மும்பைக்கு, பாலையா வந்து சேர்ந்ததும், எங்கள் இருவருக்குமே அளவு கடந்த மகிழ்ச்சி.

சில நாட்கள் கடந்த நிலையில், எனக்கென்று சொல்லப்பட்ட, வில்லன் வேடம், எனக்கு இல்லை என்று தெரிய வந்த போது, இருவருக்குமே பேரிடியாக இருந்தது.

கலங்கினேன் என்று சொல்வதை விட, கதறினேன் என்று சொன்னால் மிகவும் பொருந்தும்.

எவ்வளவு நேரம் அழுதேன் என்று எனக்கே தெரியாது.

யாரோ என் தலையை தடவிக் கொடுக்க, திரும்பிப் பார்த்தேன். அருகில், கேசவன்!

அவர் என்னை, 'சந்திரா' என்று தான் செல்லமாக அழைப்பார்.

'சந்திரா... வேடம் மாற்றப்படுகிறதே என்று மனம் தளராதே... ஜமீன்தார் வேடம் ஒன்று இருக்கிறது; அதுவும், இதைப்போன்ற வில்லன் வேடம் தான். உனக்கு முதலில் கொடுக்கப்பட்டது நகைச்சுவையோடு கூடிய, வில்லன் பாத்திரம். அதுதான், இப்போது பாலையாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. உனக்கு ஜமீன்தார் வேடம் தருவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்; அது, நிச்சயம் கிடைக்கும்...' என்றார் ஆறுதலுடன்!

எனக்கென்று சொல்லப்பட்டிருந்த வேடம் மாற்றப்பட்டு விட்டது என்ற வேதனையை, எந்த ஆறுதல் வார்த்தைகளாலும் போக்க முடியாது என்றாலும், இன்னொரு நல்ல வேடம் கிடைக்கப் போகிறது என்ற சேதி, என் உள்ளத்திற்கு பெரிய ஆறுதலை தந்தது.

மறுநாள், பாலையாவை சந்தித்த போது, அவர் கண்கலங்கியவாறு, 'உன் வேடத்திற்கா நான் போட்டிக்கு வர வேண்டும்...' என்று சொன்னார்.

எனக்கு நிர்ணயிக்கப்பட்ட வேடம், அவருக்கு கிடைத்ததில், நிம்மதி தான் என்றாலும், அது, அவர் உள்ளத்திற்கு சாந்தி அளிப்பதாக இல்லை.

ஆயினும், அவர் மட்டும் என்ன தான் செய்ய முடியும்!

எனக்கு பணமோ, வேலையோ எந்த அளவுக்கு தேவையோ, அதற்கு எந்த வகையிலும், குறைந்ததல்ல அவரது நிலை!

நான், ஒருவாறு மனச் சமாதானம் அடைந்து, 'ஜமீன்தார் வேடம் கிடைக்கும்...' என்ற நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால், 'ஜமீன்தார் வேடம் ஏற்று நடிக்கவிருக்கும் நடிகர் மும்பைக்கு வந்து சேர்கிறார்...' என்ற சேதி தான் வந்தது.

'ஜமீன்தார் வேடத்தில் நடிக்க வேறொருவரா... எனக்கல்லவா அந்த வேடம் சொல்லப்பட்டிருந்தது... முதலில் சொல்லப்பட்ட வில்லன் வேடம் இல்லையென்று ஆனது போல, இந்த வேடமும், இல்லையென்று ஆகி விடுமோ...' என, மனம் அலைமோதியது.

மீண்டும் எனக்கு ஏமாற்றம் மற்றும் வேதனை தான்!

தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை ஏற்று, கடமையை செய்ய, மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தார், ஜமீன்தார் நடிகர்.

அவரை, ஒருமுறை நிமிர்ந்து பார்த்தேன். என்னை விட, ஒரு அடி உயரம் அதிகம்; நல்ல சிவப்பு; பழகிய முறையிலிருந்து, நல்லவர் என்று தெரிந்தது; நல்ல ஆங்கில புலமை பெற்றிருந்தார். பட்டதாரி என்று நினைக்கிறேன்.

முதலில் சொல்லப்பட்ட வேடம் பறிக்கப்பட்ட நேரத்தில், கதறி அழுதேன் என்றால், இப்போதோ, உடனே, சென்னைக்கு திரும்பி விட வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் கிளர்ந்தெழுந்தது.

என்னை, என் நிலைமையை, கவனித்தபடியே இருந்தார், என் அண்ணன்.

அன்று இரவும், கே.பி.கேசவன் வந்து, ஆறுதல் சொல்ல, அவருக்கு நான் சொன்ன ஒரே பதில், 'நான் ஊருக்கு போயிடுறேன்...' என்பது தான்!

என்னை தேற்ற, ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், நான் ஒரே பிடிவாதமாக, 'ஊருக்கு போகிறேன்...' என்ற பதிலையே சொன்னேன்.

வேறு வழியின்றி திரும்பிச் சென்றார், கேசவன். அவருக்கும் மிகுந்த மனக் கஷ்டம். ஆனால், அவருடைய சக்திக்கும் மீறிய ஒன்றாக, இவையாவும் நடந்தன.

'ஊருக்கு போயிடுவோமா?' என்று கேட்டார், என் அண்ணன்.

'போயிடுவோம்...' என்றேன், உறுதியாக!

அண்ணன், என்னை அமைதியாக பார்த்து, 'நாம் முன் பணம் வாங்கியிருக்கோமே, திருப்பி கொடுக்க வேணாமா?' என்று கேட்டார்.

அப்போது தான், 'இருநூறு ரூபாய் முன் பணம் வாங்கியிருக்கிறோமே... திருப்பிக் கொடுக்க வேண்டுமே... என்ன செய்வது...' என்று நினைத்தேன். இயலாமையில், கண்களிலிருந்து, கண்ணீர், 'பொலபொல' வென உதிர்ந்தது.

இந்நிலையில், எம்.கே.ராதா மற்றும் அவருடைய குழுவினர் படப்படிப்பில் கலந்து கொள்ள மும்பை வந்திருந்தனர். அவர்களால் தரப்பட்ட, எந்த வேடத்தை, என் தகுதிக்கு குறைவானது என்று கருதி வேண்டாம் என்று அலட்சியப்படுத்தினேனோ அந்த வேடத்திற்கு மேம்பட்ட, எந்த வேடமும் கிடைக்காத நிலையில், அவர்கள் முன்னிலையில் எப்படி தலைகாட்டுவது!

என் தாயை பார்த்து, பணத்தை திருப்பி கொடுக்க வேண்டுமென்று சொன்னால், தருவதற்கு அவரிடம் ஏது பணம்!

'செலவுக்கு என்ன கொண்டு வந்தாய்?' என்று கேட்கிற நிலையில் அல்லவா, அவர் இருக்கிறார்!

—- தொடரும்.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us