PUBLISHED ON : ஜூன் 04, 2017

சென்னை, விருகம்பாக்கம், நடேசன் பூங்காவிற்கு அதிகாலையில் சென்றால், சைக்கிளில் ஒருவர், பூங்காவைச் சுற்றி வருவதை காணலாம். கம்பீரமான தோற்றத்துடன் காணப்படும் அவரது பெயர், நமசிவாயம்; வயது, 84. கடந்த, 59 ஆண்டுகளாக, சைக்கிளை தவிர, வேறு எந்த வாகனத்தையும் ஓட்டாதவர்.
பி.காம்., முடித்த கையோடு, பல்வேறு ஊர்களில், வேலை கிடைத்த போதும், தன் தாயை, அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, டிரான்ஸ்பர் இல்லாத வேலையான, சென்னை, துறைமுக வேலையை ஏற்று, 34 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.
படிக்கும் காலத்தில் இருந்தே நாடகம், நடிப்பு மற்றும் இசைக் கருவிகள் வாசிப்பதில் தீவிரமாக இருந்தவர், மனைவியின் மறைவிற்கு பின், எல்லாவற்றையும் விட்டு விட்டு, மனைவியின் நினைவுகளை மட்டுமே, சுமந்து வாழ்கிறார்.
வயதானாலும், இளமையான தோற்றத்துடன் காணப்படும் இவர், அதற்கு முக்கிய காரணமாக கருதுவது, சைக்கிளை தான்!
கடந்த, 1958ல் இவரது சம்பளம், 130 ரூபாயாக இருந்த போது,
'பி.எஸ்.ஏ., அரிஸ்டோகிரேட்' ஸ்போர்ட்ஸ் மாடல் சைக்கிளை, 160 ரூபாய்க்கு வாங்கினார். அன்றிலிருந்து இன்று வரை, இந்த சைக்கிளை பிரியவில்லை. எங்கே போனாலும் சைக்கிள் தான். அதன்பின், பொருளாதார ரீதியாக, பன்மடங்கு உயர்ந்த போதும், சைக்கிளை மாற்றவில்லை.
ஒருமுறை, மறதியாக, சைக்கிளை பூட்டாமல், தெருவில் விட்டு, வீட்டிற்கு வந்துவிட்டார். மறுநாள் காலையில் சைக்கிள் நினைவு வந்து, போய் பார்த்துள்ளார்; விட்ட இடத்தில் அப்படியே இருந்துள்ளது. அதுமுதல், சைக்கிளின் மீதான பிரியம், இன்னும் அதிகரித்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் டயர், ட்யூப் மற்றும் சில உதிரி பாகங்களை தவிர, சைக்கிள் அப்படியே உள்ளது. நமசிவாயமும், எவ்வித உடல் உபாதையும் இன்றி, ஆரோக்கியமாக இருக்கிறார்.
மகன்கள் - மருமகள்களின் அன்பிலும், பேரக் குழந்தைகளின் பாசத்திலும், இனிமையாக பொழுதை கழிக்கும் நமசிவாயம், கடந்த பல ஆண்டுகளாக தினமலர் வாசகர். தினமலர் நாளிதழில், உதவி கேட்டு வரும் கட்டுரைகளை படித்து, அவர்களுடன் பேசி, தன் சக்திக்கு ஏற்ப உதவுவதில், சந்தோஷம் கொள்பவர்.
'எதையும் முடிந்த வரை முயற்சிக்காதே... முடியும் வரை முயற்சி செய்; வெற்றி நிச்சயம்...' என்று, எல்லாருக்கும் போதிக்கும் நமசிவாயம், நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்.
ஒருமுறை பேசிப் பாருங்களேன்!
தொலைபேசி எண்: 044 - 23770225
எல்.ராகவேந்தர்
