PUBLISHED ON : செப் 08, 2013

'இன்னும் உங்களில் திருமணம் ஆகாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் வறியவர்களாக இருந்தால், அல்லா தன் கருணையினால் அவர்களை சீமான்களாக்கி வைப்பார். அல்லா கொடையுடையவர்; முற்றிலும் அறிந்தவர்' என்கிறது திருக்குரான்.
இதை வேதவாக்காக கொண்டு, கடந்த 31 ஆண்டுகளாக, ஆண்டுதோறும், 28 ஜோடிகளுக்கு, இலவச திருமணத்தை, சீர்வரிசையோடு, செய்து சாதனை படைத்து வருகிறது, 'மதுரை இஸ்லாமிக் வெல்பேர் சொஸைட்டி (எம்.ஐ.டபிள்யூ.எஸ்.,) பைத்துமால்' மற்றும் ஜெ.எம்.எஸ். அரபுக்கல்லூரி.
மதுரை வரிச்சியூர் அருகே சிவகங்கை ரோட்டில், ஜாமி ஆ நகரில் இக்கல்லூரியும், சொஸைட்டியும் உள்ளன. கடந்த ஆக.,18ல், ஏழு முஸ்லிம் ஜோடிகளுக்கு, ஒரே நேரத்தில், மிக மிக எளிய முறையில் திருமணம் நடத்தி, ஆச்சரியப் படுத்தினர்.
'எப்படி 31 ஆண்டுகளாக இது சாத்தியமாகிறது?' என, கல்லூரி முதல்வர் முஹிப்புல்லாவிடம் கேட்ட போது, 'இலவச திருமணம் நடத்துவது குறித்து, தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்வோம். அதை பார்த்து எங்களுக்கு விண்ணப்பிப்பர். ஏழ்மை நிலையில் உள்ளவர்களா என ஆய்வு செய்து, தேர்வு செய்வோம்.
'திருமணச் செலவாக ஒவ்வொரு ஜோடிக்கும், 50 ஆயிரம் ரூபாய், நிர்ணயித்துள்ளோம். இதில், 30 ஆயிரம் ரூபாய்க்கு சீர்வரிசை பொருட்களும், கையில், 10 ஆயிரம் ரூபாயும் கொடுத்து விடுவோம். விருந்துக்கு நூறு பேருக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி விடுவோம். அனைத்துமே சொஸைட்டி உறுப்பினர்கள் உட்பட பலரின், 'ஸ்பான்சர்' மூலம் நடக்கிறது' என்றார்.
சொஸைட்டி செயலாளர், ஜபருல்லாஹான் கூறுகையில், 'மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் முதலிலேயே சந்தித்து பேசி விடுவர். பிறகு, திருமணம் செய்து வைக்குமாறு எங்களுக்கு விண்ணப்பிப்பர். ஆண்டுக்கு, நான்கு முறை இலவசத் திருமணம் நடக்கும். அதில், அதிகபட்சமாக, ஏழு பேரை மட்டுமே, ஒவ்வொரு முறையும் தேர்வு செய்து, நடத்தி வைக்கிறோம். அதிகம் பேர் விண்ணப்பித்தால், அடுத்து திருமணம் செய்து வைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அடுத்த திருமணம் டிச.,15ல் நடக்க இருக்கிறது...' என்றார்.
சொஸைட்டி கணக்காளர் சையது சுல்தான் இப்ராகிம், 'திருமணம் செய்து கொடுத்து விடுவதோடு எங்கள் கடமை முடிந்து விடுவதில்லை. அடிக்கடி நேரில் சென்று, மணமக்கள் பிரச்னையின்றி வாழ்கின்றனரா என ஆய்வும் செய்கிறோம். ஆரம்பம் முதல் இன்று வரை நிர்வாக செயலாளராக பணியாற்றும் ஸபூர் முகைதீனின் சேவை மறக்க முடியாதது' என்றார்.
திருமண சீர்வரிசையாக, பேருக்கு சில பொருட்களை மட்டும் கொடுக்காமல், குடும்பம் நடத்த தேவையான, பீரோ, மின்விசிறி, போர்வை முதல், ஊசி, நூல் வரை மொத்தம் 165 வகையான பொருட்களை வழங்கி, மணமக்கள் குடும்பத்தினரை அசத்துகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் வரை, கட்டில் கொடுத்துள்ளனர். ஆனால், வசதியில்லாத, சிறு வீடுகளில், அந்த கட்டில் இருப்பதால், பெற்றோர் வெளியே தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாம். இதை தவிர்க்க, சீர்வரிசை பட்டியலில் கட்டிலுக்கு, 'குட்பை' சொல்லி விட்டனர்.
'கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டை கட்டி பார்' என்பர். ஆனால், இங்கே நடக்கும் எளிய திருமணத்தை பார்க்கும்போது, 'நம்ம கல்யாணத்தையும் இப்படி, 'சிம்பிளா' சிறப்பா நடத்தியிருக்கலாமோ; தேவையற்ற செலவை குறைத்து, இதுபோன்று நடக்கும் எளிய திருமணங்களுக்கு உதவியிருக்கலாமோ' என்று நிச்சயம், ஒவ்வொருவருக்கும் நல்லெண்ணம் ஏற்படும். அதை பகிர்ந்து கொள்ள, 94885 36786க்கு, 'ஹலோ' சொல்லுங்க.
கே. ராம்குமார்
