PUBLISHED ON : செப் 08, 2013

தோழியின் பாதுகாப்பு கவசம்!
அரசுடைமை வங்கி ஒன்றில், வேலை பார்க்கும் நான், சமீபத்தில், தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரியும், பால்ய சிநேகிதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன்.
'ஆபீசில், சபலிஸ்டுகளை எப்படி சமாளிக்கிறாய்?' என்று, சிரித்துக் கொண்டே கேட்டேன்.
'அந்த விஷயத்துல நான் சமர்த்து. ஆபீசுல பத்து வருஷமா, பழந்தின்னு கொட்டை போட்டவங்களெல்லாம், என்னைப் பார்த்து, புருவம் உயர்த்தி, ஆச்சரியப்படற அளவுக்கு நான் பாப்புலர்...
'எப்படின்னு கேக்கறியா? காலைல ஆபீசுக்கு போனவுடனே, 'இன்னிக்கு பஸ்சுல, ஒரு காலிப்பய என்கிட்ட, சில்மிஷம் பண்ணினான். செருப்பை கழட்டி, 'பளார் பளார்'ன்னு அறைஞ்சேன். அலறி, அடிச்சிட்டு தப்பிச்சோம், பிழைச்சோம்ன்னு இறங்கி ஓடிப் போயிட்டான்'ன்னு எல்லாருக்கும் கேட்கும்படி, டுபாக்கூர் விடுவேன்.
'இந்த மாதிரி, அவ்வப்போது யாருக்கும் சந்தேகம் வராதபடி, 'கப்ஸா' அடிச்சி விடுவேன். இதை உண்மையின்னு நம்பி, 'எம்மா...அவளா நெருப்புல்லா'ன்னு சொல்லுவாங்க அந்த மாதிரியான சபல ஆசாமிகள் உட்பட, யாரும் என்கிட்ட வாலாட்ட மாட்டாங்க...' என்றாள் பெருமையாக!
வேலைக்கு செல்லும் சகோதரிகளே... நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, இந்த மாதிரி பொய் சொன்னாலும் பரவாயில்லை... நெருப்புங்கற இமேஜை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதுவே, பாதுகாப்பு கவசமாய் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும்.
— சி.கலாராணி, புதுச்சேரி.
அசடு வழிந்த மாப்பிள்ளை!
என் தோழிக்கு திருமணம் நடந்தது. முதலிரவில், அவள் பட்ட அவஸ்தைகளை, ஒரு நாள் சந்திக்கும் போது, என்னிடம் சொல்லி வருத்தப்பட்டாள்...
மனதில் படபடப்புடன், முதலிரவு அறைக்குள் சென்ற தோழி, அங்கு, கணவர் குறட்டை விட்டு தூங்குவதைப் பார்த்து, என்ன செய்வது என தெரியாமல் முழித்திருக்கிறாள். என்ன நினைப்பாரோ என்று, எழுப்பவும் பயம்.
தானாக எழுந்திருப்பார் என்று தயங்கி தயங்கி இரவு முழுவதும் அவள் காத்திருக்க, விடிந்த பின் எழுந்து, 'சாரி, உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீ வர லேட்டாகவே, கல்யாண அசதியில தூங்கிட்டேன் போலிருக்கு...' என்று அசடு வழிந்துள்ளார்.
மாப்பிள்ளையை, முதலிரவு அறைக்குள் முன் அனுப்பி, அதற்கு பின், நல்ல நேரம் பார்த்து, பெண்ணை தாமதமாக அனுப்பியதால் வந்த வினை இது. நல்ல நேரத்தை அவர்களிடம் சுட்டிக்காட்டினால், புரிந்து கொள்ள மாட்டார்களா?
அதோடு, என்ன தான் கல்யாண அசதி என்றாலும், ஒரு புது மாப்பிள்ளை இப்படியா தூங்குவது... பாவம் என் தோழி.
— தி. விமலா ராணி, பொள்ளாச்சி.
'அங்க'யா வைக்கிறீங்க ப்ளேடு போடப் போறாங்க...
மாநகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால், 'ஸ்டேஜ்' போட்டு, டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர். அப்போது, அருகில், குண்டு கல்யாணம் ரேஞ்சுக்கு நின்று கொண்டிருந்த ஒரு பெண்மணி, டிக்கெட் எடுப்பதற்காக, ஜாக்கெட்டுக்குள் கை விட்டு பர்சை எடுத்தார்.
அவ்வளவு தான்... அருகிலிருந்த ஒரு வாலிபப் பையன், 'மச்சான், கண்ணக் கட்டுதுடா... பஸ்ச விட்டு இறங்கினதும், என்னை கைத்தாங்கலா அழைச்சுட்டுப் போய், எங்க வீட்ல விட்டுடு...' என்று கூற, அருகில் நின்றிருந்த ஆண்கள், நமுட்டுச் சிரிப்புச் சிரித்தனர். பெண்களோ செய்வதறியாது, வெட்கத்தால் நெளிந்தோம். தேவையா இந்தப் பேச்சு?
இதேபோல், சில நாள் கழித்து, வேறொரு பெண், பஸ்சில் மேலே கம்பியைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். ஜாக்கெட்டுக்குள் பத்திரமாக அவர் வைத்திருந்த பர்ஸ், இடது அக்குள் பக்கம் வந்து அமர்ந்திருந்தது. அவர் அணிந்திருந்தது, வெளிர் நிற ப்ளவுஸ் என்பதால், அப்பட்டமாக பர்ஸ் தெரிந்தது.
பேக், சட்டை என்று, ஆங்காங்க, பிக் - பாக்கெட்காரர்கள் பிளேடு போடும் காலம் இது. இந்த நேரத்தில் இப்படித் தெரிந்தால், 'அந்த' இடத்திலும் பிளேடு போட்டு விடுவர் நம் ஆசாமிகள்.
பர்சை பாதுகாக்க இதுவா இடம்... சிந்திப்பீரா பெண்களே...
— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
