PUBLISHED ON : மே 14, 2023

'தினமும், 10 பக்கங்களாவது வாசிக்காவிட்டால், அந்த நாள் பயனுள்ளதாகவே இருக்காது...' என்கிறார், 97 வயது, முன்னாள் மருத்துவர் சோமசுந்தரம்.
சென்னை, பெசன்ட் நகரில் வசிக்கும் இவர், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற இவருக்கு, புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும். தமிழில், சங்ககால இலக்கியம் முதல் கண்ணதாசன் வரையிலும், ஷேக்ஸ்பியர் முதல் ஷெல்லி வரை, ஆங்கிலத்தில் படித்துள்ளார்.
பணி ஓய்வுக்கு பின், 80 வயது வரை, மனநல மருத்துவராக மக்களுக்கு மருத்துவம் பார்த்தார். பின், அதை விட்டு, உண்ணும், உறங்கும் நேரம் தவிர, மீதி நேரத்தை புத்தகம் படிக்க செலவிட்டு வருகிறார். வீடு முழுக்க மர பீரோக்களும், அது நிறைய புத்தகங்களும் உள்ளன.
வயது மூப்பின் காரணமாக, காது கேட்கும் திறன் குறைந்து விட்டது; கண் பார்வையும் மங்கி வருகிறது. எங்கே வாசிக்க முடியாமல் போய்விடுமோ என்பதற்காக, 'விஷுவல் மேக்னிபையர்' என்ற, எலக்ட்ரானிக் கருவியை வாங்கி வைத்துள்ளார்.
இந்த கருவியை, 'ஆன்' செய்து, புத்தகத்தின் மீது கொண்டு சென்றால், சின்ன சின்ன எழுத்துக்களை கூட, பெரிதாக்கி காட்டும். இந்த கருவியை பயன்படுத்தி, தினமும், புத்தகத்தில், 10 பக்கங்களையாவது படித்து விடுகிறார்.
இவருக்கு தினமும், கொஞ்சம் தண்ணீரும், உணவும் போதும். ஆனால், புத்தகம் மட்டும் புதிது புதிதாக நிறைய வேண்டும். இலக்கியம், மருத்துவம் சம்பந்தமாக நிறைய படிப்பார்.
'மகாகவி பாரதியாரை, வறுமை தின்றதை விட, போதை வஸ்துகள் தின்றது தான் அதிகம். அவர் மட்டும் தன் நலனில் அக்கறை காட்டியிருந்தால், இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார். இன்னும் பல கவிதைகளை தந்திருப்பார்...' என்பது, இவரது கருத்து.
'இன்றைய இளைஞர்கள், மொபைல் போனிலேயே வாழ்கின்றனர். ஆனால், வாசிக்கின்றனரா என்றால் இல்லை... காரணம், நிமிடத்திற்கு நிமிடம் அவர்களது நேரத்தை கொள்ளை அடிக்க, அதில் பல விஷயங்கள் மாறி மாறி இடம் பெறுகின்றன. இது எப்போதும், மனதை பதட்டமாகவே வைத்திருக்கும்; மன அழுத்தத்திற்கும் ஆளாக நேரிடும்.
'ஆனால், புத்தகம் அப்படியல்ல. அதில் உள்ள கதாபாத்திரங்களுக்கு நீங்கள் கற்பனை வடிவம் கொடுத்து படிக்கும் போது, உள்ளத்திலும், உடலிலும் பரவசம் ஏற்படும். இதுதான் நல்லது.
'நான், 50 - 60 ஆண்டுகளுக்கு முன் படித்ததை கேட்டால் கூட, இப்போதும் சொல்வேன். காரணம், புத்தக அறிவு அப்படிப்பட்டது. ஆகவே, புத்தகத்தை அச்சு வடிவில் மட்டுமே படிக்க வேண்டும்...' என்கிறார்.
கதை, கட்டுரை, கவிதை என்று எழுத்தின் எல்லா திசையிலும் பயணிக்கும் இவர், இதுவரை, ஐந்து புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
தற்போது, தான் படித்த புத்தகங்களிலும், பார்த்த சினிமா, நாடகங்களிலும் உள்ள மனநலம் தொடர்பான விஷயங்களை தொகுத்து, தமிழில் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டு இருக்கிறார்.
படிக்க காத்திருப்போம்.
எம். ராகவேந்தர்
