PUBLISHED ON : மே 14, 2023

இளம் துறவி ஒருவர், அங்கே இருந்த ஓர் அன்னையின் முன் வந்து நின்றார்.
'அம்மா, நீங்கள் என்னை ஆசிர்வதிக்க வேண்டும்...' என்றார், பணிவோடு.
நிமிர்ந்து பார்த்தார், அன்னை.
'அம்மா... நான் வெளிநாடு போகிறேன். என் பயணம் நல்லவிதமாக அமைய வேண்டும். அங்கே நான் செய்கிற பணிகள் எல்லாமும் வெற்றிகரமாக முடிய வேண்டும். அதற்காகவே உங்கள் ஆசிர்வாதம் வேண்டி வந்திருக்கிறேன்...' என்றார்.
இவர் சொன்னதை, அன்னை, காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஏதோ சிந்தித்தபடி அமர்ந்திருப்பதாகவே தோன்றியது.
சற்று நேரத்தில், அவர் பார்வை, இவர் பக்கம் மெல்ல திரும்பியது. இதுதான் சமயம் என்று நினைத்து, மறுபடியும் தன் வேண்டுகோளை சொன்னார்.
இப்போதும், அன்னையின் முகத்தில் ஒரு சலனமும் இல்லை; ஏதோ யோசித்தார்.
சிறிது நேரத்திற்கு பின், 'மகனே, நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே...' என்றார்.
'அம்மா, என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள் செய்கிறேன்...' என்றார்.
'வேறு ஒன்றுமில்லை. இதோ பக்கத்தில் இருக்கிற இந்த அறைக்குள் போ. அங்கே கதவுக்கு பின்னால் ஒரு கத்தி இருக்கிறது. அதை எடுத்து வந்து என்னிடம் கொடு. அவ்வளவுதான்...' என்றார்.
உடனே, அந்த அறையை நோக்கி சென்றார், இளம் துறவி. போகும் போதே அவர் மனசுக்குள் கொஞ்சம் குழப்பம்.
'என்ன இது... நாம கேட்கறது ஆசிர்வாதம். இவங்க கேட்கறது கத்தி. ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாம இருக்கே?' என யோசித்தார்.
பிறகு, அதைப்பற்றி மேற்கொண்டு எதுவும் நினைக்காமல், அறைக்குள் போய், கதவுக்கு பின்புறம் இருந்த கத்தியை எடுத்து வந்து, 'இந்தாங்கம்மா கத்தி...' என்றார்.
கவனமாக தன் கையால் அதை வாங்கிக் கொண்டார், அன்னை.
'மகனே... உன் பயணம் நல்லபடியாக முடியும். போய் வா...' என, கையை உயர்த்தி, இளம் துறவியின் தலையில் வைத்து ஆசி வழங்கினார்.
அதன்பின், 'அம்மா... இந்த கத்திக்கும், உங்க ஆசிர்வாதத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு விளங்கலையே...' என, தன் குழப்பத்தை, அன்னையிடம் கேட்டார், இளம் துறவி.
'மகனே... நீ கத்தியை எடுத்து வந்து என்னிடம் கொடுக்கும்போது, கத்தியின் கூரான பக்கத்தை உன் பக்கம் இருக்கிற மாதிரி பிடித்துக் கொண்டு, கைப்பிடி இருக்கிற ஆபத்தில்லாத பகுதியை என் பக்கம் நீட்டி, ஒப்படைத்தாய்.
'இதிலிருந்து, எந்த ஒரு செயலை செய்கிற போதும், அதனால், ஏற்படுகிற தீமைகளை நீ ஏற்று, மற்றவர்களுக்கு நன்மையை செய்வாய் என்பதை புரிந்து கொண்டேன். இந்த உயர்ந்த குணம் எல்லாருக்கும் வராது...' என்றார், அம்மா.
'இதையெல்லாம் யோசித்து நான் அப்படி செய்யவில்லை. நீங்கள், கத்தியை என்னிடமிருந்து வாங்கும் போது கூரிய முனை உங்களை குத்திவிடப் போகிறதே என்பதற்காக, கைப்பிடியை உங்கள் பக்கம் நீட்டினேன். அவ்வளவுதான்...' என்றார்.
'உன்னை அறியாமலேயே மற்றவர்களுக்கு நன்மை செய்கிற இயல்பான குணம், உன்னிடம் இருக்கிறது. அந்த இயல்பு இன்னும் உயர்ந்தது. அந்த குணம் எப்பவும் உன்னை அடுத்தவர்களுக்கு தீங்கு செய்ய விடாது...' என்று சொல்லி, ஆசி கூறி வழி அனுப்பி வைத்தார், அன்னை.
பி.என்.பி.,
