PUBLISHED ON : ஏப் 12, 2020

அன்று பொது விடுமுறை என்பதால், மிருகக்காட்சி சாலையில் அதிக கூட்டம். நுழைவுச் சீட்டை வாங்கி, மகளுடன் உள்ளே சென்ற, அபர்ணா, அங்கே தென்பட்ட மனிதர்களை பார்த்து, லேசாய் ஏக்கப்பெருமூச்சு விட்டாள்.
அவளை தவிர மற்றவர்கள், ஏதோ ஒரு வகையில் திருப்தியாகவும், நிம்மதியாகவும் இருக்கின்றனர் என்று தோன்றியது. ஒருவேளை இந்த சிந்தனை பிரமையாக கூட இருக்கலாம்; ஆனால், அவள் மனம், இந்த உலகத்தில், தான் மட்டும் பெரும் கஷ்டத்தை அனுபவிப்பதாக நம்பியது.
மனிதக் குரங்குகள் அடைப்பட்டிருந்த பகுதியை பார்வையிட்டு திரும்பிய போது தான், அவனை பார்த்தாள். அடுத்த அடிக்கு இடம் பெயர மறுத்தன, கால்கள்.
சுரேந்திரன்... அவனே தான். அச்சு அசலாய்,கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது; யாரோ நண்பரோடு வந்திருக்கிறான்.
கண்களை விட்டு துாரமாக போக, சட்டென்று சுயநினைவு பெற்றவளாக விரைந்து, அவன் முன் நின்றாள்; கைகளை மார்புக்கு குறுக்காய் கட்டி, லேசாய் தலையை சாய்த்து, கன்னத்தில் குழி விழ சிரித்தாள்.
எதிர்பாராமல் வந்து நின்றவளை, ஒரு நிமிடம் உற்று, அதிர்ச்சி வாங்கி, இயல்பாக சிரித்தான், சுரேந்திரன்.
கண்களில் சந்தோஷமும், இன்னபிற உணர்ச்சிகளும் ஒருசேர, ''ஹே, அபர்ணா... எப்படி இருக்கே... நீ எங்கே இங்கே... ரொம்ப, 'சர்ப்ரைசா' இருக்கு,'' என்றான்.
சுரேந்திரனுடன் வந்திருந்த நண்பன், நாசூக்காய் ஒதுங்கி நின்றான்.
''அபர்ணா, என் நண்பர், பாலா. மதுரையில், வேலையில இருந்தப்போ பழக்கம். ரொம்ப நெருக்கமானவன்,'' அறிமுகப்படுத்தினான்.
''சுரேந்திரன், இது, திவ்யா... என் பொண்ணு.''
ஒரே மாடியில், சுரேந்திரனின் குடும்பமும், அபர்ணா குடும்பமும் இருந்தது.
இரு குடும்பங்களுக்கும் உள்ள நட்பிற்கு அடையாளமாய், சுரேந்தர் - அபர்ணா திருமணம் பேச்சு நடந்தது. விளையாட்டாய் பேச ஆரம்பித்து, அவர்களுடைய மனங்களில் ஒருவிதமான, 'அரேஞ்டு லவ்'வை, பெரியவர்களே உருவாக்கி இருந்தனர்.
அது ஒரு விதமான சுகமான காலம். சுரேந்திரனை அனைவருக்கும் பிடிக்கும். ரொம்பவும் தன்மையானவன்; அதிர்ந்து பேசத் தெரியாது; எதையும் ஆழ்ந்து சிந்திப்பான்.
பெரியவர்கள் துாவிய விதை, இருவரது மனதிலும் வேர் பிடிக்க துவங்கி இருந்த நேரம். சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்றது, சோதனை.
நட்பை உறவாக்க முயற்சித்ததோடு நின்றிருக்கலாம். அதை, தொழிலிலும் கொண்டு வர முயற்சித்து, வேறு விதமான விளைவை ஏற்படுத்தி, இரண்டு குடும்பங்களிலும் நிரந்தர பகையை உண்டாக்கியது.
அவர்கள் நட்டு வைத்த செடியை அவர்களே பிடுங்கி வீசி விட்டால், எல்லாம் சரியாகும் என்று நினைத்தனர்.
அபர்ணாவிற்கு வேகமாய் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க, அவள், சுரேந்தரின் முன் வந்து நின்று, 'என்னை எங்கயாவது கூட்டிட்டு போயிடு, சுரேந்தர். இவங்க நினைக்க சொன்னதும் நினைக்கவும், மறக்கச் சொன்னதும் மறக்கவும், நான் ஒண்ணும் பொம்மை இல்ல...' என, அழுதாள்.
அன்றைக்கும் பக்குவமாய், 'குடும்பமும், உடல் மாதிரி தான். ஏதாவது ஒரு உறுப்பு ஒத்துழைக்காம போனாலும், முழு உடம்புக்கும் கஷ்டம் தான். வீட்டுல சொல்றபடி கேளு, அபர்ணா. சந்தோஷமா வாழ்றதை விட, நிம்மதியா வாழணும். அதுதான் புத்திசாலித்தனம்...' என்றான்.
இரு குடும்பங்களும் இடம் பெயர்ந்தன. கால ஓட்டத்தில் ஒரு பெரிய சுழற்சிக்கு பின், இருவரும் இன்று தான் சந்திக்கின்றனர்.
பாலாவோடு ஐக்கியமாகி இருந்தாள், திவ்யா. எடுத்து வந்த சப்பாத்தி ரோலை பகிர்ந்து கொண்டாள்.
அவர்கள் இருவரும் தள்ளி அமர்ந்து விளையாட, அமைதியாக ரசித்தபடி இருந்தான், சுரேந்தர்.
''லைப் எப்படி போகுது, சுரேந்தர்... வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க.''
''நாட் பேட்... அப்பா - அம்மா, அக்காவோட கனடா போயாச்சு. நானும், என் குடும்பமும் இங்கே.''
அமைதியாக இருந்தாள். அதற்குள் அலைபேசி சிணுங்கியது. அழைப்பு எண்ணை பார்த்ததும், முகம் சுருங்கியது. சில வினாடி தயங்கிய பின் அழைப்பை எடுத்து, சற்று விலகி சென்று கொஞ்சம் காரசாரமாய், கண்ணீராய், ஆக்ரோஷமாய் பேசி, இணைப்பை துண்டித்தாள்.
அவள் வாழ்க்கையில் நிறைய பிரச்னை இருப்பதை, யூகிக்க முடிந்தது. எதையும் கவனிக்காதவன் போல் இருந்தான், சுரேந்தர்.
பேசி முடித்ததும், அருகில் வந்து அமர்ந்தாள். கண்கள் அழுது சிவந்திருந்தது. அவள் மனம் எல்லாவற்றையும் கொட்டிவிட காத்திருப்பது புரிந்தது.
''நிறைய பிரச்னை, சுரேந்தர். எனக்கு வாழவே பிடிக்கல. இப்போ கூட குழந்தையை கூட்டிட்டு எங்கயாவது போயிடலாம்ன்னு தான், யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி வந்துட்டேன். அதான், 'எங்கே போனே...'ன்னு கேட்டு, ஒரே திட்டு.
''துளிகூட பொருத்தமில்லாத துணை. மனுஷங்களை, குறிப்பா, பெண்களை மதிக்கத் தெரியாது அவருக்கு. நான் சுயமா சிந்திக்கிறதை ஏதோ பண்பாட்டு அத்துமீறல்ன்னு நினைக்கிறார்.
''என் நண்பர் வட்டாரத்தில் இதைப் பத்தி பேசினா, 'நீயேன் இன்னும் அங்கே கிடந்து கஷ்டப்படற, துாக்கி போட்டுட்டு வா...'ன்னு எனக்கு, 'அட்வைஸ்' பண்றாங்க. என் பொண்ணுக்காக தான், நான் தயங்கிட்டு இருக்கேன்,'' என்றாள்.
''ஆனா, அதே நண்பர்கள், தன் வாழ்க்கையில இது மாதிரி சூழ்நிலை வந்தால், இதே முடிவை எடுக்க மாட்டாங்க. தன் வீட்டு பெண்களுக்கு இந்த மாதிரி அதிரடியா முடிவெடுக்க சொல்லி, 'அட்வைஸ்' பண்ணவும் மாட்டாங்க,'' என்றான், மென்மையான புன்னகையோடு.
''அதுக்கு... ஏதோ தலையெழுத்துன்னு தான் வாழ்ந்தாகணுமா... இது, பத்தாம் பசலித்தனமான அறிவுரையா படலயா, சுரேந்தர்,'' என்றாள் காட்டமாக.
எழுந்து, பின்பக்க மண்ணைத் தட்டிவிட்டு கிளம்ப ஆயத்தமானான்.
''ஏன் கிளம்பிட்டீங்க, சுரேந்தர்... மிருகங்களை பார்க்க வந்துட்டு, பார்க்காமலே திரும்பற மாதிரி இருக்கு... என்னாலயா,'' என்றாள் எரிச்சலாக.
''சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. பார்க்க வேண்டிய மிருகங்கள் எல்லாத்தையும் பார்த்தாச்சு... இனி, பார்க்க வேண்டியதில்லைன்னு நினைக்கிற மிருகங்களை பார்க்காம போயிட்டு இருக்கேன்.''
''புரியல.''
''ஒண்ணும் காரணமில்ல, அபர்ணா. எனக்கு பொதுவா இங்கே வர்றதுல ஈடுபாடில்லை. கூண்டுக்குள்ள இருக்கிற அவங்களுக்கும், நமக்கும் பெருசா வித்தியாசமில்ல... கம்பி வலைக்குள்ள இருக்கிற வரை தான், மிருகங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். எப்போ அந்த வலையை உடைச்சு நொறுக்கி வெளியே வருதோ, அந்த நிமிஷம் நாம எல்லாம் அதுக்கு ஒரு பொருட்டே இல்லை.
''நம் உணர்ச்சிகளும் அப்படித்தான். நெறிமுறைகளை உடைச்சு வரத் தயாராகிட்டா, அப்புறம் எதைப் பத்தின சிந்தனையும் நமக்கு இருக்காது. நாம மிருகங்களை வேடிக்கை பார்க்கிறோம், அதுங்க மனுஷங்களை... வேறெதுவும் வித்தியாசமில்லை,'' சொல்லி சிரித்தான்.
பேசிக் கொள்ளாமலே வெகு துாரம் நடந்தனர்.
''எனக்கு பிரச்னைன்னு சொன்னேன். என்னன்னு கூட கேட்கலயே, சுரேந்தர்... என்கிட்ட பாராட்ட, குறைந்தபட்ச நட்பு கூடவா உங்ககிட்ட இல்ல,'' என்றாள் குரல் உடைய.
''நிச்சயமா இருக்கு, அபர்ணா. ஆனா, உன் குடும்ப வாழ்க்கையை தெரிஞ்சுக்கிற ஆர்வமில்லை. என்னைப் பொறுத்தவரை, உறவில்லாத ஆண்களிடம், பெண்கள் ஆறுதல் தேடக் கூடாதுன்னு தான் சொல்வேன். இறுதியில், அவங்களுக்கு தான் பிரச்னையா முடியும்.
''இன்னொரு பக்கம், எனக்கு, உன்னை நல்லா புரியும். உனக்கான முடிவை சிந்தித்து எடுக்கிற தைரியமும், தெளிவும் உன்னிடம் இருக்கு. அப்படி இருக்கையில் என் உபதேசமும், ஆறுதலும் தேவையில்லைன்னு நம்புறேன்.''
அவன் சொல்ல சொல்ல, சுரீரென அவளுக்கு இதயத்தில் சூடு இழுத்தது போல் அவமானமாக இருந்தது. விடை பெறும் வரைக்கும் அமைதியாகவே வந்தாள்.
''உன் முகவரி சொல்லு, அபர்ணா. மனைவி, குழந்தைகளை ஒருநாள் அழைச்சுட்டு வர்றேன். என் மனைவி, ஒரு காணக்கிடைக்காத பொண்ணு. ரொம்ப அற்புதமான மனுஷி,'' என, அவன் கண்களை மூடி லயிக்க, அது, அவளுடைய, 'ஈகோ'வை சரியாய் பதம் பார்த்தது.
''தேவையில்லை, சுரேந்தர். இதேபோல என்னைக்காவது வழியில பார்த்தா பேசிக்கலாம். மிருகங்கள் கூண்டுக்குள்ள இருக்கிற வரைக்கும் தான் பாதுகாப்பு. அது எனக்கும் தெரியும்,'' அழுத்தமாய் சொல்லி, 'விடுவிடு'வென நடந்தாள்.
அவள் சென்ற திசையை பார்த்தபடி அமைதியாக நின்றான், சுரேந்தர்.
''ஏண்டா... இப்படி அடுக்கடுக்காய் பொய் சொன்னே... குடும்ப சூழ்நிலையால கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியாம நிற்கிற நீ, எதுக்குடா இத்தனை பொய் சொன்னே... தவிர அந்த பொண்ணுக்கு நிறைய பிரச்னை போல தெரியுது. உன்கிட்ட சொன்னா, நீ ஆறுதலா நாலு வார்த்தை பேசி அனுப்பாமே, எதுக்கு இப்படி பேசினே,'' ஆதங்கமாய் கேட்டான், பாலா.
''இல்ல, பாலா... பெண்கள் எப்பவும் பலமானவங்க தான். அவளுடைய உணர்ச்சி கூட, ஆண் விளையாடாத வரை. அவங்க பிரச்னைகளை தாண்டி வரவும், ஜெயிச்சு வரவும் அவங்களுக்கு தைரியம் இருக்கு. நான் இன்னைக்கு ஆறுதல் சொன்னா, அதே ஆறுதலை தினம் தினம் மனசு எதிர்பார்க்கும்; அதுதான் இயற்கை.
''நான், அவளோட சந்தர்ப்பத்தை உபயோகிச்சுக்க விரும்பல. பிடிச்சா வச்சுக்கவும், பிடிக்காததை துார வீசிட்டு தைரியமா வாழவும், அபர்ணாவுக்கு துணிவு இருக்கு. ஒரு பெண்ணின் குடும்ப வாழ்க்கையில எப்பவும் அடுத்த ஆண் வடிகாலா இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது.
''அவளை பார்த்துக்கவும், பாதுகாத்துக்கவும் கூடிய தெளிவு அவகிட்டயே இருக்கு. நாம வீட்டுக்கு கிளம்பலாமா,'' என்ற நண்பனை, பெருமிதமாய் பார்த்தான், பாலா.
எஸ். யாஸ்மி