sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நாடு சுற்றலாம் வாங்க! (2)

/

நாடு சுற்றலாம் வாங்க! (2)

நாடு சுற்றலாம் வாங்க! (2)

நாடு சுற்றலாம் வாங்க! (2)


PUBLISHED ON : ஏப் 12, 2020

Google News

PUBLISHED ON : ஏப் 12, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாயின் சுற்றுலா ஈர்ப்புகளில் முக்கியமானது, சிறு கப்பல்களில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்களில், இரவு உணவு அருந்துவது. க்ரீக் மற்றும் மரீனா ஆகிய இரண்டு இடங்களில் இதுபோன்ற கப்பல் உணவகங்கள் உள்ளன.

பாலைவன கிராமப்புறங்களில் வசித்து வந்த அரேபியர்கள், நகர பகுதிக்கு வந்து குடியேறிய இடமே, 'பர் துபாய்!' அதாவது, பழைய துபாய் என, அழைக்கப்படுகிறது.

'தேய்ரா' எனப்படும் புதிய துபாய், திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பகுதி. தற்போதைய நவீன கட்டடங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள் போன்றவை, புதிய துபாயில் உள்ளன.

க்ரீக் பகுதியில் உள்ள கப்பல் உணவகங்களில், கட்டணம் மலிவு; மரீனா பகுதியில், கட்டணம் அதிகம்.

எங்களுக்கு, க்ரீக் பகுதியில் உள்ள ஒரு சிறு கப்பலில் தான், இரவு உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இரவு, 8:00 - 10:00 மணி வரை என, இரண்டு மணி நேரம் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

சிறு கப்பல் என்று குறிப்பிடப்பட்டாலும், இரண்டு அடுக்குகளுடன் மிகப்பெரியதாகவே இருந்தது. ஜன்னல் கண்ணாடி தடுப்புகளுடன் கீழ்தளமும், கூரையுடன் கூடிய திறந்த வெளியாக மேல் தளமும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இரண்டு தளங்களிலும் சாப்பாட்டு மேஜைகள், இருக்கைகள் போடப்பட்டு, 'பபே' உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்களுக்கான உணவு, மேல் தளத்தில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

க்ரீக் பகுதியில், இதுபோன்று, 30 கப்பல் உணவகங்கள் மிதந்து கொண்டிருந்தன.

'பபே' உணவாக, நுாடுல்ஸ், சாதம் போன்றவைகளுடன், அரேபிய பாரம்பரிய உணவு வகைகளில் சிலவும், இரவு, 8:30 மணிக்கு அங்கே வைக்கப்பட்டிருந்தன.

காலையும், மதியமும், தென் மாநில உணவுகளையே சாப்பிட்டதால், அரேபிய வகை உணவுகளை தேடினேன். 'மஜிபூஸ்' எனும் அரேபிய வகை பிரியாணி, மசாலா சேர்த்து சமைக்கப்பட்ட, கப்ஸா சோறு, கபாப் கோழி இறைச்சி, மீன் ப்ரோஸ்ட், பார்லியில் செய்த ஒரு வகை ரொட்டி போன்றவற்றை, தட்டில் நிறைத்துக் கொண்டேன்.

எங்கள் குழுவில் இருந்த கங்காவும், வெங்கடாசலமும், அவர்களுக்கு அருகில் எனக்காக ஒரு இருக்கையை பிடித்து வைத்திருந்தனர். அதில் அமர்ந்து, அரேபிய உணவை சுவைக்க ஆரம்பித்தேன்.

நேரம் செல்லச் செல்ல, வீசும் காற்றில், குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது.

உணவக கப்பலின் ஓரத்து இருக்கையை ஆவலோடு ஆக்கிரமித்திருந்தவர்கள், குளிர் தாங்காமல், கையிலிருந்த கர்ச்சீப்பை தலையில் கட்டியும், துப்பட்டாவால் போர்த்தியும் சமாளித்த விதம், சற்றே நகைப்பூட்டியது.

துபாய் செல்ல வேண்டும் என்றதும், அங்கு நிலவும் தட்பவெப்பம் பற்றி, 'இன்டர்நெட்'டில் பார்த்து அறிந்து கொண்டிருந்த நான், கம்பளி உடையை எடுத்து வந்திருந்தேன். என் முதுகு பையில் வைத்திருந்ததை எடுத்து, அணிந்து கொண்டேன்.

'இப்படி குளிரும் என, டிராவல் ஏஜன்சியில் சொல்லவே இல்லையே...' என்று, வருத்தப்பட்டார், வெங்கடாசலம்.

இந்த உணவக கப்பலின் வித்தியாசமான அனுபவம் மிகுந்த இரவு விருந்துடன், அன்றைய பொழுது நிறைவுற்றது.

நாங்கள் தங்கியிருந்தது, நட்சத்திர விடுதி என்பதால், காலை உணவு அங்கே இருந்த உணவகத்தில் இலவசமாக வழங்கப்பட்டது.

இரண்டாம் நாள், துபாயை சுற்றி பார்க்க, அழைத்துச் செல்லப்பட்டோம். 14 பேர் அமரக்கூடிய, பெரிய வேனில் எங்கள் பயணம் துவங்கியது. கேரளாவை சேர்ந்த, நவ்ஷாத் என்ற ஓட்டுனர், வேனை ஓட்டினார். மலையாளம் கலந்த தமிழில் நன்றாக பேசினார்.

எங்களோடு வந்திருந்த சுற்றுலா வழிகாட்டி, சர்புதீன், துபாய் குறித்த விபரங்களை, இனிய தமிழில் விளக்கமாக தெரிவித்தார். அவரிடம் பேசியபோது, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்தவர் என்பதையும், 12 ஆண்டுகளுக்கு முன், துபாய் வந்து, ஏழு ஆண்டுகளாக சுற்றுலா வழிகாட்டியாக இருப்பதையும் அறிந்து கொண்டேன்.

சிறிது நேரத்திலேயே நாங்கள், 'பர் துபாய்' எனப்படும், பழைய துபாய் பகுதியை அடைந்தோம். துபாயின் சரித்திர பெருமைகளை விளக்கக் கூடிய மியூசியங்கள், அங்கே இருந்தன.

புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும், புராதன அரேபிய கட்டட கலையின் பழமை மாறாத தோற்றத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேரமின்மை காரணமாக, வாகனத்தில் இருந்தபடியே சுற்றி வந்தோம்.

துபாயின் மக்கள் தொகையில், 70 சதவீதம் வெளிநாட்டவர்களே. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள், இங்கே பல்வேறு வகையான வேலைகளை செய்து வருகின்றனர்.

ஜுமைரா கடற்கரை பகுதியில், செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள, 'பாம் ஜுமேரா' தீவுகளை காண சென்றோம்.

கடல் பகுதியில், ஈச்ச மரம் போன்ற வடிவமைப்பில் மணலையும், பாறைகளையும் கொட்டி, அதில், சாலைகள், கட்டடங்கள் ஆகியவற்றை அமைத்து, இந்த, 'பாம் ஜுமேரா' தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த தீவின் உருவாக்கத்திற்கு ஏராளமான மண்ணும், ஏழு மில்லியன் டன் (1 மில்லியன் - 10 லட்சம்; டன் - 1,000 கிலோ) பாறைகளும் பயன்படுத்தப்பட்டதாக கூறுகின்றனர். ஏறத்தாழ, 40 ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பில், இந்த தீவு வடிவமைக்கப்பட்டுள்ளது. வான்வெளியில் இருந்து பார்க்கும்போது, 'பாம் ஜுமேரா' தீவு, ஒரு ஈச்ச மரத்தின் தோற்றத்தில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

துபாயை சுற்றி பார்த்த பின், மதியம், திண்டுக்கல் தலப்பாகட்டி உணவகத்தில் சாப்பிட்டோம். மதிய உணவுக்கு பின், இரண்டு மணி நேரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். ஓய்வுக்கான காரணத்தை, சர்புதீன் சொன்னபோது, திகீரென்றது.

'மாலையில், பாலைவன சபாரி செல்ல வேண்டும். அங்கே, 'லேண்ட் க்ரூசர்' வாகனத்தில், பாலைவன மண் திட்டுகளின் மேல் சாகச பயணம் இருக்கும். அப்போது, சிலருக்கு வாந்தி வரக்கூடும். அதனால், சற்று ஓய்வு எடுத்து, உணவு செரித்த பின், கிளம்பலாம்...' என தெரிவித்தார், சர்புதீன்.

ஓய்வுக்கு பின், பாலைவன பயணத்திற்காக புறப்பட்டோம். நாங்கள் தங்கியிருந்த ஓட்டலிலிருந்து, ஒரு மணி நேரத்திற்கு மேல் பயணித்தோம்.

கண்ணுக்கெட்டிய துாரம் வரை, சிவந்த மணல் திட்டுகளுடன் பாலைவனம் இருந்தது. திரைப்படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த பாலைவனத்தை நேரில் கண்டு மகிழ்ந்தோம்.

நாங்கள் வந்த வாகனத்தை, சாலையோரம் நிறுத்தி விட்டு, 'லேண்ட் க்ரூசர்' எனும் காரில் பயணிக்க தயாரானோம். ஒரே நேரத்தில், நான்கு சக்கரங்களும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்ட, மணலில் சர்வ சாதாரணமாக செல்லக்கூடிய அந்த வாகனத்தில் ஏறிக்கொண்டோம்.

ஐந்து பேருக்கு ஒரு வாகனம் என்ற ரீதியில், இரண்டு வாகனங்கள் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன் ஓட்டுனர்களும் மலையாளிகளாகவே இருந்தனர். அவர்கள், நன்றாகவே தமிழ் பேசினர்.

பாலைவன சாகச பயணத்திற்கு, அந்த வாகனத்தின் ஓட்டுனர், எங்களை தயாராக்கினார்.

எந்த ஒரு பாதையும் இல்லாத அந்த மணல் திட்டுகளின் மேல் புழுதி பறக்க, ஏறி இறங்கியும், சரிந்த நிலையிலும் அந்த வாகனம் பயணித்தது. கிட்டத்தட்ட ஒரு, 'ரோலர்கோஸ்டரில்' சாகச பயணம் செய்தது போன்ற அனுபவத்தை எங்களுக்கு கொடுத்தது.

தொடரும்.

ஜே.டி.ஆர்.,







      Dinamalar
      Follow us