
ஆர்யா சகாய முல்யா சுகியர்தோ! என்ன, பெயரை படிக்கும்போதே தலை சுற்றுகிறதா? இந்த ஏழு வயதுச் சிறுவனின் சாதனையை கேட்டால், மயக்கமே வந்து விடும். ஆர்யா, இந்தோனேசியாவைச் சேர்ந்த சிறுவன். இவன் தந்தை, மலையேற்ற வீரர்.
இதனால், இந்த சிறுவனுக்கும், பால் மணம் மாறாத வயதிலேயே மலையேறும் ஆசை வந்து விட்டது. தன் தந்தையிடம் கற்றுக் கொண்ட வித்தையை உதவியாக வைத்து, இதுவரை உலகின் மிகவும் பிரபலமான, 14 மலைச் சிகரங்களின் உச்சியை தொட்டு விட்டான். ஜாவாவில் உள்ள செமரு, லோம்போக்கில் உள்ள ரிஞ்சனி ஆகியவை, இந்த சிறுவனின் காலடிப்பட்ட மலைச் சிகரங்களில் முக்கியமானவை. மூன்று வயதாகும்போதே, யாருடைய உதவியும் இன்றி, மலையேறத் துவங்கி விட்டான்.
தன் சாதனைத் தொடர்களின் அடுத்த கட்டமாக, ரஷ்யாவில் உள்ள மிக உயர்ந்த எல்பரஸ் மலையில், ஏறத் திட்டமிட்டு உள்ளான். ஐரோப்பா - ஆசியா எல்லையில் உள்ள இந்த மலைச் சிகரம், ஐரோப்பாவின் மிக உயரமான மலை. கடல் மட்டத்தை விட, 18 ஆயிரத்து, 500 அடி உயரமானது. 22 பனி அடுக்குகளை கொண்டது. பனிச் சரிவு, பனிப் புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கு பெயர் பெற்றது. ஆனாலும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், இந்த மலையில் ஏறிச் சாதனை படைக்க திட்டமிட்டுள்ளான், ஆர்யா.
— ஜோல்னா பையன்.

