PUBLISHED ON : ஜூலை 16, 2023

''வாழ்க்கையே வெறுக்குது, ஏதாவது பண்ணிக்கலாமான்னு கூட தோணுது சார்...'' பரணியின் முகத்திலும், வார்த்தைகளிலும் ஏராளமாக வழிந்தது விரக்தியும், வெறுப்பும்.
அலுவலக பேருந்தில், தினம் ஒன்றாக அமர்ந்து பயணிப்பர், பரணியும், கணேசனும். இருவரும் ஒரே பகுதியில் வசிப்பதால் ஏற்பட்ட நட்பு, ஆறு மாத காலமாக சிறிது சிறிதாக நெருங்கிக் கொண்டிருந்தது.
அலுவலகத்தில் இருவரும் வெவ்வேறு பிரிவு என்றாலும், இப்போது தான், கணேசன் வசிக்கும் பகுதிக்கு குடி வந்திருந்தான், பரணி. ஆறு மாதமாக பழகினாலும், அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவர்களது மனங்கள் இன்னும் நெருங்கவில்லை.
அலுவலக பேருந்தில் பயணிக்கும் நேரத்தில், அலுவலகம் மற்றும் பொதுவான செய்திகள் மீதான பரிமாற்றங்கள் மட்டுமே, அவர்களின் சம்பாஷனைகளாக இருக்கும்.
''ஏன் தம்பி, அப்படி என்ன உங்களுக்கு சோகம். நல்ல அழகான மனைவி, வேலைக்கு போய் சம்பாதிக்கிறாங்க. குழந்தைகளையும் பார்த்து, வீட்டை நிர்வகிப்பதெல்லாம் பெரிய விஷயம். குழந்தைங்க ரெண்டும் லட்டு மாதிரி, கை நிறைய சம்பளம். வேற என்ன வேணும்?'' என்றார், கணேசன்.
''அட போங்க சார்... காலையில எழுந்தா, சமையலுக்கு உதவ சொல்லி ஒரே, 'டார்ச்சர்!' தாமதமா எழுந்தா, ஒரே கத்தல். குழந்தைகளை குளிப்பாட்டணுமாம், தோசை ஊத்தணுமாம், இவ வளர்க்கிற செடிகளுக்கு, நாள் தவறாமல் தண்ணி ஊத்தணுமாம். பெரிய மகாராணி மாதிரி, ஏகப்பட்ட நிபந்தனை போடுறா சார்,'' என்றான், பரணி.
''ஏம்பா குடும்பம்ன்னு இருந்தா, இதெல்லாம் செஞ்சு தானே ஆகணும். அவள் மட்டும் அத்தனை வேலைகளையும் செய்ய, உனக்கு என்ன அடிமையா?''
''ஐயோ, நான் அந்த அர்த்தத்துல சொல்லல, சார். 10வது படிக்கிற வரைக்கும், எனக்கு ஊட்டி விட்டு, வாயை தொடைச்சு விடுவாங்க. ஒரு டம்ளர் கூட எடுக்க விட மாட்டாங்க, எங்க அம்மா.
''காலையில, 5:00 மணிக்கு எழுந்து, என்னையும், தம்பியையும் கிளப்பி விடுவதிலிருந்து, அப்பாவுக்கு தேவையானதை கவனிச்சு அனுப்புற வரை, எங்க வீட்டுல எல்லாமே, எங்கம்மா தான் செய்வாங்க.
''லஞ்ச், டிபன் எல்லாம் பிரமாதமா பண்ணுவாங்க. அத்தனை வேலைகளையும் முடிச்சுட்டு, சாயந்தரம் நாங்க வரப்போ, களைப்பா இருந்தாலும், முகம் மலர்ந்து சிரிப்பாங்க. இத்தனைக்கும் எங்க வீட்டுல வேலை ஆள் யாரும் இல்லை.
''ஆனால், இங்க வேலைக்கு ஆள் வெச்சாச்சு. இருந்தாலும் என்னை போட்டு பிழிஞ்சு எடுக்குறா, சார். எனக்கு சத்தம் போட்டு பேச வராது. எல்லாத்துக்கும் அமைதியா தலை குனிஞ்சு போயிடுவேன். அப்படித்தான் வளர்த்திருந்தாங்க, எங்க அம்மா.
''ஆனா, இவ எப்ப பாரு, அடுத்தவங்களுக்கு கேட்கிறா மாதிரி சத்தமா பேசுறா... நீயா, நானான்னு சமத்துவம் பேசுறா... இன்னிக்கு, எல்லாரும் புறப்பட்டு வெளியே கிளம்புற சமயம், கை பட்டு தேங்காய் எண்ணெய் கீழே சிந்திடுச்சு. அத்தனை பேச்சு பேசுறா.
''எனக்கு கோபம் வருமா, வராதா சொல்லுங்க சார்... சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டா என்னதான் செய்யிறது!''
பெற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் அடக்கி வைத்திருந்த அத்தனை ஆவேசங்களும் பரணியிடமிருந்து வெளி வந்தது.
''எல்லாம் புரியுது. நீங்க வளர்ந்த விதமும், உன் மனைவி வளர்க்கப்பட்ட விதமும் வேறு மாதிரி. அதனால் தான் இத்தனை கோபங்களும், குறைகளும். உங்க ரெண்டு பேருக்குமே இன்னும் எவ்வளவோ அனுபவங்கள் காத்துக் கிடக்கு.
''அதைவிட்டு, இப்படி வாழ்வே மாயம்ன்னு பேசிட்டு இருக்காதீங்க. அன்னைக்கு கூட எவ்வளவு அழகா சிரிச்சுகிட்டு, ஒருத்தர் கையை ஒருத்தர் புடிச்சு, குழந்தைகளை கூட்டிக்கிட்டு, 'வாக்கிங்' போனீங்க.
''ஆகா, அருமையான ஜோடின்னு நானே ஆச்சரியப்பட்டேன். இந்த மாதிரியெல்லாம் பேசாம, மனச, 'ரிலாக்ஸ்' ஆக்கிக்கிட்டு, வேலையை பாருங்க. என்ன ஒண்ணு, உங்கம்மா சின்ன வயசுலயிருந்தே, தன் வேலையை தானே செய்ய பழக்கி இருக்கலாம். இப்ப இதெல்லாம் உங்களுக்கு கஷ்டமா தெரியுது.
''பரணி, இதுவரைக்கும் நான் உங்களை என் வீட்டுக்கு கூப்பிடலை. இன்னிக்கு சாயந்தரம் என் வீட்டுக்கு வாங்க. ஒரு கப் காபி சாப்பிட்டு போகலாம்,'' என்றார், கணேசன்.
''சரிங்க சார். உங்க கூட பேசினதுல மனசு கொஞ்சம் லேசாயிட்டது,'' என்றான், பரணி.
அலுவலகம் வந்ததும், இருவரும் இறங்கினர்.
மாலை அலுவலகம் முடிந்தது.
பரணிக்குள் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. 'கொரோனா' காலம் வந்தது முதல், யார் வீட்டுக்கும் செல்லாமல், ஒருவித விரக்தி மனப்பான்மையில் இருந்தான். கணேஷின் அழைப்பு, இனிய அனுபவத்தை தரப்போவதாக எண்ணி, உற்சாகமானான்.
கணேஷ் குடும்பத்தை பற்றி எதுவும், அவர், தன்னிடம் பேசியதில்லை என்பது கவனத்தில் வர, வெகு ஆவலுடன் அவருடன் சென்றான், பரணி.
''வாங்க பரணி, 'லிப்ட்'ல போயிடலாம். நாலாவது மாடியில தான் என் வீடு,'' என்றார், கணேஷ்.
அழைப்பு மணியை அழுத்தியதும், கதவு திறந்த முதிய பெண்மணியின் புன்னகை அழைப்பு, பரணியை நெகிழ வைத்தது.
''அம்மா, இவர் பரணி. அலுவலக நண்பர். இதே பகுதியில் தான் குடியிருக்கிறார். சூடா ஒரு கப் காபி போட்டு வா...'' என்றவர், பரணியை பார்த்து, ''காபி குடிப்பீங்கதானே பரணி?'' என்றார்.
''ஆஹா... பேஷா... நல்ல பில்டர் காபி சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு. எல்லாம் என் அம்மாவோட போயாச்சு...'' என்றான், பரணி.
கணேஷின் தாய் சிரித்தபடியே, ''கவலைப்படாதீங்க தம்பி... உங்க அம்மா போலவே பில்டர் காபி தரேன்,'' என்றார்.
''பரணி, ஒரு அஞ்சு நிமிஷம், 'பிரெஷ் அப்' ஆகிட்டு வரேன்.''
''சரிங்க சார்!''
சமையல் அறையிலிருந்து காபியின் மணம், பரணிக்குள் அம்மாவை நினைவுக்கு கொண்டு வந்தது.
''தம்பி, இந்தாங்க எடுத்துக்கங்க...'' என்றார், கணேஷின் அம்மா.
காபி டபராவை வாங்கியவன், ''நன்றி மா...'' என்று, காபியை ருசித்தான்.
'ஆஹா... ஒவ்வொரு துளியும் உள்ளே இறங்கும்போது அமிர்தமாய் இன்னும் வாழ வேண்டும் என்று நினைக்க வைக்கிறதே... இதற்காகவே வாழணும் போலிருக்கே...' என, நினைத்துக் கொண்டான். அவனையும் அறியாமல் மீண்டும், ''அம்மா, மிக்க நன்றி...'' என்றான்.
'பிரெஷ் அப்' ஆகி வந்த கணேஷ், அம்மா தந்த காபியை ருசித்தார்.
பரணியின் பார்வை, வீட்டை சுற்றி வலம் வந்தது. சிறியதாக இருந்தாலும் நேர்த்தியாக இருந்தது, வீடு. அவன் பார்வை சுவரில் மாட்டியிருந்த, ஜோடியாக நின்ற கோலத்தில் கணேஷும், அவர் மனைவியும் இருந்த புகைப்படத்தில் நிலைத்தது.
கணேஷ் மனைவியின் அம்சமான முகமும், இருவரின் புன்னகையும், யாரையும் ஒரு நிமிடமாவது அப்படத்தையே திரும்ப திரும்ப பார்க்க வைக்கும்.
''வந்ததிலிருந்து பார்க்கிறேன். இன்னும் உங்க மனைவியை காணோம். எங்கே வெளியில போயிட்டாங்களா,'' என்றான், பரணி.
''கொஞ்சம் வாங்க, பரணி. என் மனைவி உள்ளேதான் இருக்காங்க,'' என்ற கணேசை பின் தொடர்ந்தான், பரணி.
அங்கே அவன் கண்ட காட்சி. நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. கண்கள் நிலைகுத்த, உறைந்து போனான். அழகான அம்சமான உருவம், உடலில் ஆங்காங்கே சொருகியிருந்த மருத்துவ சாதனங்களுடன் நீர்ப் படுக்கையில், அழிந்த வண்ண சித்திரமாக உருக்குலைந்திருந்தது.
''என்ன அப்படி பார்க்கறீங்க... இவங்க தான் என் மனைவி. நாலு வருஷத்துக்கு முன், ஒரு விபத்துல தலையில் அடிபட்டு, தன் மொத்த இயக்கத்தையும் நிறுத்திட்டாள். உயிர் மட்டும் தான் தங்கியிருக்கு.
''நான் நேசித்த இந்த உடல், இவ விடற மூச்சு காத்துதான், எனக்கு ஆக்சிஜன். அவளால எதுவுமே செய்ய முடியாது. போட்டது போட்டபடி கிடப்பில் இருக்கும். இவளுக்காக இதுவரை செய்த மருத்துவ செலவு எல்லாம், பல லட்சங்களை தாண்டும். சம்பாதித்து வாங்கிய சொத்தையெல்லாம் வித்துட்டேன்.
''என்னைக்காவது பழைய நிலைக்கு திரும்ப மாட்டாளா என்ற நப்பாசையில் வாழ்ந்துட்டு இருக்கேன். மகாலட்சுமி மாதிரி கை புடிச்சு வீட்டுக்கு வந்தவ, மண்ணு மாதிரி கிடந்தா, துாக்கி போட முடியுமா...
''உயிருள்ள வரை இணைந்தே இருப்போம்ன்னு, அக்னி சாட்சியா தாலி கட்டியவன், பாதியில விட்டுட்டு போனா, நரகத்துல கூட இடம் கிடைக்காது. இதே நிலை எனக்கு வந்துருந்தா...
''எங்கம்மா தான் இவளுக்கு எல்லாம் செய்யிறாங்க. மாமியார், மருமக பிரச்னை இல்லாமலா இருந்தது... தினம் இரண்டு பேருக்கும் பஞ்சாயத்து தான்.
''ஆனா, உள்ளுக்குள்ள மருமக மேல அவங்க வச்ச பாசத்துக்கு குறைவே இல்லை. இப்பவும், அவளுக்கு பார்த்து பார்த்து செய்யிறாங்க,'' கணேஷின் குரல், பரணியின் காதுகளில் விழுந்து கொண்டிருந்தாலும், 'தாம்பத்தியம் என்றால் இதுதானோ...' என்ற கேள்வியால், மனம் மட்டும் ஏதோ ஒரு உணர்வில் நிறைந்து வழிந்தது.
''கணேசன் சார்... நீங்க கிரேட்,'' என்று சொல்லி வெளியே வந்த பரணி, கணேஷின் அம்மாவிடம், ''அம்மா, ஒரு கப் காபி தந்து, என்னை விழிக்க வச்சதுக்கு நன்றி, சூப்பர்மா. என் மனைவி போடும் இஞ்சி டீ மாதிரியே உங்க காபி,'' என்றபடி, கையாட்டி விடை பெற்றான்.
இனி, பரணியிடமிருந்து அவன் மனைவி பற்றிய குற்றங்குறைகள் எதுவும் வராது என்று நினைத்தபடி புன்னகைத்தார், கணேசன்.
சுபா தியாகராஜன்
