sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

வயது: 35. கணவர் வயது: 40. எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். கட்டுமான நிறுவனம் ஒன்றில், கம்பி கட்டும் வேலைக்கு செல்கிறார், கணவர்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், பெற்றோருடன், 15 வயதிலேயே கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். 19 வயதில் இந்த வரன் வரவே, திருமணம் செய்து வைத்தனர்.

தான் வேலை செய்யும் நிறுவனத்திலேயே, சித்தாள் வேலையில் சேர்த்து விட்டார், கணவர். புகுந்த வீடு சென்ற சில நாட்களிலேயே, கணவனின் தம்பி, என் பெட்டியிலிருந்து, பணம் எடுப்பதை பார்த்து விட்டேன். என்னை பார்த்ததும், ஓடி விட்டான்.

வேலை எதுக்கும் போகாத அவன், குடிப்பழக்கம் உள்ளவன் என்று தெரிந்ததும், அதிர்ந்து போனேன். பெற்றோர் எனக்கு கொடுத்த சின்ன கம்மல், ஒரு ஜோடி வளையல், பட்டுப் புடவை என, எல்லாம் காணாமல் போனது. கணவரது தம்பி மீதுதான் சந்தேகம் வந்தது.

இதுகுறித்து, மாமியாரிடம் கூற, 'என் பிள்ளை, குடிப்பானே ஒழிய, திருட்டு புத்தியெல்லாம் அவனுக்கு இல்லை. முதல்ல, உன் வீட்டில் போடறதா சொன்ன மூன்று பவுன் செயினை போடச் சொல். என் மகன் மீது பழி போடாதே...' என்று ருத்ர தாண்டவமே ஆடி விட்டார்.

கணவரிடம் கூறியும், எந்த பதிலும் இல்லை. நாளுக்கு நாள், அந்த வீடு நரகமாக மாறி வர, பொறுக்க முடியாமல், அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன்.

அம்மா வீட்டிலிருந்தே சித்தாள் வேலைக்கு சென்று வந்தேன். அது சிரமமாக இருக்க, அம்மா வீட்டுக்கு அருகிலேயே, சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.

என் திறமையால், இக்கடையின், 'சூப்பர்வைசர்' ஆனேன். ஓய்வு நேரத்தில், சுய உதவி குழுவில் இணைந்து, கைவினை பொருட்கள் செய்யவும் பழகிக் கொண்டேன்.

இரண்டு முறை, கணவர் வந்து அழைக்க, 'தனிக்குடித்தனம் போவதாக இருந்தால் வருகிறேன்...' என்று கூற, மறுத்து விட்டார்.

சில மாதங்களில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இப்போது, வாழ்க்கையில் சற்று நிம்மதி கிடைத்தாலும், நான் இழந்தவைகளை எண்ணி மனம் கலங்குகிறேன்.

என் பெற்றோருக்கு வயதாகி விட்டது. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. வேறொரு ஆணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகின்றனர், தோழியர். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை.

கணவர் போல் முதுகெலும்பு இல்லாத ஒருவர் வாய்த்தால், மீதமுள்ள வாழ்நாள் வீணாகி விடும் என்று பயப்படுகிறேன்.

'சட்டப்படி விவாகரத்து ஆகாததால், கணவர் மீது வழக்கு தொடர்ந்து, ஜீவனாம்சம் கேள்...' என்று அறிவுறுத்துகின்றனர். மனைவி, குழந்தையுடன் இருக்கும் அவரை தொந்தரவு செய்ய மனசுக்கு நெருடலாக இருக்கிறது.

மீதமுள்ள நாட்களை முறைப்படுத்திச் செல்ல, நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா.

— இப்படிக்கு,உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —

நீ, எட்டாம் வகுப்பு இடை நின்றிருப்பாய் அல்லது தேர்ச்சி பெற்றிருப்பாய் என, நம்புகிறேன்.

குடிப்பழக்கம் உள்ளவனாய் இருக்கலாம், கொழுந்தன். அவன் திருடுவதற்கு ஏதுவாக உன் நகை, பட்டுப்புடவைகளை அஜாக்கிரதையாக போட்டு வைத்தது, உன் தவறே. புகுந்த வீடு செல்லும் பெண்கள், தங்கள் உடைமைகளை பத்திரமாய் பூட்டி வைப்பது சாலச்சிறந்தது.

இரண்டு முறை கணவர் வந்து அழைத்தும், 'தனிக்குடித்தனம் போவதாக இருந்தால் வருகிறேன்...' என, நீ கூறியது மிகச் சரிதான்.

நீ, 19 வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படித்திருந்தால், உயர் கல்வி கற்று, நல்ல வேலைக்கு போயிருப்பாய். உன் திருமண வாழ்க்கையும் உன்னதமாக அமைந்திருக்கும்.

நீயும், கணவரும், திருமணமான பின், எத்தனை ஆண்டுகள் கழித்து பிரிந்தீர்கள்? கணவருக்கு குடிப்பழக்கம் உண்டா?

மாமியார், எதாவது கட்டடப் பணியில் இருந்தாரா அல்லது இல்லத்தரசியா? உனக்கும், கணவருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த, உன் பெற்றோர் முயற்சிக்கவில்லையா? இது தொடர்பான தகவல்கள் உன் கடிதத்தில் இல்லை.

உன்னை சட்டப்படி விவாகரத்து செய்யாமல், கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது, மாபெரும் குற்றம்.

'இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவர், மனைவி, குழந்தையுடன் இருக்கிறார். அவரை, சட்ட நடவடிக்கை எடுத்து, தொந்தரவு செய்ய வேண்டாம்...' என, நீ நினைப்பது அபத்தம்.

கணவர் மீது, காவல் நிலையத்தில் புகார் கொடு. அத்துடன், குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி, விண்ணப்பம் செய்.

முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, இரண்டாம் திருமணம் செய்தால் அந்த குற்றத்தை செய்த நபருக்கு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

கணவர், மாத சம்பளம் வாங்கும் ஊழியர் அல்ல, தினக்கூலி தொழிலாளி. சொந்தக்காலில் நின்று ஜீவிக்கும் நீ, கணவரிடம் ஜீவனாம்சம் எதிர்பார்க்கத் தேவையில்லை. கணவருக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுத்து, அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொள்வது பாதுகாப்பானது.

உன் கணவர் போல முதுகெலும்பு இல்லாத ஒருவரை மறுமணம் செய்து, அவதிப்பட வேண்டுமா என பயப்படுகிறாய். தேவையற்ற பயம், நம்பிக்கை தானே வாழ்க்கை.

கணவரிடமிருந்து விவாகரத்து கிடைக்க, அதிகபட்சம் ஓராண்டு ஆகலாம். இரண்டாம் திருமணம் செய்து, அமோகமாய் வாழும் பல பெண்களை, நான் அறிவேன். பொருத்தமான நபரை மறுமணம் செய்து கொள். வாழ்த்துகள்!

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us