PUBLISHED ON : டிச 22, 2019

சென்னையில், மீட்டர் போட்டு, ஆட்டோ ஓட்டும் வெகு சிலர்களில், ஹுசேனும் ஒருவர். இவரது மற்றொரு சிறப்பு, மனித நேயத்துடன், தன் ஆட்டோவில் செய்துள்ள செயல்கள், தனித்துவமிக்கவராக காட்டுகிறது.
ஆட்டோவில் ஏறும் வாடிக்கையாளர்களின் அவசர தேவைக்கு குடிநீர், மொபைல் சார்ஜர், தலைவலி, கை கால் வலி, உடல் வலிக்கான மருந்து மாத்திரைகள், விக்ஸ் மிட்டாய், குறிப்பு எழுத, பேனா - பேப்பர், முகம் துடைக்க, 'டிஷ்யூ' பேப்பர், பொழுது போக்க வார இதழ் மற்றும் நாளிதழ்களை வைத்துள்ளார்.
'யார் யாரோ, எப்படி எல்லாமோ சேவை செய்கின்றனர். ஆட்டோ தொழிலாளியாக இருக்கும் நாம், நம் தொழில் மூலம், மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியும் என்று யோசித்தேன். வாடிக்கையாளர்கள், ஆட்டோவில் ஏறியதும், என்ன விரும்புகின்றனர் என்பதையறிந்து, அதை எல்லாம் வாங்கி வைத்தேன்.
'அவை தீர்ந்து விட்டால், மீண்டும் வாங்கி வைப்பேன். இதற்கென, வாடிக்கையாளர்களிடம் தனியாக காசு வாங்குவதில்லை. வாடிக்கையாளர்களும் பாராட்டுகின்றனர்; எனக்கும், மன திருப்தி ஏற்படுகிறது...' என்கிறார், ஹுசேன்.
கடந்த, 40 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும், ஹுசேன், சென்னை, மயிலாப்பூரை சேர்ந்தவர். எங்கே அழைத்தாலும், உடனே வருவார்; மீட்டர் கட்டணத்திற்கு மேல் வாங்காதவர்.
'இப்பல்லாம் எங்கே வண்டி ஓடுது...' என்று அலுத்துக் கொள்ளும், ஆட்டோ ஓட்டுனர் மத்தியில், என்றுமே அலுத்துக் கொள்ளாதவர். காலையிலிருந்து இரவு வரை, இவரின் ஆட்டோ ஓடிக்கொண்டே தான் இருக்கும்.
சொந்த ஆட்டோ; மகன்களை, ஆளாக்கி விட்டார்; மகளை, கல்லுாரியில் படிக்க வைத்துள்ளார். இவருக்கு, நிறைய வாடிக்கையாளர்கள் நிரந்தரமாக உள்ளனர்.
'ஒரு முறை, என் ஆட்டோவில் ஏறி விட்டால், அவர் வாடிக்கையாளராக மட்டுமின்றி, நண்பராகவும் மாறி விடுவர்...' என்கிறார், ஹுசேன்.
அது, உண்மை தான் என்பதை, நம்மிடம் பேசிக்கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே, அடுத்தடுத்து அவருக்கு வந்த கைப்பேசி அழைப்புகள் உணர்த்தின. அவரது கைப்பேசி எண்: 98406 70352.
எல். முருகராஜ்

