தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கனவு மெய்ப்படலாம்!

கனவு மெய்ப்படலாம்!

கனவு மெய்ப்படலாம்!


PUBLISHED ON : ஏப் 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனதில் குழப்பத்துடன், படிக்கத் தோணாமல் உட்கார்ந்திருந்தான், பிளஸ் 2 படிக்கும், பிரபாகர்.

கல்லுாரியில் பேராசிரியராக இருக்கும் வசந்தி, வீட்டிற்கு வந்ததும், பிரபாகர் அறையை எட்டிப் பார்த்து, ''என்ன பிரபா செய்யிற... அம்மா இப்பதான் வந்தேன். பத்து நிமிஷம் காபியோடு வரேன்,'' என, உள்ளே சென்றாள்.

எங்கப்பா துபாயில் இருக்கார். நண்பர் போல தான் என்கிட்டே பழகுவாரு. கொஞ்சம் கோபக்காரர். இருந்தாலும், என் மீது அதிக பிரியம். ஒருநாள் கூட என்கிட்ட பேசாமல் அவரால் இருக்க முடியாது.

அன்று, பள்ளியில் நண்பர்கள், அவரவர் அப்பாவைப் பற்றிப் பேசினர்.

'எனக்கு அப்பா இல்லைன்னாலும் பரவாயில்லை. இருந்தாலும், இல்லைங்கிற நிலைமையில் தான் இருக்கிறேன்...' என, பிரபாகரின் மனதில் வலி.

பிரபாகருக்கு இரண்டு வயது இருக்கும்போது, கருத்து வேறுபாட்டால் கணவருடன் திருமண உறவை முறித்துக் கொண்டாள், வசந்தி.

விபரம் தெரிந்த பின், 'பிரபா... எனக்கும், உன் அப்பாவுக்கும் ஒத்து வரலை. கடைசி வரை என்னால் அவரோடு காலம் தள்ள முடியாதுன்னு தோணுச்சு. விவாகரத்து வாங்கிட்டேன். 30 லட்சத்தோடு, நம் உறவை முறிச்சுக்கிட்டு போயிட்டாரு.

'ஆனால், இன்று வரை அப்பா ஸ்தானத்தில் இருந்து, உனக்கு எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்துட்டு வரேன். இனி, அம்மா தான் உனக்கு எல்லாம். இதை நீ புரிஞ்சுக்கிட்டு, நல்லா படிச்சு, அம்மாவுக்கு நல்ல பெயர் எடுத்துத் தரணும்...' என, 10 வயதில் அம்மா சொன்னது, இன்று வரை ஞாபகம் இருக்கிறது.

சிறு வயதில் அப்பா இல்லாதது, அவனை பெரிதாகப் பாதிக்கவில்லை. மாமா, தாத்தா என, அம்மா வழி உறவுகளுடன் அவனது இளம்பருவம் நன்றாக போனது.

வளர வளர தான், அப்பாவின் ஸ்தானம், எவ்வளவு முக்கியமானது என்பதை உணர ஆரம்பித்தான்.

அப்பா இருந்திருந்தால்... அவன் மனதில் கனவுகள் விரியும்.

அப்பாவுடன் கைகோர்த்து வெளியே போவதை போல... படிப்பு விஷயத்தில் அப்பாவிடம் சந்தேகம் கேட்பது போல்... அவர் மேல் கை போட்டு துாங்குவது போல்... காரில் அவருடன் பயணிப்பது போல்...

ஆனால், இவையெல்லாம் அவன் வாழ்வில் கனவுகள் தான் என்பதை நினைக்கும்போது மனம் வலிக்கும்.

அம்மாவிடம் பேச நினைத்து, வெளியே வந்தான்.

''பிரபா... இந்தா காபி,'' அவனிடம் ஒரு டம்ளரைத் தந்து, காபியுடன் சோபாவில் உட்கார்ந்தாள், வசந்தி.

''டியூஷன் போகணுமா பிரபா?'

''இல்லை, இன்னைக்கு போகலை. உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும்.''

புருவத்தை உயர்த்தி மகனைப் பார்த்தாள்.

''அப்பாவை போட்டோவில் மட்டும் தான் பார்த்திருக்கேன். அவர் எங்கே இருக்காரு, எனக்கு அவரைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்.''

வசந்தியிடம் சின்ன அதிர்வு.

''என்னாச்சு பிரபா... நமக்கு இல்லைன்னு ஆன விஷயத்தைப் பத்தி எதுக்கு பேசணும். உன் அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அவருக்கு ஒரு மகள் இருக்கா. புரிஞ்சுக்க, தயவுசெய்து அவரைப் பத்திப் பேசாதே,'' என்றாள்.

''இல்லம்மா, நீ சொல்றதை கேட்க, நான் சின்னக் குழந்தை இல்லை. உனக்கு வேண்டுமானால் அவர் வேண்டாதவராக, தேவையில்லாதவராக இருக்கலாம். எனக்கு அவர் அப்பா; அவரைப் பற்றித் தெரிஞ்சுக்கிற உரிமை எனக்கிருக்கு.''

அவன் குரல் சற்று உயர்ந்து ஒலித்தது.

''சரி... உன் அப்பா பிசினஸ் மேன். எனக்கு தெரிஞ்சு இந்திராநகரில் வீடு. இப்பவும் அங்கேதான் இருப்பார். கல்யாணம் பண்ணி, ஒரு பெண் இருக்கிறதாகக் கேள்விப்பட்டேன்.

''இரண்டு வருஷம் வாக்குவாதம் செய்தே, எங்க வாழ்க்கை நகர்ந்தது. ஒரு கட்டத்தில் பிரிவோம்ங்கிற முடிவுக்கு வந்தேன். பரஸ்பர விவாகரத்து, 30 லட்சம் பணம் கொடுத்தார். அவர் முகத்தில் விழிக்க விரும்பாமல், உன்னோடு, என் அப்பா வீட்டிற்குப் போயிட்டேன்.

''மேல் படிப்பு படிச்சு, காலேஜில் வேலைக்குச் சேர்ந்தேன். எல்லாம் உனக்காக... இன்னைக்கு வரைக்கும், உனக்கு எந்தக் குறையும் இல்லாமல் தான் பார்த்துக்கிறேன். தயவுசெய்து அவரைப் பத்திப் பேசி, என் மனதை சங்கடப்படுத்தாதே,'' என்றாள், வசந்தி.

''சரிம்மா, உனக்குன்னு சில உணர்வுகள் இருப்பது போல எனக்கும் இருக்கு. உன் அனுமதியோடு, அப்பாவை நான் பார்த்து பேசணும்.''

''சரி உன் இஷ்டம். விலாசம் தரேன், போய்ட்டு வா. ஆனால், அவர் என்னோடு, உன்னையும் தான் ஒதுக்கி வச்சுருப்பாரு... போய் பார்,'' அரை மனதாக, அவனைத் தடுக்க முடியாமல் சம்மதம் தந்தாள்.

உள்ளடங்கிய பெரிய வீடு. கேட்டைத் திறந்து உள்ளே வந்தான், பிரபாகர்.

'நான் வாழ்ந்திருக்க வேண்டிய வீடு, ஏதோ அந்நியன் போல உள்ளே வருகிறேன்...' என, நினைத்தபடி, அழைப்பு மணியை அடித்தான்.

இனம்புரியாத குறுகுறுப்பு. அம்மா சொன்னது போல, என்னை மறந்திருப்பார். யார் என்று கேட்டு, என்னை நானே பெற்றவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைமை.

கதவைத் திறந்தாள், 10 வயது பெண்.

''அப்பாவைப் பார்க்கணுமா?'' கேட்டாள்.

அவன் தலையாட்டினான்.

''அப்பா, உங்களைப் பார்க்க ஒரு அண்ணன் வந்திருக்கார்,'' என சொல்லி, உள்ளே ஓடினாள்.

சினிமாவில் வரும் அப்பாவைப் போல, கம்பீர தோற்றத்துடன், ஆறடி உயரத்தில் உள்ளிருந்து வந்தார்.

'இவர் என் அப்பா...' என, கண்களில் கண்ணீர் துளிர்த்தது, பிரபாகருக்கு. அவரிடமும் ஒரு பரவசம். வேகமாக வந்து அவனைத் தழுவினார்.

''பிரபாகர், எப்படிப்பா இருக்கே. நீயே என்னை தேடி வந்துட்டியா... உன் அப்பாவைப் பார்க்க வந்தியா?'' என, குரல் உடைய, கண்ணீர் மல்க சொல்லும் அவரை, ஆச்சரியத்துடன் பார்த்தான்.

''என்னை அடையாளம் தெரியுதாப்பா?'' என்றான்.

''நீ என் மகன்டா. உன்னை எப்படி எனக்குத் தெரியாமல் போகும். உனக்குத் தெரியாமல், உன்னை நான் பார்த்துட்டு தான் இருக்கேன். முதலில் உள்ளே வா...'' என, அவனைக் கைப்பிடித்து தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

''உன் அம்மா தான், உன்னைப் பார்க்க விடாமல், என்கிட்டேருந்து பிரிச்சு கூட்டிட்டுப் போயிட்டா. இருந்தாலும், என் மகன் மேல், நான் வச்ச பாசம் மாறலை. இதோ பாரு, உன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் உனக்கு டிரஸ் வாங்கி வச்சிருக்கேன்...'' என, பரபரப்புடன் பீரோவைத் திறந்து மூன்று வயதில் போட வேண்டியது; நான்கு, ஐந்து வயது என, வரிசையாக புது டிரஸ்கள், பீரோ நிறைய நிறைத்திருந்தார்.

''இதை நீ போட்டு அழகு பார்க்க எனக்கு கொடுத்து வைக்கலை பிரபா. விவாகரத்து ஆனபிறகு இரண்டு வருஷம் வாழ்க்கையே நரகமாகியது. அப்புறம், உறவுகள் வற்புறுத்தலால் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

''நர்மதான்னு உனக்கு ஒரு தங்கை இருக்கா. இரு காயத்ரியைக் கூப்பிடறேன். காயத்ரி... நம் மகன் பிரபாகர் வந்திருக்கான். இங்கே வா,'' என, குரல் கொடுத்தார்.

லேசான தடுமாற்றத்துடன், அங்கு பரபரப்பாக வந்தவள், பிரபாகரின் தலையை அன்போடு தடவி, ''பிரபா, நல்லா இருக்கியாப்பா. நீ வருவேன்னு கனவிலும் நினைக்கலை. உங்கப்பா உன் மேல் எவ்வளவு பிரியம் வச்சுருக்காரு தெரியுமா?'' என்றாள், காயத்ரி.

''என்ன பிரபா பார்க்கிற... இவள் தான் என் மனைவி காயத்ரி. கண் பார்வை இல்லாதவள். இருந்தாலும், இருண்ட என் வாழ்க்கைக்கு ஒளி கொடுத்தவள்.''

''என்னை மன்னிச்சிரு பிரபா... உன் அம்மா இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கேன். இந்த மனுஷனோடு நிறைவாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், அந்த கொடுப்பினையை கடவுள் எனக்குக் கொடுத்திருக்காரு,'' என்றாள், காயத்ரி.

''பிரபா... நீயும், உன் அம்மாவும் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன். என் நண்பர் மூலம் நாலு வருஷம் முன், நீங்க இருக்கிற இடம் தெரிஞ்சுது.

''தன்னை ஒரு நிலை நிறுத்திக்கிட்டு, உனக்காக வாழும் உன் அம்மாவை நினைச்சு பெருமைப்பட்டேன். எந்த விதத்திலும் உங்கள் வாழ்க்கையில் என்னால் பிரச்னை வரவேண்டாம்ன்னு தான் ஒதுங்கியே இருந்தேன்.

''இருந்தாலும், உன்னை பலமுறை பள்ளி வாசலில் நின்று பார்த்துட்டு இருப்பேன். 'பிரபா, நான் தான் உன் அப்பா'ன்னு உன் எதிரில் வர மனம் துடிக்கும். கட்டுப்படுத்திப்பேன். இதோ இன்னைக்குதான், இரண்டு வயதில் பிரிந்த மகன் அருகில் உட்காரும் பாக்கியம் கிடைச்சிருக்கு.''

அவன் கைகளை மடியில் ஏந்திக் கொள்கிறார்.

அவனுக்குப் பிடித்ததை சமைக்கச் சொல்லி, அவர் கையால் சிறு குழந்தைக்கு ஊட்டுவது போல ஊட்டிவிட்டார். பிரபாகரனின் கண்கள் கலங்கியது.

''பிரபா... அம்மா, இவ்வளவு துாரம் என்னைப் பார்க்க உன்னை அனுப்பி வச்சது சந்தோஷம். அவளுக்கு நான் நன்றி சொன்னேன்னு சொல்லு. 'பைக்'கில் பத்திரமாகப் போயிட்டு வா.

''உன் பெயரில் இப்ப வரைக்கும் வங்கியில் பணம், 'டிபாசிட்' பண்ணிட்டு வரேன். இந்த அப்பா உனக்கு செய்ய வேண்டிய கடமையை என்றைக்கும் மறக்க மாட்டேன். உனக்காகவாவது நானும், அமமாவும் விட்டுக் கொடுத்து வாழ்ந்திருக்கலாம். என்னை மன்னிச்சிடுப்பா.''

அப்பாவை கட்டித் தழுவியவன், ''என் வாழ்க்கையில் அப்பாவுடன் நான் சந்தோஷமாக செலவழிக்க வேண்டிய எத்தனையோ சந்தர்ப்பங்களை இழந்துட்டேன். அம்மாவுக்கு நீங்க தேவையில்லாமல் இருக்கலாம்.

''அம்மாங்கிற உறவு எவ்வளவு உன்னதமானதோ, அதேபோல, அப்பாங்கிற உறவும் உயர்ந்ததுப்பா... இனியும் என் வாழ்க்கையில், அப்பாவை விட்டுத்தர மாட்டேன். உங்களைப் பார்க்க அடிக்கடி வருவேன்.

''இனி வரும் காலங்களில் அம்மாவோடு, அப்பா நீங்களும் இருப்பீங்க. அடிக்கடி உங்களைப் பார்க்க வருவேன்பா,'' என சொல்லி, அவர்களிடம் விடைபெற்று கிளம்பினான், பிரபாகர்.

பரிமளா ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us