PUBLISHED ON : ஏப் 16, 2023

எஸ். நடராஜன், மதுரை: என்ன அந்துமணியாரே... இந்த ஆட்சியிலும், அரசு விளம்பரம் நமக்கு இல்லை போலே...
ஆமாம்... கடந்த, 35 ஆண்டுகளாக எந்த ஆட்சி வந்தாலும், இதே நிலை தான். ஆட்சியைப் பற்றி விமர்சிக்கக் கூடாது; தவறுகளை சுட்டிக் காட்டக் கூடாது; அவர்கள் பேச்சும், படமும், தினமும் முதல் பக்கத்தில் வரவேண்டும்; அப்போது தான், விளம்பரம் தருவர்.
'தினமலர்' இதழ், அரசு விளம்பரம் வராததால், கவலைப்படவில்லை. நம் முதலாளிகளான வாசகர்கள் இருக்கும்போது, ஏன் கவலை.
பி. இசக்கி, மதுரை: வாழ்வில் உயர்வுகளை அடைய வேண்டும் என்று விரும்புகிறேனே...
எண்ணமும், செயலும் உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உயர்வுகள் தன்னால், உங்களை வந்து சேரும்!
* ராம். ஆதிநாராயணன், தஞ்சாவூர்: 'இலக்கு என்பது ஆட்சி அமைப்பது தான்...' என்கிறாரே, சரத்குமார். எங்கே ஆட்சி அமைக்கப் போகிறார்?
அமெரிக்காவில் அல்லது கனடாவில்... ஏன் ஆதி, இப்படி, 'தமாஷ்' கேள்வி எல்லாம் கேட்டு என் நேரத்தை வீணடிக்கிறீர்கள்...
கே. மாதவன், நெல்லை: பெருமைக்குரியவனாக யாரைக் கருதலாம்?
தோற்றத்தில் எளிமை உள்ளவன், செயலில் மனிதத் தன்மை உள்ளவன், வெற்றி பெற்றால் அதில் வெறித்தன்மை இல்லாதவன்... இப்பண்புகளை உடையவன் தான் பெருமைக்குரியவன்!
கே. முத்துாஸ், தொண்டி: சாகும் வரை மகிழ்ச்சியாக இருக்க என்ன தேவை?
'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து...' சாகும் வயது வந்து விட்டால்,'போதும்' என்ற மனம் வரவேண்டும். அப்போது, மகிழ்ச்சியாக சாவை எதிர்கொள்ளலாம்!
* மா. அர்விந்த், தென்காசி: தி.க., வீரமணி சாதித்தது என்ன?
தினமும் கறுப்பு சட்டை அணிந்து கொள்கிறாரே... அதுதான் அவர் சாதித்தது!
க. விநாயகம், சென்னை: ஒரு மனிதனின் அழகு என்று எதைச் சொல்வீர்கள்?
மயிலுக்கு அழகு என்று எதைச் சொல்வீர்கள்... அதன் தோகை என்று தானே. அதேபோல, ஒரு மனிதனின் அழகு, ஈகை தான்!
