தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

'மணி... மதியம், 'லஞ்ச்' ஹோட்டலில் சாப்பிடலாம். மும்பையிலிருந்து நண்பர் ஒருவர் வருவதாக சொல்லியுள்ளார். அவரிடமிருந்து உனக்கு நிறைய, 'மேட்டர்' கிடைக்கும்...' என்று, லென்ஸ் மாமா கூறியதும், ஆர்வம் தொற்றிக் கொண்டது எனக்கு.

மதியம், 1:30 மணிக்கு சரியாக வந்து, என்னை அழைத்துச் சென்றார், லென்ஸ் மாமா.

ஹோட்டலில், ஏற்கனவே, 'ரிசர்வ்' செய்திருந்த மேஜை முன் அமர்ந்திருந்த நண்பரை எனக்கு அறிமுகப்படுத்தி, 'இவர், ஸ்கிரிப்ட் ரைட்டர். வேறு மொழி படங்கள், 'டிவி'யில் ஒளிபரப்பாகும்போது, தமிழில், சப் - டைட்டில் எழுதி தருவார். அதேபோல், ஆங்கில படங்கள், தமிழில், 'டப்' செய்யும்போது, தமிழில் வசனங்கள் எழுதுவதிலும், எக்ஸ்பர்ட்...' என்றார்.

'ஹலோ...' சொல்லி அவரை பற்றி விசாரித்தேன்.

'என் அப்பா, தமிழ் படங்களின் வினியோகஸ்தராக இருந்தவர். எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி சாருடன் பழகியவர். இப்ப, அவர் உயிருடன் இல்லை. எனக்கு, சினிமா கேமரா இயக்குவதில் ஆர்வம் இருந்ததால், அதைப் பற்றி படிக்க, மும்பை சென்றேன்.

'ஓரிரு ஹிந்தி படங்களுக்கு கேமராமேனாக இருந்துள்ளேன். எனக்கு தமிழ் தெரியும் என்பதாலும், தமிழில் சப் - டைட்டில் எழுத ஆட்கள் கிடைக்காததால், என்னை அதில் நுழைத்து விட்டார், ஒரு ஹிந்தி பட முதலாளி.

'அதிலிருந்து இதுவே தொழிலாக எடுத்துக் கொண்டேன். இப்ப, நிரந்தர மும்பைவாசி ஆகி விட்டேன்...' எனக் கூறியவர், பேச்சு எங்கேயோ சென்று, 'பல மொழி படங்களுக்கு சப் - டைட்டில் எழுதுவதால், எந்த படம் எங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம்...

'இப்படித் தான் சமீபத்தில், ஒரு தனியார், 'டிவி'யில், தீபாவளி என்ற தமிழ் படம் பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், படத்தில் வரும் நாயகி பாவனாவுக்கு, மறதி நோய் வந்து விடுகிறது. அதனால், பட நாயகன் ஜெயம் ரவியும், மற்றவர்களும் படும் அவஸ்தைகள் தான், அந்த படத்தின் கதை.

'அந்த படத்தை பார்த்துக்  கொண்டிருக்கும் போது, அதே மாதிரியான மறதி நோய் கதையை, 'யூ டியூபில்' பார்த்த ஞாபகம். யோசித்து, மண்டை காய்ந்து, ஒரு வழியாக அந்த படத்தின் பெயரை கண்டுபிடித்தேன்.

'நடிகர் ஜெயராம், நடிகை வினிதா நடித்த, 1994ல், நிலா என்ற பெயரில் வெளியான இந்த படத்திலும், இதே மாதிரியான, கால இடைவெளி மறதி நோய் வினிதாவுக்கு வந்து விடும்.

'நல்லவேளை, எனக்கு அந்த, 'செலக்டிவ் அம்னீஷியா' இல்லாததால், மேலும், இந்த மறதி நோய் தமிழ் படங்களில் உள்ளனவா என்பதை பின்நோக்கி பீராய்ந்தேன். அதிர்ஷ்ட வசமாக, நிலா படத்தை தயாரித்தவர்களே எனக்கு, 'க்ளூ' கொடுத்து விட்டனர்.

'கடந்த, 1982ல் வெளிவந்த, மூன்றாம் பிறை படத்தில், ஸ்ரீதேவிக்கும், இதே மறதி நோய். பாலு மகேந்திராவின் கைவண்ணத்தில், படம் வெற்றிகரமாக ஓடியது. அதன்பின், இன்னும் கொஞ்சம் பின்நோக்கி போனால், 1967ல், கே.ஆர்.விஜயாவுக்கும் இதே நோய், நினைவில் நின்றவள் படத்தில்.

'இந்த படத்திற்கு முன், 1963ல், எம்.ஜி.ஆருக்கும், மறதி வந்த படம் தான், கொடுத்து வைத்தவள்.

'சரி, அம்னீஷியாவுக்கு, எந்த படம் தான் அடித்தளம்? 1956ல் வெளியான, அமர தீபம் படமா என்றால், அதுவும் இல்லை. 1942ல், ஆங்கிலத்தில் வெளி வந்த, ரேண்டம் ஹார்வெஸ்ட் என்ற படத்தின் தழுவல் தான், ஸ்ரீதர் கதை வசனம் எழுதிய, அமர தீபம். பின்னர் இந்த கதை வங்காளத்திலும், ஹிந்தியிலும், 'ரீ - மேக்' ஆனது.

'ஆக, இந்த மறதி நோய் படத்தின் பூர்வீகம், ஒரு ஆங்கில படம் தான். அதுவே இத்தனை முறை புதுப்புது அவதாரம் எடுத்துள்ளது...' என்றதும், வெடி சிரிப்பு சிரித்தார், லென்ஸ் மாமா.

'இரண்டாவது மேட்டர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி, என் தந்தை கூறியது. அவரைப் பற்றி அறிந்ததும், இப்படி ஒரு மனிதரா என்று வியந்தேன். அது...

'பணம், பதவி, புகழ் இப்படி எதுவுமே இல்லாத ஒரு சாதாரண மனிதனுக்கும், இவரு குடுக்கற மரியாதையில் கொஞ்சமும் குறைச்சல் இருக்காது. இந்த குணம் சாதாரணமா எல்லாருக்கும் இருக்கறதில்ல.

'சினிமா தியேட்டருக்கு போய் சினிமா பார்ப்பார். அவர் வந்திருக்கார்ன்னு வெளியே தெரிஞ்சா, பிச்சைக்காரங்க வந்து கூடிடுவாங்களாம். இது அவருக்கும் தெரியும். வெளியே நம்மளை நம்பி ஒரு கூட்டம் காத்துக்கிட்டிருக்குமேன்னு நினைப்பராம்.

'உடனே, ஒரு நுாறு ரூபாய் நோட்டை குடுத்து, சில்லரையா மாத்திக்கிட்டு வரச்சொல்வார். படம் முடிஞ்சு வெளியே வர்றப்போ, சில்லரையோட வருவார்.

'எல்லாரும் அவருகிட்ட வருவாங்க. 'என்ன, எல்லாரும் சவுக்கியமா இருக்கீங்களா'ன்னு நெருங்கின சொந்தக்காரங்களை விசாரிக்கிற மாதிரி விசாரிப்பார். தன்கிட்ட இருக்கிற சில்லரையை எல்லாருக்கும் சமமா பிரிச்சு குடுத்துட்டு தான் அங்கேயிருந்து புறப்படுவார்.

'ஒருநாள், அதுமாதிரி புறப்பட்ட சமயத்துல, ஒரு சின்ன பையனுக்கு சில்லரை ஏதும் கிடைக்கல. இது, என்.எஸ்.கே.,வுக்கு தெரியாது. காரில் ஏறி புறப்பட்டுட்டார்.

'காரை பிடிச்சுக்கிட்டே பின்னாடியே ஓடி வந்தான், அந்தப் பையன். 'ஐயா... நீங்களே இல்லேன்னு சொன்னா நான் என்ன பண்ணுவேன். இன்னிக்கு பட்டினி தான். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை'ன்னு கத்திக்கிட்டே ஓடி வந்தான்.

'இதை கவனித்த என்.எஸ்.கே., உடனே காரை நிறுத்தச் சொல்லி, இறங்கினார். அந்த பையனை கட்டிப்பிடிச்சுக்கிட்டு, 'என்னை மன்னிச்சுடுப்பா, நான் கவனிக்காம வந்துட்டேன்'னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டார்.

'இன்னொரு முறை இதே மாதிரி ஒரு தியேட்டரிலிருந்து வெளியே வந்திருக்கார். ஒரு ஆள் அவருகிட்ட வந்து நிற்க, அவனுக்கு குடுக்கிறதுக்கு இவர்கிட்ட பணம் இல்லை. 'பணம் இல்லைப்பா'ன்னிருக்கார்.

'அந்த நபர், 'உங்ககிட்டயே இல்லையா'ன்னு கேட்டிருக்கார். என்.எஸ்.கே.,வுக்கு ரொம்ப சங்கடமா போச்சு. உடனே புறப்பட்டு வீட்டுக்கு போனார். அங்கே இங்கே தேடி பார்த்து, இருந்த கொஞ்ச நஞ்ச சில்லரையை எடுத்தார்.

'கார் டிரைவரை கூப்பிட்டு, தியேட்டர் வாசலில் நின்னுக்கிட்டிருந்த ஆசாமியோட அங்க அடையாளங்களை சொன்னார். 'காரை எடுத்துக்கிட்டு போய், அந்த ஆளை கண்டுபிடிச்சு இந்த காசை குடுத்துட்டு வா'ன்னு அனுப்பினார்.

'பிச்சை போடறதுக்காக காரை கொடுத்தனுப்பிய, இவரைப் போல் வேறு யாரையாவது கேள்விப்பட்டிருக்கீங்களா? அவர் ஒரு வித்தியாசமான மனிதர், வித்தியாசமான கலைஞர்! சினிமா உலகத்தில், இவரை போன்றவர்கள் நிறைய பேர் இருந்துள்ளனர்...' என்று கூறி, பெருமூச்சு விட்டார், அந்த நண்பர்.

ஹோட்டலில் என்ன சாப்பிட்டீங்க என்று கேட்கிறீர்களா?

வழக்கம்போல், நான் சைவ, தாய் காம்போவும், அவர்கள் இருவரும் பறப்பன, நீந்துவன என்று, ஒரு பிடி பிடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us