PUBLISHED ON : மே 29, 2011

இந்தியாவில் பிறந்த விவசாயிகளே, தாங்கள் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டு வரும் சூழ்நிலையில், வெளிநாட்டில் பிறந்த ஒருவர், நம் நாட்டிற்கு வந்து, 25 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, தன்னை ஒரு விவசாயி என்று, எப்போதும் பெருமையுடனும் சொல்லிக் கொள்கிறார்.
அவர் பெயர் ஹெர்பர்ட். ஜெர்மன் நாட்டில் பிறந்து, அங்கேயே பட்டப்படிப்பை முடித்தவருக்கு, ஆன்மிகப் பாதை பிடித்துப் போனது. இந்தியா ஒரு ஆன்மிக பூமி என்பதை அறிந்து வந்தவர், நாடு முழுவதும் சுற்றி, கடைசியில் புதுச்சேரியில் உள்ள ஆரோவில் வந்தடைந்தார்.
இங்கேயே, இவர் தேடிய ஆன்மிகமும் கிடைத்தது; தேடாத புதிய பொறுப்பும் கிடைத்தது.
'செய்யும் தொழிலே தெய்வம்' என்று சொன்ன ஆரோவில் நிர்வாகம், இவரிடம், ஏழு ஏக்கர் நிலத்தை கொடுத்து, விவசாயம் பார்க்கும்படி கேட்டுக் கொண்டது. மிக உற்சாகமாக, 'களம்' இறங்கியவர், இங்குள்ள விவசாயிகளே வியக்கும் வகையில் விவசாயத்தில் பல முன்னேற்றங்களை கண்டார்.
சேற்றில் இறங்குவது, களை எடுப்பது, பயிர் நடுவது, நீர் பாய்ச்சுவது, நாற்று நடுவது, உழுவது, அறுவடை செய்வது என்று எல்லாவற்றையும் படு உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் செய்ததன் எதிரொலி, இவரது நிலத்தில் எப்போதுமே அமோக விளைச்சல்தான்.
ரசாயனம் மிகுதியாகக் கொண்ட பூச்சி கொல்லி மருந்துகளால் மனிதர்களுக்கு கேடு என்பதால், இவரது வழி இயற்கை வழிதான். 'ஆர்கானிக்' விவசாயம் எனப்படும் இவரது விவசாயத்தில், இயற்கையாக தயாரிக்கப்பட்ட உரங்களால் ஊட்டம் பெறுவது பயிர்கள் மட்டுமல்ல, இந்த பயிர்களை சாப்பிடும் மனித உயிர்களும்தான்.
தன்னை நேசித்த பெற்றோரையும், உற்றோரையும் விட, தான் நேசிக்கும் இந்த மண்ணே மேலானது என்ற வைராக்கியத்துடன் வாழும் ஹெர்பர்ட், சந்தேகமில்லாமல் இங்குள்ள விவசாயிகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்.
***
- எல். முருகேசன்
