தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அஞ்சாத நெஞ்சம்!

அஞ்சாத நெஞ்சம்!

அஞ்சாத நெஞ்சம்!


PUBLISHED ON : ஏப் 20, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 20, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப்.,24 திருநாவுக்கரசர் குருபூஜை

கடலூர் மாவட்டத்திலுள்ள திருவாமூர் என்ற தலத்தில், தேவாரம் பாடிய நால்வருள் ஒருவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர், புகழனார் - மாதினி என்போருக்கு மகனாக அவதரித்தார். சித்திரை மாதம், சதய நட்சத்திரத்தில் அவதரித்த இவருக்கு, மருள்நீக்கியார் என, பெற்றோர் பெயர் வைத்தனர். இவரது சகோதரியான திலகவதிக்கு, அவ்வூரின் சேனைத் தலைவரான கலிப்பாகையாரை திருமணத்திற்கு நிச்சயம் செய்தனர்.

இந்நிலையில், பெற்றோர் அடுத்தடுத்து இறந்து விட்ட நிலையில், போருக்கு சென்ற கலிப்பாகையாரும், போரில் இறந்து விட்டார். இதனால், மனம் உடைந்த திலகவதி, தற்கொலை செய்து கொள்ள முயல, மருள்நீக்கியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி, தம்பிக்காக வாழ முற்பட்ட திலகவதி அம்மையார், திருவதிகை சென்று, சிவ தொண்டு செய்து, வாழ்ந்து வந்தார்.

சிறுவயதில் இருந்தே, திலகவதியால், சிவ நெறியில் வளர்க்கப்பட்ட மருள்நீக்கியார், மிகச் சிறந்த சிவ பக்தராக விளங்கினார். இந்நிலையில், சமண சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டு, தர்மசேனர் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இதனால், மிகுந்த மன வருத்தம் அடைந்த திலகவதி அம்மையார், தன் தம்பி மீண்டும் சைவ சமயத்திற்கு வர வேண்டும் என்று, சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார்.

சிவனும், தன் திருவிளையாடலை ஆரம்பித்தார்; மருள்நீக்கியாரை சூலைநோய் தாக்கியது. மந்திர தந்திரம் தெரிந்த சமணர்கள், அவரை குணமாக்க முயன்றனர். ஆனால், தங்கள் முயற்சியில் தோற்றுப் போயினர். உடனே, மருள்நீக்கியார் திருவதிகை சென்று, சிவனின் திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால், மெய்சிலிர்த்த அவர், 'திருப்பதிகம்' பாடி வழிபட்டார்.

இதையறிந்த சமணர்கள், மருள்நீக்கியாரை பல்வேறு கொடுமைகள் செய்ததுடன், கல்லோடு சேர்த்து கட்டி, கடலில் போட்டனர். அப்போது, அவர், 'சிவனை தவிர, யாருக்கும் நான் அடிமை இல்லை; அவனைத் தவிர, எமனுக்கும் பயப்பட மாட்டேன்...' என்ற பொருள் பட, 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்...' என்று பாடினார்.

இதனால், மேலும் ஆத்திரமடைந்த சமணர்கள், கொதித்துக் கொண்டிருக்கும் சுண்ணாம்பு கால்வாயில், போட்டனர். 'மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கில வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே...' என்று, ஈசன் அருளால், கொதிக்கும் சுண்ணாம்பு, 'குளுகுளு'வென இருப்பதாக பாடினார்.

இவரது பாடல்களால் மகிழ்ந்த சிவன், அவர் முன் தோன்றி, 'நாவுக்கு அரசு' என, பட்டம் சூட்டினார். இதனால், இவர் திருநாவுக்கரசர் என்ற பெயரைப் பெற்றார். பின், பல தலங்களுக்கு சென்று, சிவனைப் போற்றி, தேவாரம் பாடிய திருநாவுக்கரசர், திருப்புகலூரில், சித்திரை சதய நாளில், சிவனோடு கலந்தார்.

அவரது குருபூஜையன்று, அவரது தேவாரப் பாடல்களைப் பாடி, அவரைப் போன்ற அஞ்சா நெஞ்சம் வேண்டுமென, சிவனிடம் கோரிக்கை வைப்போம்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us