PUBLISHED ON : ஏப் 20, 2014

பையனை பார்க்க, பெண் கேட்கக் கூடாதா?
என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்திருந்த வாலிபன் ஒருவன், அங்கு வந்திருந்த ஒரு இளம் பெண்ணை விரும்பி, வீட்டு பெரியவர்களிடம் கூறியிருக்கிறான். பின், பெரியவர்கள், பெண் வீட்டிற்கு சென்று பேசியிருக்கின்றனர். அந்தப் பெண், 'நான் மாப்பிள்ளையை பார்க்க வேண்டும்...' என்று கூறியிருக்கிறாள். இதைக் கேள்விப்பட்ட வாலிபன், ஆண்களுக்கே உரிய கர்வத்துடன், 'என்னைப் பார்த்த பின் தான், கல்யாணம் செய்துப்பேன்னு சொல்ற பெண், எனக்கு வேண்டாம்...' என்று கூறி விட்டான்.
எத்தனையோ மாப்பிள்ளைகள், 'பெண்ணை பார்த்து, எனக்கு பிடித்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்...' என்று கூறுவதில்லையா... அதையே ஒரு பெண் சொன்னால், அவள் ஆணவம் பிடித்தவள், பிடிவாதக்காரி, அடக்கமில்லாதவள் என்று முடிவு செய்து விடுவதா... ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா?
கொஞ்ச நாட்களுக்கு முன், அந்தப் பெண்ணின் படிப்பு, அந்தஸ்துக்கு ஏற்ப, வெளிநாட்டில் பணிபுரியும் மாப்பிள்ளை அமைந்து, திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
இந்தப் பெண்ணை, 'ரிஜக்ட்' செய்த பையனுக்கு தான், இன்னும் பெண் தேடி கொண்டு இருக்கின்றனர்.
— சியாமளா கபிலன், ராமநாதபுரம்.
இதையுமா வீடியோ எடுப்பர்!
சமீபத்தில், உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அவருடைய மகன், வெளிநாட்டில் வேலை செய்வதால், விமான டிக்கெட் உடனடியாக கிடைக்காததால், அவரால், இந்தியா வர முடியவில்லை. வேறு வழியின்றி, மகன் இல்லாமல், இறுதி சடங்கை செய்தனர். சடங்கு நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, மகனுக்கு அனுப்பி வைத்தனர்.
வெளிநாட்டில் இருக்கும் அண்ணனுக்கு தம்பி, தங்கைகளின் திருமண, வீடியோ படத்தை, அனுப்பி வைப்பதை கேள்விப் பட்டிருக்கிறோம். அப்பாவின் இறுதி சடங்கை படம் எடுத்து, அனுப்பி வைத்தது, மனதை என்னவோ செய்தது. தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத சூழலில் உள்ள அத்தகைய வேலை அவசியமா? அங்கு சம்பாதிக்கும் பணத்தால், இந்த இழப்பை ஈடு கட்ட முடியுமா!
வெளிநாட்டுக்கு போய், பணம் சம்பாதிக்கும் இளைஞர்கள், இதுகுறித்து யோசிக்க வேண்டும்.
— ஜெ.கண்ணன், சென்னை.
பேராசை கொண்டு...
ஒரு நாள், என் மாமாவின் கடைக்கு, முன்பின் தெரியாத சிலர் வந்து, 'எங்களிடம் கள்ள நோட்டு இருக்கிறது; நீங்கள் நூறு ரூபாய் கொடுத்தால், இருநூறு ரூபாய் தருவோம். அது, கள்ள நோட்டு என்று, யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சந்தேகமாக இருந்தால், நீங்களே மாற்றிப் பாருங்கள்...' என, கூறியுள்ளனர். என் மாமாவும், சபலப்பட்டு, நூறு ரூபாய் கொடுத்து, இருநூறு ரூபாய் பெற்று, அதை, மாற்றியிருக்கிறார். யாரும் கள்ள நோட்டு என்று கண்டுபிடிக்காததால், மேலும் ஆசை வந்து, இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து, அந்த நபர்களிடம் இருந்து, நான்காயிரம் ரூபாய் வாங்கினார். இந்த பணத்தையும் வெளி ஆட்களிடம் கொடுத்துள்ளார். இப்போதும் யாரும் கண்டுபிடிக்காததால், பேராசைபட்டு,
40 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு, அவர்களிடம் சென்றுள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட அவர்கள், பணத்திற்கு பதிலாக அடி, உதை கொடுத்து அனுப்பி விட்டனர்.
அதன்பின் தான் தெரிந்தது, அவர்கள் கள்ள நோட்டு அடிப்பவர்கள் அல்ல; நல்ல நோட்டையே கள்ள நோட்டு என்று சொல்லி கொடுத்து, சபலப்படுத்தி, பின், பெரும் தொகையுடன் வரும் போது, அடித்து, பணத்தை பிடுங்கிக் கொண்டு ஓடும் ஏமாற்றுக்காரர்கள் என்று!
எங்கள் ஊரில், நிறைய பேர் இப்படி ஏமாந்துள்ளனர். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்!
— கே.வி.கதிர்ச்செல்வன், திருக்கோவிலூர்.
