
தாசில்தார் அலுவலகம்-
''சார்... நம்ப காந்தி, இந்த மாசத்தோட ரிட்டயர்டு. உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்,'' என, தாசில்தாரிடம் கூறினார், ஆர்.ஐ., மணி.
''எஸ் மணி... நானே அதபத்தி பேசணும்ன்னு இருந்தேன். பணம் கலெக்ட் பண்ணுங்க, எம் பேர்ல ஒரு, 10 ஆயிரம் எழுதிக்குங்க. கிராண்டா, ஸ்டார் ஹோட்டல்ல, 'பார்ட்டி' வெச்சிடலாம் ஓ.கே.,''
''ஷ்யூர் சார்... ஆனா, ஒரு சந்தேகம். அவரப் பத்தி தான் தெரியுமே, உத்தமர்னு பேர் வாங்கிட்டாரு. இதுக்கு ஒத்துப்பாரா?'' கேட்டார், மணி.
''ஏன், இது எல்லா ஆபீஸ்லயும் நடக்கற சம்பிரதாயம் தான!''
''இருந்தாலும், இவரு ஒரு மாதிரி சார்... மூஞ்சில அடிச்சா மாதிரி ஏதாவது சொல்லிட்டா.''
''என்னன்னு.''
''எனக்கு எந்த, 'பார்ட்டி'யும் வேண்டாம். அத கொடுக்கற தகுதி உங்களுக்கு இல்லேன்னு ஏதாவது சொல்லிட்டா?'' கேட்டார், மணி.
''கரெக்ட் தான். ஆனா, அதுக்குன்னு விட்டுற முடியுமா, பாவம்யா அவரு... பேரு என்ன மாணிக்கம் தான? பாரு, நேர்மையா இருந்து, காந்தின்னு பேரு வாங்கி, சொந்த பேரே மறந்து போச்சு.
''அவரு மாதிரி ஒருத்தர் ரெண்டு பேரு இருக்கறதாலதான் மழையே கொட்டுது. நாம தான் அவர மாதிரி இருக்க முடியல; அவர பாராட்டி பேசற வாய்ப்பாவது நமக்கு வேணும்ப்பா, நீ அவர கூப்பிடு. நானே பேசறேன்.''
உடனே செயலில் இறங்கினார், மணி.
மாணிக்கத்தை கேன்டீனில் கண்டுபிடித்தார். அப்போது தான் லஞ்ச் முடித்திருந்தார், மாணிக்கம்.
''சூப்பிரண்ட் சார், தாசில்தார் உங்களை பார்க்கணும்னாரு. உடனே வாங்க,'' என்றார்.
புன்னைகையோடு மணியை பின் தொடர்ந்தார், சூப்பிரண்டன்டன்ட் மாணிக்கம்; தாசில்தார் முன் நின்றார்.
''உட்காருங்க மிஸ்டர் மாணிக்கம்.''
''பரவால்ல சார்!''
''சரி, உங்க விருப்பம். எவ்வளவு வருஷம், மொத்தமா சர்வீஸ் செஞ்சிருக்கீங்க?''
''முப்பத்தி நாலு வருஷம் சார்!''
சுற்றும்முற்றும் பார்த்த தாசில்தார், மெதுவான குரலில், ''எப்படி மாணிக்கம்... நீங்க, உங்க சர்வீஸ் பூரா நேர்மையா இருந்தீங்க?''
''அது எங்கப்பா சொல்லி கொடுத்தது சார்... எனக்கும் பிடிச்சிருந்தது, மனசில குற்ற உணர்ச்சி இல்லாம இருக்கு. வர்ற பொதுமக்களுக்கு நேர்மையா, நம்பிக்கையா இருக்கிறதுல ஒரு திருப்தி இருக்கு சார்,'' என்றார், மாணிக்கம்.
''சரி சரி... உங்க மனைவி வேலை பாக்குறாங்களா?''
''இல்ல சார்.''
''சரி, பசங்க மூணு பேர்னு தெரியும். எப்படி ஒருத்தர் சம்பளத்துல, லஞ்சம்ன்னு நயாபைசா வாங்காம... 'யு ஆர் கிரேட்' மாணிக்கம். உங்கள நினைச்சா கொஞ்சம் பொறாமையா இருக்கு.
''சரி, விஷயத்துக்கு வர்றேன். இந்த மாசம், நீங்க, 'ரிட்டயர்டு' ஆகறீங்க. கடைசி நாள், உங்களுக்கு ஒரு, 'செண்ட் ஆப் பார்ட்டி' கொடுக்கணும். நீங்க மறுக்கக் கூடாது,'' என்றார், தாசில்தார்.
''நாளைக்கு சொல்றேன் சார்...'' பணிவாக பதில் சொன்னார், மாணிக்கம்.
வற்புறுத்தி உடனே கேட்டால், மறுத்தாலும் மறுப்பார் என்று புரிந்து, ''ஓ.கே., நீங்க ஒத்துப்பீங்கன்னு நம்பறேன்,'' என தாசில்தார் சொல்ல, வெளியே வந்தார், மாணிக்கம்.
அன்றிரவு, மனைவி பூர்ணிமா ஆச்சரியமாக, ''ஏங்க, இதுல என்னங்க தப்பு... ஒரு கவுரவம் தான? வீடு வரை ஜீப்ல கொண்டு வந்து விடுவாங்க; நாமளும் அவங்கள கவனிக்கலாம். நெறைய, 'கிப்ட்' வரும். பசங்களும் சந்தோஷப்படுவாங்க,'' ஒரு சராசரி பெண்ணாக சந்தோஷப்பட்டாள்.
சிரித்தார், மாணிக்கம்.
''இல்ல பூர்ணிமா. ஆபிஸ்ல நான் விரும்பலேன்னா கூட, என் நேர்மைய மதிச்சு, என்னை கவுரவப்படுத்த நினைக்கறாங்க; அது புரியுது. ஆனா, நேரடியாவோ இல்ல மறைமுகமாவோ லஞ்சம் வாங்கறவங்க, லஞ்சமே வாங்காத ஆள, பாராட்டறது எந்த வகையில் சேரும். போலியா இல்ல, நான் அப்படிப்பட்ட ஒரு மரியாதைய எதிர்பார்க்கற மனுஷன் இல்ல. மரியாதையிலயும் ஒரு நேர்மை இருக்கணும்!''
''என்னங்க நீங்க, இப்படி சொன்னா ரொம்ப கர்வம், திமிர்னு நெனைக்க மாட்டாங்களா? வேணும்னா பரிசு எல்லாம் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க. அன்னிக்கு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு விடைபெறுவது தான நியாயம். ஆபிஸ்ல, உங்கள மாதிரி ஒருத்தர் கூடவா கிடையாது?'' கேட்டாள், பூர்ணிமா.
''உண்மைய சொல்லவா, பூர்ணிமா. சிலர், நேரிடையா வாங்க மாட்டாங்க. மாசா மாசம், பங்கு பிரிச்சு, கொடுக்கறத வாங்கிப்பாங்க. சிலர், பணமா வாங்க மாட்டாங்க; நெறைய லீவு போட்டு, அப்பறமா கையெழுத்து போடுவாங்க.
''சிலர், லஞ்சம்ன்னு வாங்காம, சிபாரிசு செஞ்சு காரியம் சாதிச்சுப்பாங்க. நீ சொல்றதுக்காக நானும் ஒத்துக்கிட்டு, அந்த, 'பார்ட்டி'ல என்னை புகழ்ந்து பேசறத கேட்டு, சந்தோஷப்பட்டா, அது கூட எனக்கு தர்ற ஒரு லஞ்சம் தான்.''
மாணிக்கம் சொல்ல, முறைத்தாள், பூர்ணிமா.
''ரொம்பத்தான் ஓவரா போறீங்க. அது எப்படிங்க லஞ்சமாகும்? உங்கள பத்தி நல்லவிதமா சொன்னா அது உண்மை தான?''
''சரி, அந்த உண்மைய இவ்வளவு நாளா ஏன் சொல்லல. மறைமுகமா கிசுகிசுன்னுதான பேசினாங்க. 'பொழைக்க தெரியாத ஆளு, காந்தின்னு நினைப்பு; இவன நம்பக் கூடாது; ஒருநாள் நம்பள போட்டு கொடுப்பான்' அப்படி இப்படின்னு பேசினாங்க...
''ஆனா, இன்னிக்கு ஞானம் வந்த மாதிரி, நான் சந்தோஷப்படணும்ன்னு புகழ்ந்து பேசறது, ஒரு வகை லஞ்சம். பொருளா, பணமா கொடுக்கிறது, வாங்கறவங்க சந்தோஷப்படத்தான? எனக்கு அத வார்த்தையில் தர்றதா நினைக்கிறாங்க, அவ்வளவு தான்.''
மாணிக்கம் சொல்ல, வெறுப்பின் உச்சத்திற்கே போனாள், பூர்ணிமா.
''சரியான சைக்கோ நீங்க... எப்படியாவது போங்க,'' என்று சொல்லி, துாங்கப் போனாள்.
மறுநாள் -
'கேம்ப்' சென்றிருந்தார், தாசில்தார்.
டெபுடி தாசில்தாரின் அறைக்கு சென்றார், மாணிக்கம்.
''ஓ... வாங்க வாங்க... என்ன முடிவு செஞ்சிருக்கீங்க. ஓ.கே.,தான!'' விஷயம் தெரிந்து கேட்டார், டெபுடி.
''மன்னிக்கணும் சார்... எனக்கு உங்க அன்பே போதும். மத்தபடி, இந்த விழா, 'பார்ட்டி' எல்லாம் வேண்டாம் சார்... ப்ளீஸ்!''
மாணிக்கம் தெளிவாக சொல்ல, சற்று முறைத்தார், டெபுடி.
சில நொடிகளுக்கு பிறகு, ''இல்ல, மிஸ்டர் மாணிக்கம்... உங்க முடிவு தப்பு. உங்களுக்கு இந்த ஆபிஸ்ல உள்ளவங்க மேல, லஞ்சம்கிற விஷயத்துல வெறுப்பு இருக்கிறது புரியுது. ஆனா, இது புரையோடின ஒரு கருத்து.
''எல்லாரும் வேலைக்கு வரும்போது, லஞ்சம் வாங்கணும்னு வர்றதில்ல; சம்பளத்துக்கு தான் வேலை செய்யறாங்க. அப்புறமா மாறிடறாங்க. காரணம், இதெல்லாம் இங்க சகஜம். 'வேலைய சீக்கிரம் முடிங்க, என்ன பார்மாலிட்டியோ அத செய்யறேன்'னு கூட வேலை பார்க்கிறவங்க சொல்லுவாங்க. மக்களும் மாத்திடறாங்க.
''பொதுவா, மனுஷங்க பாவம்; பலகீனமானவங்க. முதல்ல அதுக்கு பலியாவாங்க, அப்புறமா அதுக்கு பழகிடறாங்க. நீங்க விதிவிலக்கு. அத விடுங்க, இந்த ஒரு தப்பு செய்யறதால, எல்லாரும் கெட்டவங்க இல்ல.
''மேலும், உங்க மேல உள்ள அன்பின் மரியாதையில தான இப்படி கேக்கறோம்... அந்த அன்பு உண்மை தானே. அந்த உண்மைக்கு நீங்க ஏன் மதிப்பு தர மாட்டேங்கறீங்க... யோசிங்க,''
என்றார், டெபுடி.
உடனே என்ன சொல்வது என்று தெரியாமல், தர்மசங்கடமாக உணர்ந்தார், மாணிக்கம்.
''சரி சார்... ஆனா, சில கோரிக்கைகள். 'பார்ட்டி'ல என்னை புகழ்ந்து, யாரும் பேசக் கூடாது. எந்த பரிசையும் ஏத்துக்க மாட்டேன்.''
''குட். உங்க விருப்பப்படியே செஞ்சிடலாம்.''
மகிழ்ச்சியுடன், உடனே தாசில்தாரிடம் போனில் பேசினார், டெபுடி.
அந்த நாள் வந்தது.
மாலையில், அந்த அலுவலகத்தின் மொட்டை மாடியில், 'ஷாமியானா' போடப்பட்டு, மாணிக்கம் நடுநாயகமாக உட்கார்ந்திருக்க, அனைத்து பணியாளர்களும் ஆஜராகியிருந்தனர். அனைவருக்கும் டீ, பிஸ்கட் வழங்கப்பட்டது. மனைவியை கூட தவிர்த்திருந்தார், மாணிக்கம்.
மாணிக்கத்திற்கு மாலையும், சால்வையும் அணிவித்தார், தாசில்தார்.
மாணிக்கத்திடம் மெதுவாக, ''நான் மட்டும் கொஞ்சம் பேசிக்கறேன். பயப்படாதீங்க,
புகழ மாட்டேன்.''
''பேசுங்க சார்!'' என்றார், மாணிக்கம்.
''எல்லாருக்கும் வணக்கம்... இன்று, சூப்பிரண்டன்டன்ட் மாணிக்கத்தின் பணி நிறைவு மற்றும் வழியனுப்பு நாள். இதில் தன்னை யாரும் புகழக் கூடாது என்பது, அவரது வேண்டுகோள்.
''இப்படிப்பட்ட ஒரு மனிதருடன் வேலை செய்த நாம், பெரும் பாக்கியசாலிகள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. அதற்காக நம்மையே நாம் கை தட்டி பாராட்டிக் கொள்ளலாம்...'' என்றதும் கரகோஷம் அதிர்ந்தது.
''இந்த நிகழ்ச்சிக்கு, முதலில் மாணிக்கம் மனதார ஒத்துக் கொள்ளவில்லை. அதற்கு காரணம், உண்மையில் என்னவென்று யோசித்தால், சொல்லவே வெட்கமாக உள்ளது. அதற்கு நமக்கு தகுதியில்லை என்பதே அது. பாவம், எப்படி அதை அவர் வெளிப்படையாக கூறுவார்?
''சரி, ஏன் தகுதியில்லை... இந்தியா போன்ற நாட்டில், ஒரு உத்தரவாதத்துடன் கூடிய அரசு வேலையில் இருக்கும் நாம், நமக்கு கீழே உள்ளவர்களை மறந்து, சம்பளத்தை மீறி, மற்றதை எதிர்பார்ப்பது நியாயமா? இது என்ன திடீர் ஞானம் வந்தவன் போல் பேசுவதாக எண்ணாதீர்கள்.
''காரணம் ஆயிரம் சொன்னாலும், நம் தவறுகளுக்கு பாவ மன்னிப்பை இவரைப் போன்றவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தானே கோர முடியும்? எனவே, மாணிக்கத்தை உண்மையாக மகிழ்விக்க, அவருக்கு ஒரு உறுதியை நான் இன்று தருகிறேன். 'இனி, உங்களைப் போல நானும் மாறுவேன்' என்பது உறுதி.
''கடந்த காலத்தை மாற்ற முடியாது. உங்களது வாழ்க்கை, என்னைப் போன்றவர்களில் ஒருவனிடம் மாற்றம் கொண்டு வந்தால் கூட, அது உங்கள் வெற்றியே. இவ்வளவு துாரம் என்னை பேச அனுமதித்ததற்கு நன்றி.''
தாசில்தார் பேசி முடித்ததும், கூட்டம் மொத்தமும் கண் கலங்கி கை தட்டியது. தன் கண்ணீரை துடைத்தப்படி ஏற்புரை வழங்க எழுந்தார், மாணிக்கம்.
தாசில்தாரைப் பார்த்து வணங்கி, பேச்சை ஆரம்பிக்க சற்று சிரமப்பட்டார்.
''எல்லாருக்கும் நன்றி... இயல்பாக, கொடுக்கப்பட்ட சம்பளத்திற்கு, என் கடமையை செய்தேன். அதற்கே இவ்வளவு பாராட்டு. நினைக்கவே மனது கனக்கிறது. இனி பெறப்போகும் பென்ஷனுக்கு நான் என்ன செய்ய போகிறேன்; இல்லை, என்ன செய்ய முடியும்?
''என்னைப் பார்த்து மாறி விட்டதாக தாசில்தார் கூறினார். நான் என்ன அவ்வளவு வித்யாசமானவனா? எல்லாரும் மனசாட்சிபடி இருந்தாலே போதும். இந்த நிகழ்வை, முதலில் நான் மறுத்தேன். மன்னித்துக் கொள்ளுங்கள், அது தவறு. உங்கள் எல்லாரையும் ஒன்றாக பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்பேன். மிக்க நன்றி!'' சுருக்கமாக முடித்தார், மாணிக்கம்.
பிறகு, அவருடன் வீட்டிற்கு செல்ல பலர் விரும்பினாலும், ''வேண்டாம்... நான் இந்த ஆபிசை விட்டு பிரியறதா நினைக்கல,'' என சொல்லி, தன் ஸ்கூட்டரில் தனியாக சென்றார்.
மறுநாள் காலை -
ஆபிஸ் வந்த அனைவருக்கும் மிக ஆச்சரியம். ஒரு சிறிய குடைப்பந்தலில் நாற்காலி மற்றும் மடக்கும் மேசையுடன், ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தார், மாணிக்கம். அருகில் ஒரு வயதான பெண்மணி!
விசாரித்த சில முன்னாள் சக ஊழியர்களிடம், ''ஆமாம்... வாங்கற பென்ஷனுக்கு ஏதாவது செய்யலாம்ன்னு தோணிச்சு. அதான் அரை நாள் இப்படி உட்கார்ந்து என்னாலான உதவியை, சில வழிமுறைகளை பொதுமக்களுக்கு சொல்லப் போறேன். இது கூட பெரிய விஷயமில்ல; கடமை தான்,'' என்றார், மாணிக்கம்.
இப்போது, இவர் மனிதரில் மாணிக்கம் என்பதில் என்ன சந்தேகம் இருக்க
முடியும்?
கீதா சீனிவாசன்