தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பேச்சுக்கு ஒரு அம்மன்!

பேச்சுக்கு ஒரு அம்மன்!

பேச்சுக்கு ஒரு அம்மன்!


PUBLISHED ON : அக் 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கள் குழந்தைகள் புத்திசாலித்தனமாக பேச வேண்டும் என, அனைத்து பெற்றோரும் விரும்புவர். இதற்கு பயனுள்ள வார்த்தை ஜாலம் தான் முக்கியம். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு, நீங்கள் அறம் வளர்த்த அம்மன் வரலாறைத் தான் கூற வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. இங்கு அறம் வளர்த்த அம்மன் காட்சி தருகிறாள். தர்மசம்வர்த்தினி என்றும் சொல்வர். இவளைப் பற்றிய ஒரு அழகான கதை.

கைலாயத்தில் சிவன், தன் தேவியரான பார்வதி மற்றும் கங்காதேவியுடன் அமர்ந்திருந்தார். அவர்கள் முன் விளையாடிக் கொண்டிருந்தார், குழந்தை முருகன்.

குழந்தைக்கு திடீரென ஒரு ஆசை. தன் தந்தையின் கழுத்தில், நீல நிறத்தில் இருக்கும் உருண்டையைப் பிடித்து விளையாட தோன்றியது. உடனே, தாவிப் பாய்ந்து தந்தை மடியில் ஏறியது.

ஒரு இறைவன் மடியில், இன்னொரு இறைவன் இருந்ததைப் பார்த்த தேவர்கள், 'இது கண்கொள்ளாக் காட்சி...' என, தங்களை மறந்து, கூவினர். பார்வதிக்கும், கங்காதேவிக்கும் தங்கள் மகன் இவ்வாறு செய்ததைப் பார்த்து பேரானந்தம். சிவனும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார்.

நம் வீடுகளில், 'உனக்கு, அம்மாவைப் பிடிக்குமா, அப்பாவைப் பிடிக்குமா?' என்று குழந்தைகளிடம் கேட்போம்!

'இரண்டு பேரையும் பிடிக்கும்...' என்று சொல்வர், புத்திசாலி குழந்தைகள். இதே போல, இங்கும் ஒரு சர்ச்சையை உருவாக்கினார், சிவன்.

'முருகா, உனக்கு பார்வதி அம்மையைப் பிடிக்குமா? இல்லை, கங்கா மாதாவைப் பிடிக்குமா?' எனக் கேட்டார்.

'தந்தையே... அறன் மாதாவின் மீது தான் எனக்கு ஆசை...' என்றார், முருகன்.

சிவனுக்கு ஆனந்தமோ ஆனந்தம். உடனிருந்த பார்வதியும், கங்கையும் மகிழ்ச்சி பரவசத்தில் ஆழ்ந்தனர். காரணம், அறன் மாதா என்பவளைத் தான், நாம் தமிழகத்தில் அறம் வளர்த்த நாயகி என்கிறோம். இது, பார்வதி தேவியைக் குறிக்கும்.

அறன் என்ற சொல்லுக்கு தண்ணீர் என்ற பொருளும் உண்டு. மயங்கி விழுந்து விட்ட ஒருவனை எழுப்ப, முதலில் நாம் பயன்படுத்துவது தண்ணீர் தான். மனிதனுக்கு உயிர் தருவது, தண்ணீர்.

நீரில் உயர்ந்தது, கங்கா தீர்த்தம். இதைக் கேட்ட கங்காதேவி, தன்னைத் தான் முருகன், உயர்த்தி பேசியுள்ளான் என, நினைத்துக் கொண்டாள். பார்வதி தேவியோ, தன் பெயரைத் தான் முருகன் உச்சரித்திருக்கிறான் என, மகிழ்ந்து போனாள்.

ஆக, புத்திசாலித்தனமான ஒரு பதிலைச் சொல்லி, இருவரையும் மகிழ வைத்தார், முருகன்.

நீங்கள் உங்கள் பிள்ளையுடன், திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று, அங்குள்ள அம்பாளிடம், 'தாயே, உன் பிள்ளையைப் போல், என் பிள்ளையையும் புத்திசாலியாக்கு...' என வேண்டிக் கொள்ளுங்கள். அவள் அருளால், உங்கள் பிள்ளையும் புத்திசாலித்தனமாக வளர்வர்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us