தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : அக் 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இப்படியும் செய்யலாமே!

தன் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்திருந்தார், வசதி படைத்த நண்பர்.

அவர் ஊரிலுள்ள கோவில் குளத்தின் அருகில், பிறந்தநாள் விழா நடைபெறும் என, அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தார்.

ஆச்சர்யப்பட்டு, அன்றைய தினம் ஆவலோடு சென்றேன். அங்கே நண்பர் செய்திருந்த செயலைப் பார்த்து, வியந்து நின்றேன்.

மழைநீர் சேகரிப்புக்கு ஏற்ற வகையில், பொக்லைன் இயந்திரம் கொண்டு, கோவில் குளத்தை துார் வாரி சுத்தப்படுத்தியதுடன், குளத்தின் கரைகளையும் சீரமைத்திருந்தார்.

குழந்தையின் பிறந்தநாளை, சமூக சேவைக்குரிய நாளாக மாற்றி, வாழ்த்த வந்தவர்களையும் பெருமிதப்படுத்திய நண்பரை, மகிழ்ச்சியோடு பாராட்டினோம்.

வாசகர்களே... வீட்டு சுபகாரியங்களில், இப்படியும் நம்மால் முடிந்த சிறிய அளவிலான சமூகப் பணிகளை செய்திடலாமே!

வடிவேல் முருகன், நெல்லை.

இளைஞர்களின் புது முயற்சி!

உறவினர் வசிக்கும் கிராமத்தில், ஏராளமான இளைஞர்கள், படித்து, வேலை தேடிக் கொண்டிருந்தனர்.

சில மாதங்களுக்கு முன், இவர்களை சந்தித்த வேளாண் அலுவலர் ஒருவர், பயனுள்ள ஆலோசனை ஒன்றை கூறினார்.

அதன்படி, அந்த இளைஞர்கள், முதலீட்டுக்காக, மனை வாங்கி போட்டிருக்கும் உறவினர் மற்றும் நண்பர்களை அணுகி, அந்த இடங்களில் தோட்டப் பயிர்கள், பழச்செடிகள் மற்றும் பூச்செடிகள் வைத்து, பராமரிக்க அனுமதி வேண்டினர்.

அவர்களின் ஒப்புதலுடனும், வேளாண் அலுவலரின் வழி காட்டுதலுடனும், வீணாக கிடந்த மனைகள், வேலையில்லா இளைஞர்களின் முயற்சியால், இப்போது பச்சை பசேலென்று, பணம் கொழிக்கும் பூமியாக மாறியிருக்கிறது.

விளைச்சலில் உரிய பங்கை நில உரிமையாளருக்கு கொடுத்து, உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறும் இளைஞர்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர்.

ஆர்வமும், ஆதரவும், தகுந்த வழிகாட்டலும் இருந்தால், இளைஞர்கள், முன்னேற்றப் பாதையில் சென்று, வாழ்க்கையை வென்று காட்டுவர் என்பது உண்மை!

- -வி.சங்கர், சென்னை.

அக்கா பாசத்தால் அழிந்த தம்பி!

தெரிந்த பெண்மணிக்கு, ஒரு மகள், ஒரு மகன். இதில், மூத்தவளுக்கு, திருமணம் முடிந்து, ஆண் ஒன்று, பெண் ஒன்று என, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இளையவனுக்கு, வயது, 30. சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.

அக்கா மீதிருந்த பாசத்தால், அக்கா வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டிலான பிறகே, திருமணம் செய்து கொண்டான்.

அவனுக்கு திருமணம் முடிந்த கையோடு, வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டார், அக்காவின் கணவர். இதையடுத்து, தாய் வீட்டில் இருக்க, குழந்தைகளோடு வந்து விட்டாள், அக்கா.

அக்கா பாசம் கண்ணை மறைக்க, புதிதாக திருமணமான மனைவியை கண்டுகொள்ளாமல், அக்கா மற்றும் அவளது குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றும் சேவகனாக மாறினான், தம்பி.

'காலா காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்...' என்ற மனைவியின் ஆதங்கத்தையும், ஆசையையும் புறக்கணித்தான்.

'கணவரில்லாமல் அக்கா தனிமையில் இருக்கும் போது, நமக்கு தாம்பத்தியம் தேவையில்லை; அக்கா கணவர் வந்தபின், நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்...' என்று, கூறியுள்ளான்.

'உன் அக்கா, இரண்டு குழந்தைகளை பெற்றுவிட்டு, தனிமையில் இருக்கிறாள். தாமதமாக திருமணம் செய்ததோடு, குழந்தை பெற்றுக் கொள்ள தாமதித்தால், குழந்தை பாக்கியமே கிடைக்காமல் கூட போகலாம். கண்மூடித்தனமான அக்கா பாசத்திலிருந்து விடுபட்டு, நம் வாழ்க்கையையும் கருத்தில் கொள்ளுங்கள்...' என்று, எவ்வளவோ கெஞ்சினாள், மனைவி.

அவனது முடிவில் உறுதியாக இருந்ததால், 'உன்னுடன் வாழ முடியாது...' என, பிறந்த வீட்டுக்கு போய் விட்டாள்.

'மனைவி போனால் என்ன... மாமா வந்த பிறகு, உனக்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைக்கிறேன்...' என, அவனை மூளைச்சலவை செய்து, தனக்கு அடிமையாக வைத்துக் கொண்டிருக்கிறாள், அக்கா.

தன் சுயநலத்திற்காக, வாழ்க்கையை நாசமாக்கும் இந்த அக்காவை என்ன செய்வது?

-எஸ்.அலமேலு, கள்ளக்குறிச்சி.

வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்!

தற்போது, சமையல் மற்றும் தையலில் திறமை பெற்ற இல்லத்தரசிகள் பலர், வீட்டில் இருந்தபடியே கேட்டரிங் மற்றும் தையல் வேலை செய்து, கணிசமாக சம்பாதிக்கின்றனர்.

எனக்குத் தெரிந்த பெண், பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில், கணிசமாக சம்பாதிக்கிறார்.

விசேஷ தினங்களில் அதிக, 'ஆர்டர்' கிடைத்து, உதவிக்கு ஆள் கிடைக்காமல், 'பிசினஸ்' செய்பவர்கள் திண்டாடும்போது, இவர், ஆபத்பாந்தவனாக செயல்படுகிறார்.

தெரிந்த தையற்காரரிடமிருந்து, பட்டன் தைக்க வேண்டிய துணிகளை வீட்டுக்கு வாங்கி வந்து, பட்டன் தைத்து, இஸ்திரி செய்து, வாடிக்கையாளர்களுக்கு, 'டெலிவரி' செய்கிறார்.

இதேபோல், உணவுப் பண்டங்கள் மற்றும் பட்சணங்களை பாக்கெட்டில் அடைத்து, 'டெலிவரி' செய்ய உதவுகிறார்.

வெட்டி கவுரவம் பார்க்காமல், நேரத்தை வீணடிக்காமல், பண்டிகைக்கால அதிகப்படியான செலவுகளை சமாளிக்க, தனக்கு தெரிந்த வேலைகளை செய்து, கூடுதலாக சம்பாதிக்கிறார்.

மற்ற பெண்களும், இவரைப் பின்பற்றி தம்மால் இயன்ற வழிகளில் வருமானம் ஈட்டலாமே!

மீனலோசனி பட்டாபிராமன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us