PUBLISHED ON : ஏப் 25, 2021

கிழக்காசிய நாடான ஜப்பானின் ஒசாகா நகரில், 'ஹன்சின் எக்ஸ்பிரஸ் வே' என்ற, அதிவிரைவு நெடுஞ்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஒரே ஒரு இடத்தில் மட்டும் நிலம் கையகப்படுத்துவது, பெரிய சட்டப் போராட்டமாக அமைந்து விட்டது.
'நாங்கள் ஏற்கனவே பிரமாண்ட, 16 அடுக்கு மாடி கட்டடத்தை கட்டி விட்டோம். சாலை அமைப்பதற்காக, அதை இடிக்க முடியாது...' என, கூறி விட்டது, ஒரு தனியார் நிறுவனம்.
இதையடுத்து, அந்த கட்டடத்தின், 5, 6 மற்றும் 7வது தளங்களுக்கான இடம் மட்டும், அரசுக்கு வழங்கப்பட்டது. நகரின் மையப்பகுதியில் பாலம் அமைத்து, அந்த கட்டடத்தின், 5, 6 மற்றும் 7வது தளங்களுக்குள் புகுந்து செல்லும் வகையில், வெற்றிகரமாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள், அந்த பிரம்மாண்ட கட்டடத்துக்குள் புகுந்து, வெளியில் வருவதை பார்த்து ஆச்சரியப் படுகின்றனர், சுற்றுலாப் பயணியர்.
— ஜோல்னாபையன்
