PUBLISHED ON : செப் 30, 2012

பின்லாந்தின் லோஜா என்ற இடத்தில், ஒரு வித்தியாசமான ஓட்டல் இயங்கி வருகிறது. 150 ஆண்டுகள் பழமையான ஒரு சுரங்கத்தில், இந்த ஓட்டல் செயல்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் இருந்து, 80 மீட்டர் ஆழத்தில், செயல்படும் இந்த சுரங்க ஓட்டலில், வழக்கமாக, மற்ற நவீன ஓட்டல்களில் உள்ள, இருக்கை, அலங்கார விளக்குகள், டைனிங் டேபிள் உள்ளிட்ட, அனைத்து வசதிகளும் உள்ளன. ஒரே நேரத்தில், 64 பேர், இந்த ஓட்டலில் உணவருந்த முடியும். மேலிருந்து கீழே வருவதற்கு, லிப்ட் வசதியும் உள்ளது. இங்கு சாப்பிடுவதற்கு, ஒரு நபருக்கு, 8,600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
'பல ஆண்டுகளுக்கு முன், சுண்ணாம்பு கற்கள் எடுப்பதற்காக, தோண்டப்பட்டது, இந்த சுரங்கம். தற்போது, இதை நாங்கள் குத்தகைக்கு எடுத்து, ஓட்டலாக மாற்றியுள்ளோம். இந்த பூமிப் பந்தின், பரபரப்பான நிகழ்வுகளில் இருந்து விலகி, சிறிது நேரமாவது, நிம்மதி தேடுவோருக்கு, இந்த ஓட்டலில் சாப்பிடுவது, நிம்மதியையும், வித்தியாசமான அனுபவத்தையும் தரும்...' என்கின்றனர், ஓட்டல் நிர்வாகிகள்.
— ஜோல்னா பையன்.
