தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 30, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு—

என் வயது 33. திருமணமாகி, மூன்று வருடங்கள் ஆகின்றன. எம்.ஏ., எம்.பில்., முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். திருமணமாகி, இந்த மூன்று வருடத்தில், வேதனையை மட்டுமே அனுபவித்திருக்கிறேன். ஏனென்றால், எனக்கு அமைந்ததே மோசடி திருமணம் தான். அவள் ஏற்கனவே திருமணமானவள் என்பது, திருமணத்திற்கு பிறகு தான் எனக்கு தெரிய வந்தது.

பெண் பார்க்க சென்ற போது, அக்கம் பக்கம் விசாரிக்கச் சென்றோம். பெண்ணின் தாயாரும், மற்றவர்களும் சேர்ந்து, கையை பிடித்து இழுத்து வந்து விட்டனர். பெண் மிகவும் நல்லவள் என்று சர்டிபிகேட் கொடுத்தனர். பெண்ணின் பெயரையே, திருமணத்திற்கு முன் ஒரு பெயரும், திருமணத்திற்கு பின், ஒரு பெயரும் என, மாற்றி மாற்றி கூறினர். பிளஸ் 2 படித்திருக்கிறாள் என்று கூறினர். பிறகு, 8ம் வகுப்பு தான் படித்திருக்கிறாள் என்பது தெரிய வந்தது.

அம்மா, எனக்கு அப்பா - அம்மா இல்லை. உடன் பிறந்தவர்கள் யாரும், என்னை சரியாக கவனிப்பது இல்லை. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, என் பெரியப்பா மகன், பெண்ணின் வீட்டில் பணத்தை வாங்கிக் கொண்டு, என்னை ஒரு சாக்கடை குடும்பத்தில் தள்ளி இருக்கிறார். பெரியப்பா மகன் ஒரு கல்யாண புரோக்கர். அவர் என்னை உரிமையோடு திட்டுவது போல் நடித்து, மிரட்டி, உருட்டி இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.

சரி அம்மா, நடந்தது நடந்து விட்டது. வந்தவள் திருமணத்திற்கு பிறகாவது, ஒழுங்காக குடும்பம் நடத்த வேண்டும் இல்லையா? அவளால் தான், என் வாழ்க்கையே நாசமாகி விட்டது.

அவளுக்கும், அவள் மாமாவிற்கும், ஏற்கனவே, கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அவளால், மாமனை விட முடியாமல், முதல் புருஷனை விட்டு, ஓடி வந்திருக்கிறாள். சில வருடங்களுக்கு பின், அவளை மூளைச்சலவை செய்து, என் தலையில் கட்டி வைத்திருக்கின்றனர்.

என்னையும், அதே டார்ச்சர் செய்ய ஆரம்பித்தாள். அவள் அக்கா புருஷன், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவன். அவளை, ஆறு வருடங்கள் மிலிட்டரிலேயே கூட வைத்திருந்திருக்கிறான். திருமணத்திற்கு பிறகும், அவளை ஒரு நிமிடம் கூட விட மாட்டேன் என்கிறான்.

தினமும், என் மொபைல் போனுக்கு, ரீ-சார்ஜ் செய்து விட்டு, போனை அவளிடம் கொடு என்பான். கொடுத்தால், என் எதிரிலேயே அவள் மணிக்கணக்காக, அவனிடம் இந்தியில் பேசி சிரிப்பாள். எனக்கு, இந்தி தெரியாது. திருமணமான புதிதில், ஊட்டிக்கு எங்களை கூட்டிச் சென்றான். அங்கு என் எதிரிலேயே நெருக்கமாக, இருவரும் நூற்றுக்கணக்கான போட்டோக்களை எடுத்துக் கொண்டனர்.

இதையெல்லாம் நான் கேட்டு, பிரச்னை செய்த போது, உன்னை மகளிர் போலீசில் சொல்லி மாட்டிவிடுவேன் என மிரட்டுகிறாள். அவனுடன் சேர்ந்து, இவளும் என்னை நான்கு மடங்காக சித்ரவதை செய்கிறாள்.

அவளுக்கு கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் அறிவுரை கூறினேன். குடும்பமாகி விட்டதே என்ற காரணத்திற்காக, அவள் எவ்வளவு டார்ச்சர் செய்தாலும், மன்னித்து குடும்பம் நடத்தினேன். அவள் திருந்தவே இல்லை.

அவளுடைய மாமனுடன், அவளை சேர்த்து வைப்பதே, அவளுடைய அம்மா தான். இது, அந்த ஊரில் உள்ளவர்களே சொன்னது. ஏனெனில், அவளது அம்மா வீட்டுக்கு பண உதவி செய்வது அவள் மாமா தான். அவள் வீட்டில் யாருமே வேலைக்கு செல்வதில்லை.

இந்நிலையில், அவள் கர்ப்பமானாள். கர்ப்பமான செய்தி கேட்டவுடன், அவள் அம்மா ஊரிலிருந்து, பப்பாளி காயை கொடுத்தனுப்பி இருந்தாள். இதற்கிடையில், நல்லமுறையில் சீமந்தம் செய்து அனுப்பி வைத்தேன். 2012ம் ஆண்டு, பெண் குழந்தை பிறந்தது. அதைக் கூட இரண்டு நாள் கழித்து தான் எனக்கு தெரிவித்தனர். குழந்தையை ஒரே தடவைதான் சென்று பார்த்தேன்.

இன்று, நானே சமைத்து சாப்பிட்டு வாழ்கிறேன். குழந்தையை தூக்கிக் கொண்டு வரும்படி, என் பெரியப்பா மகனிடம் பல தடவை சொல்லி விட்டேன். அதற்கு ஒரு பதிலும் இல்லை. அம்மா, நான் கண்ணீரில் மிதக்கிறேன். வேறு திருமணம் செய்யலாமா என்று எண்ணினால், போலீசில் மாட்டி விடுவேன் என மிரட்டுகிறாள். நீங்கள் தான் ஒரு நல்ல வழிகாட்ட வேண்டும்.

— இப்படிக்கு தங்கள் மகன்.

அன்புள்ள மகனுக்கு—

உன் கண்ணீர் கடிதம் கிடைத்தது.

பொதுவாக, ஒரு கைக்குட்டை வாங்க, ஆயிரம் ஆராய்ச்சி செய்யும் நாம், திருமணம் செய்யும் போது மட்டும், மகா அலட்சியமாக செயல்படுகிறோம். வேலியில் போகும் ஓணானை எடுத்து, வேட்டியில் இட்டுக்கொண்டு, குத்துதே குடையுதே என ஆலாபிப்பது போல, பொருத்தமில்லாத வாழ்க்கைத்துணையை தேடிக் கொண்டு, புலம்போ புலம்பு என்று புலம்புகிறோம். தகுதியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க, ஆறு மாதங்கள் செலவழிக்க சோம்பல்படும் நாம், திருமணத்திற்கு பிந்திய மீதி வாழ்நாளை, நரகத்தில் கழிக்கிறோம். வெட்டு,குத்து, வன்முறை, கோர்ட், கேஸ், விவாகரத்து, ஜீவனாம்சம் என, நாயாய், பேயாய் அலைகிறோம்.

உன் மனைவி, முதல் கணவனிடமிருந்து ஓடி வந்திருக்கிறாள் என்றால், அவனிடமிருந்து அவள் முறைப்படி விவாகரத்து பெறவில்லை என அர்த்தமாகிறது. அப்படியெனில், உனக்கும், அவளுக்கும் இடையே நடந்த திருமணம், சட்ட அங்கீகாரம் இல்லாததாகி விடுகிறது.

உன் மனைவிக்கு, அவளது முதல் கணவன் மூலம், குழந்தைகள் ஏதாவது பிறந்துள்ளனவா? முதல் கணவனோடு மூன்று, நான்கு ஆண்டுகளும், அக்காள் கணவனுடன், ஆறு ஆண்டுகளும் குடித்தனம் செய்திருக்கிறாள் உன் மனைவி. பத்து ஆண்டுகள், இரு ஆண்களுடன் குடும்பம் நடத்திய ஒரு பெண்ணின் உருவ அமைப்பு, மாறிப்போயிருக்குமே... அதை உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையா?

நீ ஏதோ ஒரு விதத்தில் பலவீனமானவன். உன்னைத் துணிந்து பலி ஆடாக்கலாம் என நினைத்து தான், உன்னை, அவளது தாயும், உன் பெரியப்பா மகனும், அவளுக்கு இரண்டாவது கணவனாக பார்த்து முடித்திருக்கின்றனர். இல்லையென்றால், அவளின் அக்கா கணவன், உன் மொபைல் போனுக்கு ரீ-சார்ஜ் செய்து விட்டு, போனை அவளிடம் கொடுக்கச் சொல்லி, உன் முன்பே அவளை மணிக்கணக்காக கொஞ்சுவானா?

உன் மனைவியுடன், அக்கா கணவன் தொடர்பு வைத்திருப்பது, உன் மனைவியின் அக்காவுக்கு தெரியாதா? உன் மனைவியின் அக்கா உயிருடன் இல்லையா? அல்லது அவள் தன் கணவனிடமிருத்து, விவாகரத்து பெற்று போய் விட்டாளா அல்லது யாருடனாவது ஓடிப்போய் விட்டாளா?

இப்போது உன் மனைவி பெற்றிருக்கும் பெண் குழந்தை கூட, உனக்கு பிறந்ததா என்பது சந்தேகமே. இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகனே?

முதல் திருமணத்தை மறைத்து விட்டு, உன் மனைவி, உன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், அக்கா கணவனோடு முறைகேடான உறவில் ஈடுபட்டு வருவதாகவும், போலீசில் புகார் கொடு. பெண் குழந்தை, உனக்கு பிறந்ததுதானா என்பதை உறுதி செய்ய, மரபியல் சோதனை செய்ய நீதிமன்றத்தை அணுகு.

முறைப்படி, அவளுடன் நடந்த திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்யட்டும். அதன்பின், அவசரப்படாமல், ஆற அமர யோசித்து, தீர விசாரித்து, உனக்கு பொருத்தமான துணையை தேடிக் கொள்.

உன் மனைவிக்கு எதிரான காவல்துறை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளில், மிகுந்த கவனமும், நைச்சியமும் தேவை. இல்லையென்றால், உன் மனைவியும், அக்கா கணவனும், உன்னை தலைகீழாய் கவிழ்த்து விடுவர். அதனால், நடவடிக்கைகளை எடுக்கும் முன், ஒரு நேர்மையான வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெறு. வெற்றி உனதே!

— என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us