காந்தி கொள்கைகளை பரப்ப, சிற்பம் செதுக்கும் இளைஞர்!
காந்தி கொள்கைகளை பரப்ப, சிற்பம் செதுக்கும் இளைஞர்!
PUBLISHED ON : செப் 30, 2012

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர், முருக பூபதி. காந்தீய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சிற்பங்களை, சாக்பீசில் செதுக்கி வருகிறார். கெட்டவற்றை பார்க்கக் கூடாது; கேட்கக் கூடாது; பேசக் கூடாது என்ற, தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட மூன்று குரங்குகள், தாய்ப்பால் கொடுக்கும் இளம்பெண், புதியதோர் உலகம் செய்ய பூமிப் பந்தை உயர்த்திப் பிடிக்கும் மூன்று இளைஞர்கள் போன்ற சிற்பங்களை செதுக்கி உள்ளார். காந்தியின், வித விதமான உருவங்கள் கொண்ட சிற்பங்கள் வடிப்பதில், இவருக்கு அலாதி பிரியம்.
'ஒரு முறை வகுப்பில் எங்கள் ஆசிரியர், காந்தியை பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஆர்வமாக நான் கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த சக மாணவன், பாடத்தை கவனிக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கவனத்தை ஈர்ப்பதற்காக, ஆசிரியர் தூக்கி எரிந்த சாக்பீஸ், என்னிடம் வந்து விழுந்தது. பள்ளி முடியும் வரை அதை, பாக்கெட்டில் வைத்திருந்தேன். வீட்டில் ஓய்வாக இருந்த போது, சாக்பீசை, குண்டூசி வைத்து செதுக்கினேன். அதுவே பழக்கமானது. அன்றிலிருந்து இன்று வரை, சுடுமண் சுதை சிற்பங்கள் செய்வதே, வாடிக்கையாகி விட்டது...' என்கிறார் முருகபூபதி.
காந்தி, கருணாநிதி, மார்க்ஸ், லெனின், இரட்டை மலை சீனிவாசன், சமாதானப் புறா, கோவில் கோபுரங்கள், ஆதிகால மனிதர்களின் வாழ்க்கை என அனைத்தையும், அச்சு அசலாகச் செதுக்கி உள்ளார். 'ஒவ்வொரு சாக்பீஸ் சிற்பத்திலும் ஒரு கதை சொல்ல வேண்டும் என்பது, என் எதிர்கால திட்டம். விரைவில் அது நிறைவேறும்...' என, நம்பிக்கையுடன் சொல்கிறார்.
'ஒரு சாக்பீஸ் சிற்பத்தைச் செதுக்க, பத்தாயிரம் முறை ஊத வேண்டும். பைசா கோபுரம் மற்றும் நிகழ்வுகளை அடிப்படை யாகக் கொண்ட சிற்பங்களை செதுக்கும் போது, ஒரு லட்சம் முறை ஊத வேண்டும். இதனால், தினந்தோறும் என் சக்தி வீணாகும். நாள்தோறும் என் உடலின் எடை, குறைந்து கொண்டே வந்தது. 'உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில், சாக்பீஸ் சிற்பங்கள் செதுக்குவதை நிறுத்த வேண்டும்...' என, மருத்துவர் அறிவுரை கூறினார். கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் வரை, சிற்பம் செதுக்குவதை நிறுத்தப் போவதில்லை. 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...' என, பாரதி சொன்னான். அதை, எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்...' என்கிறார் முருகபூபதி.
அவரது லட்சியம் நிறைவேற வாழ்த்துவோம்!
அ.ப.ராசா
