PUBLISHED ON : செப் 23, 2012

வீட்டை விட்டு பிரிந்து இருப்பவர்கள், தனிமையில் வாடுவது வழக்கமானது தான். இந்த ஏக்கத்திலிருந்து விடுபடுவதற்கு, சில காலம் பிடிக்கும். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் மெலிண்டா சிமிட் என்ற பெண்ணுக்கும் இந்த பிரச்னை இருந்தது. பணி நிமித்தமாக, தான் வசித்த, கிராமத்தில் இருந்து, மற்றொரு பெரிய நகரத்துக்கு, இடம் பெயர வேண்டி இருந்தது.
வீட்டை விட்டு பிரிந்து வந்த அவரை, தனிமை வாட்டியது. வேலை செய்ய முடியாத அளவுக்கு, மனக் கவலை ஏற்பட்டது. இதை போக்குவதற்காக, இவர் கையாண்ட அணுகுமுறை, மிகவும் வித்தியாசமானது. தினமும், வீட்டை வீட்டு வெளியில் வந்ததும், சாலையில் செல்வோர், அலுவலகத்தில் இருப்பவர்கள் என, அனைவரையும் கட்டிப் பிடிக்க துவங்கினார். மற்றவர்களை இதுபோல், கட்டிப்பிடிப்பதன் மூலம், தனிமையிலிருந்து விடுபட்டு, மனதுக்குள் ஆத்மார்த்தமான ஒரு அமைதி ஏற்படுவதாக, இவர் கூறினார். இவரின் இந்த வித்தியாசமான செய்கைக்காக, கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், முகம் தெரியாதவர்களைக் கூட, கட்டிப்பிடிக்கும் பழக்கத்தை, தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.
'என்னைப் போல், வீட்டை விட்டு பிரிந்து வாழும் யாராவது, தனிமையில் பாதிக்கப்பட்டிருந்தால், இதுபோன்ற கட்டிப்பிடி வைத்தியத்தை பின்பற்றுங்கள். உங்களின், கவலைகள் எல்லாம் பறந்து போய் விடும்...' என, இதற்கு விளக்கமும் அளிக்கிறார் மெலிண்டா.
— ஜோல்னா பையன்.
