தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : செப் 23, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீரபாண்டிய கட்டபொம்மு, நாயக்கர் (தெலுங்கு) வம்சத்தைச் சேர்ந்தவர். 'தொட்டிய நாயக்கர்' எனப்படும் இவர்கள், 'தொட்டி நாயக்கர்' என்றும் மருவி வழங்குவர். இன்றும் இவ்வினத்தார் சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை முதலிய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். துங்கபத்திரை நதிக்கரையில் இருந்த, 'கம்பிலி' எனும் பகுதியிலிருந்து, இவர்கள் தமிழகம் வந்தமையால், கம்பல நாயக்கர் என்றும், 'கம்பளத்து நாயக்கர்' என்றும் அழைக்கப்படுவர்.

இப்படி வந்தவர்களில் ஒருவன் பொம்மு. 16 வயது இளைஞன். மணியாச்சிக்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவில், பெரிய ஏரிக்கரையில் உள்ள, சாலிக்குளம் என்ற இடத்தில், இவர்கள் குடும்பம் வாழ்ந்தது.

ஒருநாள் இரவு, கள்வர் பலர் கொள்ளையடித்து விட்டு, நள்ளிரவில் இவ்வழியே வந்தனர். அந்த திருடர்களை, பொம்மு ஒருவனாகவே எதிர்த்து நின்று தாக்கி, வென்று, பொருட்களை மீட்டான். அப்போது சாலிக்குளத்தருகே, வீரபாண்டியபுரத்தை ஆண்டு வந்த, ஜகவீர பாண்டியன் என்ற மன்னன், அச்செய்தியைக் கேள்வியுற்று, பொம்முவை தன் அவைக்கு அழைத்து, அவன் வீரத்தைப் பாராட்டி, பொம்மு கெட்டிக்காரன் என்ற பொருள் பட, 'கெட்டி பொம்மு' என்ற பட்டத்தை வழங்கினான். கெட்டி பொம்மு மருவி, 'கட்டபொம்மு' ஆயிற்று.

ஜகவீர பாண்டியன், அக்காலத்தில் தனக்குப் பகைவராயிருந்த விஜயராமன், உக்கிரசிங்கன் என்ற இரண்டு அரசர்களை வென்று வருமாறு, கட்டபொம்முவின் தலைமையில் ஒரு படையை அனுப்பினான்.

இந்தக் கன்னிப் போரை வெற்றிகரமாக முடித்து வந்த கட்டபொம்முவுக்கு, மன்னன், 'வீர பாண்டியன்' என்ற தன் பெயரின் ஒரு பகுதியைப் பட்டம் போல அளித்து, சிறப்பித்ததோடு, அவனைத் தம்முடனேயே இருக்கச் செய்தான். தனக்குப் பின், தன் அரசை ஆள்வதற்கு ஆண் மகவு இன்மையால், மன்னன், வீரபாண்டிய கட்டபொம்முவையே அரசுக்கு உரிமையாக்கி விட்டு காலமானான்.

இந்த ஆதி கட்ட பொம்மு, இவ்வாறாகத் தன் அரச வம்சத்தை, கி.பி.1148 முதல் தோற்றுவித்தார். அரசுரிமை பெற்றதும், தன் இனத்தவர் பலரை, ஆந்திர நாட்டிலிருந்து அழைத்து, தென்நாட்டில் குடியேறச் செய்தார். இப்போது ஒட்டப் பிடாரம் என வழங்கும் ஊரின் அருகே, தகுதியான தோட்டம் ஒன்றில் கோட்டை அமைத்து, அதைத் தன், தலைநகராக்கிக் கொண்டார்.

இவ்வாறு அமைத்த நகருக்கு, தம் முன்னோர்களில் ஒருவனாகிய, 'பாஞ்சாலன்' என்பவனது நினைவாக, 'பாஞ்சாலங்குறிச்சி' (குறிச்சி என்றால் வாழும் இடம் என்று பொருள்.) என்று பெயரிட்டார். ஆதி கட்டபொம்முவுக்குப் பின், பட்டம் ஏற்ற அனைவரும், 'பொம்மு' என்ற மரபுப் பெயரைச் சூட்டி, 700 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

— ஆர்.சி.சம்பத் எழுதிய, 'வீரபாண்டிய கட்டபொம்மு' நூலிலிருந்து...

***

குதம்பைச் சித்தர் என்று, பதிணென் சித்தர்களுள் ஒருவருக்குப் பெயர். குதம்பை என்பது, மகளிர் காதில் அணியும் ஆபரணம். அதை அணிந்த பெண்ணை, 'குதம்பாய்' என்று விளித்து, அந்தச் சித்தர் பாடினார். ஆதலால், 'குதம்பைச் சித்தர்' என்ற பெயர் பெற்றார். அந்த பாடல்:

மாங்காய்ப் பாலுண்டு

மலைமேல் இருப்போர்க்கு!

தேங்காய்ப் பால் ஏதுக்கடி? - குதம்பாய்

தேங்காய்ப் பால் ஏதுக்கடி?

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us