/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (1)
/
ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (1)
PUBLISHED ON : மே 05, 2019

உலக வரைப்படத்தில் மட்டுமே அமெரிக்காவை பார்த்திருந்த எனக்கும், என் மனைவிக்கும், அமெரிக்கா செல்லும் வாய்ப்பு, சமீபத்தில் கிட்டியது.
அமெரிக்காவில் உள்ள என் மருமகன் மூலம், சென்னை அமெரிக்க துாதரகத்தில், 'ஆன்லைனில்' விசாவிற்கு விண்ணப்பித்து, நேர்காணல் தேதி வாங்கினோம்.
அமெரிக்க விசா வாங்குவது அவ்வளவு எளிதல்ல என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நடைமுறையில் பெரிய சிரமமாக இருக்கவில்லை. நேர்காணல் தேதியன்று சென்னை, அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துாதரகத்திற்கு சென்றோம்.
வரிசையில் காத்திருந்தோம். அருகில் இருந்தவர்கள், 'என்ன கேள்வி கேட்பர், அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும்...' என்று பேசி, பதில்களை மனப்பாடம் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் பயமும், பதற்றமும் எங்களையும் தொற்றிக் கொண்டது.
எங்களுக்கு முன் இருந்தவர்களை அழைத்து, சில கேள்விகளை கேட்ட அமெரிக்க துாதரக பெண் அதிகாரி, அவர்களின் விசா விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தார். இது, எங்களை மேலும் கலங்கடித்தது.
அடுத்து எங்கள் முறை. 'வணக்கம், வாருங்கள்...' என, தமிழில் அழைத்தார். தயக்கத்துடன் இருவரின் பாஸ்போர்ட்டை நீட்டினோம். அவற்றை சரி பார்த்த அப்பெண்மணி, எங்களை மீண்டும் பார்த்தார்.
'எத்தனை நாட்கள் அமெரிக்காவில் தங்க உள்ளீர்கள்...' எனக் கேட்டார். 'அதிகபட்சமாக ஆறு மாதம்...' என்றோம். சிறிது நேரம் கழித்து, 'உங்களுக்கு, விசா வழங்கப்பட்டு விட்டது; உங்கள் அமெரிக்க பயணம் இனிதாக வாழ்த்துக்கள்...' என்று ஆங்கிலத்தில் கூறி, பாஸ்போர்ட்களை வைத்துக் கொண்டார். விசா முத்திரையிட்டு, 'கூரியர்' மூலம் வீடு வந்து சேரும் என்று கூறப்பட்டது.
விசா கிடைத்த சந்தோஷத்தில், விமான பயணத்திற்கான டிக்கெட் போடும் வேலையில் இறங்கினோம். 'எமிரேட்ஸ்' விமானத்தில், துபாய் வழியாக, சிகாகோ சென்று திரும்புவதற்கான டிக்கெட், கைக்கு வந்து சேர்ந்தது.
'கையுடன் எடுத்து செல்லும் சுமைகளையும் சேர்த்து, ஒரு நபர், அதிகபட்சமாக, 53 கிலோ எடுத்து செல்லலாம்...' என்று கூறினர். சுமைகளை எடை போட்டு, 'பேக்' செய்து கொண்டோம். எதையெல்லாம் எடுத்துச் செல்லக் கூடாது என்பதற்கு, விமான நிறுவனத்தில் இருந்து ஒரு பட்டியல் கொடுத்தனர். அவற்றை தவிர்த்து, மற்றவற்றை எடுத்து, சென்னை விமான நிலையத்திற்கு சென்றோம்.
அதிகாலை, 4:30 மணிக்கு விமானம். குடியுரிமை மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்து, விமானத்தில் ஏறினோம். அதுவரை பெரிய விமானங்களில் நான் பயணித்தது இல்லை. 'போயிங் 777' ரக விமானம் அது; கப்பல் போல இருந்தது. எங்களுக்கு உரிய இருக்கையில் அமர்தோம்.
சரியான நேரத்தில், விமானம் துபாய் நோக்கி பறக்கத் துவங்கியது.
இந்த நேரத்தில், என்னை அறியாமல், என் முதல் விமானப் பயணம் நினைவிற்கு வந்தது. கிட்டத்தட்ட, 15 ஆண்டுகளுக்கு முன், 'ஏர்டெக்கான்' விமான நிறுவனம், சென்னை - டில்லி இடையே, குறைந்த கட்டண சேவையை துவங்கியது.
இந்த விமானத்தில், பத்திரிகையாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். என்னையும், புகைப்பட நண்பர், மாரியப்பனையும், 'தினமலர்' சார்பில், அனுப்பி வைத்தார், அந்துமணி. டில்லி சென்று, ஒரு நாள் முழுவதும் நகரை சுற்றிப் பார்த்து, மாலை அதே விமானத்தில், சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், மழை பெய்ய துவங்கியது. நேரம் செல்லச் செல்ல காற்றின் வேகமும், மழைப் பொழிவும் அதிகரித்ததால், அவ்வப்போது விமானம் தள்ளாடத் துவங்கியது.
முதல் பயணம் என்பதால், மிகவும் பயந்து விட்டோம். நண்பர் மாரியப்பனோ, பிள்ளை குட்டிகளை நினைத்து அழும் நிலைக்கு சென்று விட்டார். ஒரு வழியாக விமானம், சென்னையில் தரையிறங்கியதும் தான் எங்களுக்கு மூச்சே வந்தது.
மறுநாள் காலை, அழைத்தார், அந்துமணி.
'டில்லி பயணம் எப்படியிருந்தது?' என்று கேட்டார்.
விமானத்தில் பட்ட பாட்டை வரி விடாமல் கூறினேன். அதைக் கேட்டு, குலுங்கி குலுங்கி சிரித்த அவர், 'முதல் விமானப் பயணம் அப்படி தான் பயமாக இருக்கும். அடுத்தடுத்து சென்றால் சரியாகி விடும்...' எனக் கூறினார்.
அந்த நினைவுகளை அசை போட்டபடியே, விமானத்தில் அமர்ந்திருந்தேன். கிட்டத்தட்ட நான்கு மணி நேர பயணத்திற்கு பின், துபாயை அடைந்தது, விமானம். அங்கு, சிகாகோ புறப்படும் விமானத்திற்கு மாற வேண்டும். சிரமமில்லாமல், அந்த விமானத்தையும் பிடித்தோம்.
பல்வேறு நாடுகளில் இருந்து, சிகாகோ செல்ல வரும் பயணியர் ஒருங்கிணைக்கப்பட்டு, விமானத்தில் ஏற்றப்படுகின்றனர். கிட்டத்தட்ட, 350 பயணிகளுடன், அந்த விமானம் புறப்பட்டது. '15 மணி நேர பயணத்திற்கு பின், சிகாகோவில் தரையிறங்கும்...' என்று, விமானி அறிவித்தார்.
இருக்கைக்கு முன் வைக்கப்பட்டுள்ள கையடக்க, 'டிவி'யில், விமானம் எவ்வளவு உயரத்தில், எத்தனை கி.மீ., வேகத்தில், எந்த நாட்டிற்கு மேல் பறந்து கொண்டிருக்கிறது போன்ற தகவல்கள் வந்தபடி இருந்தன. மேலும், திரைப்படங்களும் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் சில ஆங்கில, தமிழ் படங்களை பார்த்து, நேரத்தை கடத்தினோம்.
நாங்கள் சென்ற விமானம், 50 ஆயிரம் அடி உயரத்தில், மணிக்கு, 950 கி.மீ., வேகத்தில் பறந்து கொண்டிருப்பதாக, 'டிவி'யில் தெரிய வந்தது; பிரமித்துப் போனாம்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், காலை உணவு வந்தது. டிக்கெட் வாங்கும்போதே, சைவம் என்று குறிப்பிட்டிருந்ததால், வெண் பொங்கல், 'ஸ்டப்டு' பஜ்ஜி, சாலட் என, உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஜூஸ், காபி, டீ, 'உற்சாகபானம்' என, எது வேண்டுமானாலும் தருகின்றனர்.
ஒரு கப் டீ சாப்பிட்டுவிட்டு, கண் அயர்ந்த சமயம், எங்கள் இருக்கைக்கு பின் இருந்து, ஒரு பெண், அலறும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்து திரும்பி பார்த்தபோது, ஒரு இளம் பெண், இருக்கையின் மீது எழுந்து நின்று, புரியாத பாஷையில் கத்திக் கொண்டிருந்தார்...
— தொடரும்.
எஸ்.உமாபதி