
அன்பு சகோதரிக்கு —
என் வயது, 56, கணவர் வயது, 64; அரசு பணி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன், பி.இ., படித்து, ஐ.டி., நிறுவனம் ஒன்றில், அமெரிக்காவில் பணிபுரிகிறான். அவனுக்கு திருமணமாகி, மூன்று வயதில் ஒரு மகன் உள்ளான்.
மருமகளும் வேலைக்கு செல்பவள். வயோதிகம் காரணமாக, மூட்டு வலி, எலும்பு தேய்மானம், சர்க்கரை, ரத்த அழுத்தம் என, உடல் நல குறைவால், அவதிப்பட்டு வருகிறோம். இந்நிலையில், அமெரிக்காவில் இருவரும் வேலைக்கு செல்வதால், மகனை பார்த்துக் கொள்ள இயலாமல், எங்களை வளர்க்க சொல்கிறான்.
பேரனை வளர்க்க ஆசையாக இருந்தாலும், வயதான காலத்தில், அந்த பொறுப்பை சரியாக செய்ய முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. உடல்நிலை மேலும் மோசமடைந்தால், எங்களை கவனிக்க யாரும் இல்லை. இந்நிலையில், பேரனை எப்படி வளர்த்து, ஆளாக்குவது!
எங்கள் சிரமத்தை புரிந்து கொள்ளாமல்,பேரனை இங்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறான், என் மகன். 'வேலையை விட்டு விட்டு, இந்தியாவுக்கு திரும்பி வா...' என்றால், எங்கள் மீது கோபப்படுகிறான்.
சொந்த வீடும், கணவரின் ஓய்வூதிய பணமுமே எங்களுக்கு ஆதரவு. மகனுக்கு சொல்லி புரிய வைக்க தெரியாமல், மன உளைச்சலில் இருக்கிறோம். எங்களுக்கு தக்க ஆலோசனை தருவீர்கள் என்றும் நம்புகிறோம்.
— இப்படிக்கு,
அன்பு சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
கடந்த, 10 ஆண்டுகளில், திருமண ஆன புதுமண தம்பதியரின் பட்டியலை பார்த்தால், 95 சதவீத கணவன் - மனைவியர், பணிக்கு செல்பவர்களாகவே இருப்பர். பணிக்கு செல்லும் பெண்களில், 25 சதவீத பேர், கர்ப்ப காலத்திலோ, பிரசவத்துக்கு பின் குழந்தையை கவனிக்க வேண்டியோ, வேலையை விட்டு விடுகின்றனர். 75 சதவீத பெண்கள், கர்ப்ப கால விடுமுறைக்கு பின், பணிக்கு திரும்புகின்றனர்.
பெரும்பாலும், கணவரின் தாய், பிறக்கும் பேரன் - பேத்தியை கவனிக்க வற்புறுத்தப் படுவதில்லை. அவர்களுக்கு தனி சலுகை அனுமதிக்கப்படுகிறது.
மனைவியின் தாயே, ஆயா வேலை பார்க்க பணிக்கப்படுகிறாள். உன் விஷயத்தில், தாய் - தந்தை இருவரையும், ஆயா வேலை பார்க்க சொல்கிறான், மகன்.
பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகனை, வேலையை விட்டு, இந்தியாவுக்கு வா என கூறுவதில், துளியும் நியயமில்லை. பார்க்கும் வேலையை உதறி இந்தியாவுக்கு வந்தால், மகனுக்கும், மருமகளுக்கும் வேலை கிடைப்பது அரிதான விஷயம்.
மகனின் குடும்பத்தை, உன் கணவரின் ஓய்வூதியத்தில் பராமரிக்க முடியுமா... அதற்கு மகனின் தன்மானம் இடம் கொடுக்குமா? அமெரிக்க ஆடம்பர வாழ்க்கையையும், லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தையும் துறந்து, உங்கள் நிழலில் வந்து வாழ, எந்த முட்டாள் மகனும் சம்மதிக்க மாட்டான்.
கீழ்கண்ட யோசனைகளை கூறுகிறேன்... தேவையானதை எடுத்துக் கொள்.
* மகனிடம் பேசும்போது, வாக்குவாதம் பண்ணுவது போல், குற்றச்சாட்டுவது போல் பேசாதே... அக்கறையுடன், கரிசனத்துடன், உதவி செய்யும் மனோபாவத்துடன் பேசு. 'மகனே... எனக்கும், அப்பாவுக்கும், முதுமை தொடர்பான உடல் உபாதைகள் அதிகம். பேரன் எங்களிடம் வளர்வதை விட, மருமகளின் பெற்றோர் வீட்டில் வளர்வது சிறப்பாக இருக்கும். பொறுப்பை தட்டிக் கழிக்கிறோம் என, எண்ணாதே. மனைவியிடமும், மாமனார் - மாமியாரிடமும் பேசு. ஒருவேளை, பேரன் வளர்ப்பை அவர்கள் விரும்பி ஏற்கலாம்...' எனக் கூறு
* சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், மூட்டு வலி எல்லாமே, 60 வயதை நெருங்கும் அனைவருக்கும் ஏற்படும் உடல் பிரச்னைகள் தான். 50 வயதுக்கு மேல் குழந்தை பெற்றதாக நினைத்து, தைரியமாய் பேரனை அழைத்து கொஞ்சி மகிழுங்கள். அதன்பின், பேரன், உங்களில் ஒருவனாகி விடுவான். மகன் மீது காட்ட மறந்த பாசத்தை, பேரன் மீது காட்டுங்கள்
* பேரனை பார்த்துக்கொள்ள, நாங்கள் தயார். ஆனால், எங்களின் உடல்நிலை அனுமதிக்காது என, நினைக்கிறாயா... கணவரின் ஓய்வூதியத்தில் சிறு தொகையை ஒதுக்கி, பேரனை முழுநேரமும் வீட்டிலேயே இருந்து கவனித்துக் கொள்ள, ஆதரவற்ற, உறவுக்கார பெண் யாராவது இருந்தால் நல்லது. கணவரின் ஓய்வூதியம் போதுமானதாய் இல்லையென்றால், பேரனை வளர்க்க ஆகும் மாதாந்திர செலவை, உன் மகன், மாதா மாதம் அனுப்ப ஒரு உடன்படிக்கை செய்து கொள்
* 'பேரனின் மாதாந்திர செலவுக்கு பணம் கொடுத்தாலும், எங்களால் இரண்டு மூன்று ஆண்டுகள் தான் வளர்க்க முடியும். அதன்பின், மகனை, உன்னுடன் வைத்து வளர்க்க வேறு ஏதாவது ஏற்பாடு செய்துக் கொள்...' என கூறு.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.