
மணிவாசகர் பதிப்பான, எழுத்தாளர் வாமனன் எழுதிய, பி.ஆர்.எஸ்.கோபாலின், 'குண்டூசி சரித்திரம்' என்ற நுாலிலிருந்து: தமிழ் பத்திரிகைகளின் சரித்திரத்திலேயே முதன் முதலில், கேள்வி - பதில் பகுதியை துவக்கி, பதில் அளித்தவர், பி.ஆர்.எஸ்.கோபால். அதாவது, 'குண்டூசி' கோபால்!
இவர், 'குண்டூசி' இதழை ஆரம்பிக்கும் முன், 'சில்வர் ஸ்கிரீன், ஹனுமான், பேசும் படம்' போன்ற இதழ்களில் பணிபுரிந்தவர்.
'குண்டூசி' இதழில், தன்னுடைய, கேள்வி - பதில் பகுதியாலேயே, அவ்விதழை சிறப்பாக்கினார்.
உதாரணத்துக்கு சில:
சில திரைப்பட இயக்குனர்கள், தங்கள் படங்களை தாங்களே, 'எடிட்' செய்ய விரும்பியதன் ரகசியம் என்ன?
ரகசியம் ஒன்றும் இல்லை. தான் முட்டாள்தனமாக எடுத்து தள்ளியிருக்கும், எதிர்மறை காட்சிகளை, வேறொருவர் பார்த்து சிரிப்பதற்கு, எந்த இயக்குனர் தான் விரும்புவார்!
தமிழ் படங்களில், நகைச்சுவை காட்சிகள் இருந்தால் தான் படம் வெற்றியடையுமா?
தற்போதைய நிலைமையில், படத்தில், நகைச்சுவை காட்சிகள் சேர்க்காவிட்டால், படத்தை வெளியிடவே முடியாது என்று, பட முதலாளிகள் சொல்கின்றனர்!
சங்கீதம் தெரிந்த ஒருவர் தான், சினிமாவில் சேர வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும்?
சங்கீதத்தை விடுவதா, சினிமாவில் சேரும் யோசனையை விடுவதா என்று, தீர்மானித்துக் கொள்ள வேண்டும்!
தமிழ் படங்கள் பலவற்றில், எமதர்மராஜனை காட்டியிருக்கின்றனர். ஆனால், ஒன்றிலாவது, அவருக்கு, மனைவி இருப்பதாக காட்டவில்லையே... உண்மையான, எமதர்மனுக்கு, மனைவி உண்டா?
எல்லாரது உயிரையும் வாங்கும் எமதர்மனின் உயிரை வாங்க, ஒரு மனைவி இருக்க வேண்டியது அவசியம் தான்!
டி.ஆர்.ராஜகுமாரி, எதுவரை படித்திருக்கிறார்?
எந்த புத்தகத்தை என்று, நீர் தெரிவிக்கவில்லையே!
சினிமா நடிகைகளில், அழகில் சிறந்தவர் யார்?
நான் என்ன சொல்வது? சினிமாவில் ஈடுபட்டுள்ள அத்தனை நடிகைகளும் தான்; சிறந்த அழகி என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரே!
கடந்த, 1938ல் ஆரம்பித்து, 1950களையும் தாண்டி, இந்த கேள்வி - பதில் பகுதி பயணித்துள்ளது.
அந்த கால கவர்ச்சி கன்னியான, டி.ஆர்.ராஜகுமாரியை பற்றி தான் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மற்றொரு நடிகை, பி.பானுமதி. நடிப்புக்காகவும், வித்தியாசமான அழகுக்காகவும் புகழப்பட்டுள்ளார்.
மிக நல்ல பெயருடன் பவனி வந்தவர், நடிகர் நாகையா.
எம்.கே.டி.பாகவதர், 'என்னை, பாட்டு தான் காப்பாற்றுகிறது; நடிப்பல்ல...' என, தானே ஒப்புக்கொண்டுள்ளார்.
ஓரளவுக்கு கண்ணியமாகவே பதிலளித்துள்ள, 'குண்டூசி' கோபால், ஒரு சமயம், முகத்தில், கத்திக் குத்தையும் எதிர்கொண்டுள்ளார்.
காந்திஜி இறந்தபோது, 'குடியரசு' இதழில்,ஈ.வெ.ரா., எழுதியது: காந்திஜிக்கு, ஞாபக சின்னம் ஏற்படுத்துவது அவசியம். அது, நிரந்தரமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். அதற்கு என் தாழ்மையான யோசனை:
* இந்தியாவுக்கு, 'ஹிந்துஸ்தான்' என்ற பெயருக்கு பதிலாக, 'காந்தி தேசம்' அல்லது 'காந்திஸ்தான்' என்று பெயரிடலாம்
* இந்து மதம் என்பதற்கு பதிலாக, 'காந்தி மதம்' அல்லது 'காந்தியிசம்' என்பதாக பெயர் மாற்றலாம்
* இந்துக்கள் என்பதற்கு பதிலாக, 'மெய்ஞ்ஞானிகள்' அல்லது 'சத்ஞானஜன்' என்று பெயர் மாற்றலாம்
* காந்தி மத கொள்கையாக, இந்தியாவில் ஒரே பிரிவு மக்கள் தான் உண்டு; வருணாசிரம தர்மமுறை அனுசரிக்கப்பட மாட்டாது. ஞானமும் - அறிவும், பாசமும் - அன்பும் அடிப்படையாக கொண்டிருக்கும். சத்தியமே நியாயமானது என்பதான சன்மார்க்கங்களை கொண்டிருக்கும் பொருட்டு, 'கிறிஸ்து ஆண்டு' என்பதற்கு பதிலாக, 'காந்தி ஆண்டு' என்று துவங்கலாம்.
இப்படிப்பட்ட காரியங்கள் செய்வதால், புத்தர், கிறிஸ்து, முகம்மது முதலானவர்களுக்கு, காந்திஜி ஒப்பானவராகவும், இன்றைய நிலைமைக்கு தோன்றிய ஓர் சீர்திருத்த மகானாகவும் உலகமே கருதும்படியான நிலை ஏற்படும்.
நடுத்தெரு நாராயணன்