
சிரஞ்சீவிக்கு கசப்பான அரசியல்!
'பிரஜா ராஜ்ஜியம்' என்ற கட்சியை துவங்கிய, சிரஞ்சீவிக்கு, எதிர்பார்த்தபடி, மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால், இப்போது அரசியலுக்கே முழுக்கு போட்டு, மீண்டும் முழு நேர நடிகராகி விட்டார். இந்நிலையில், அவரது தம்பியான தெலுங்கு நடிகர், பவன்கல்யாண், புதிய கட்சி துவங்கியிருப்பதோடு, தேர்தலில் அவரை பிரசாரம் செய்ய அழைத்தார். அதற்கு சிரஞ்சீவியோ, 'எனக்கு, ஆதரவு அளிக்காத மக்களிடம், இனிமேலும், நான் சென்று, ஓட்டுக்காக கையேந்தி நிற்க மாட்டேன்; எதிர்காலத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் நான் அரசியலுக்கும் வரமாட்டேன்...' என்று சொல்லியுள்ளார்.
— சினிமா பொன்னையா
மிரட்டும், நிவேதா!
ஒருநாள் கூத்து படத்தில், அடியெடுத்து வைத்த, நிவேதா பெத்துராஜ், தற்போது, தமிழ், தெலுங்கில், 'பிசி' நடிகையாகி விட்டார். ஏற்கனவே, டிக் டிக் டிக் படத்தில், 'பிகினி'யில் பின்னியெடுத்த, நிவேதா, அடுத்து நடிக்கப் போகும் ஹாலிவுட் படத்தில், உலக நடிகைகளே மிரண்டு போகும், 'செம ஹாட்' நடிகையாக வெடித்து சிதறப் போவதாக கூறுகிறார். நிவேதா பெத்து ராஜின், இந்த மிரட்டல், சக நடிகைகள் மட்டுமன்றி, ஹாலிவுட் வரை அதிர வைத்துள்ளது.
— எலீசா
கணவருடன், 'டூயட்' பாட விரும்பும், சமந்தா!
திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தன் கணவர் நாக சைதன்யாவுடன், மஜிலி என்ற படத்தில் நடித்த, சமந்தா, அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 'அதாவது, இன்னொரு நடிகருடன் நடிக்கும்போது, ஒரு கோடு போட்டு தான் நடிப்பேன். ஆனால், என் கணவருடன் என்பதால், எந்த தடையும் இல்லாமல் அந்த கதாபாத்திரத்தில் மிக தத்ரூபமாக நடிக்க முடிந்தது. அதனால், தொடர்ந்து என்னவருடன் இணைந்து, வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன்...' என்கிறார். பத்தினி படாபடா என்றாளாம். பானை சட்டி லொட லொட என்றனவாம்!
— எலீசா
ரெஜினாவை அதிர வைத்த, காதல், 'கிசுகிசு!'
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும், ரெஜினா, இதுவரை, 'கிசுகிசு'க்களில் சிக்காமல் தப்பி வந்தார். சமீபத்தில் சிரஞ்சீவியின் சகோதரி மகன், சாய் தரம் தேஜை, அவர் காதலித்து வருவதாக, டோலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியாகின. இதனால், அதிர்ந்து போன ரெஜினா, 'அந்த நடிகரை படத்திற்காகத்தான் காதலித்தேனே தவிர, நிஜத்தில் அவரை காதலிக்கவில்லை. நடிகையானதில் இருந்தே நான் சினிமாவைத்தான் காதலித்து வருகிறேன்...' என்று, 'ஸ்டேட்மென்ட்' கொடுத்து, அந்த, 'கிசுகிசு'வை தற்காலிகமாக ஊதி அணைத்துள்ளார். பலன் தேட போய், பழி வந்து சேர்ந்தது போல!
— எலீசா
விஜயசாந்தி, 'ரீ - என்ட்ரி!'
கடந்த, 1980 - 90களில், தென் மாநில சினிமாவில், 'ஆக் ஷன் ஹீரோயினி'யாக வலம் வந்தவர் விஜயசாந்தி. பின், 2009 லோக்சபா தேர்தலில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சார்பில் போட்டியிட்டு, எம்.பி., ஆனவர், அதையடுத்து, காங்கிரசில் இணைந்தார். ஆனால், இப்போது, அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். தெலுங்கில், மகேஷ்பாபு நடிக்கும், ஒரு படத்தில் நடிப்பவர், தனக்கு ஏற்றபடியான கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பளிக்குமாறு, தமிழ் சினிமா இயக்குனர்களிடம் கேட்டு வருகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* பாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்புகள் இல்லாததால், கோலிவுட்டுக்கு, மீண்டும் நடிக்க வந்தார், நடன சூறாவளி. ஆனால், தற்போது அங்குள்ள, பிரபல, மான் நடிகரை வைத்து, ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும், தான் நடித்து வந்த சில படங்களை அப்படியே போட்டு, மும்பைக்கு பறந்து விட்டார். இதனால், அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
'மேஸ்திரி பிரபுதேவாவை வர சொல்லுங்க.'
'ஐயா... கூப்பிட்டீங்களா?'
'ஏம்பா மேஸ்திரி... கட்டட வேலை இன்னும் முழுசா முடியல... பாதியிலே நிற்குது... வேலையை அப்படியே கிடப்பில் போட்டுட்டு, நீ பாட்டுக்கு, வெளியூர் போயிட்டா, என்னய்யா அர்த்தம்...' என்றார், கட்டட ஒப்பந்ததாரர்.
* ஓவியமான நடிகையின் ஆபாச அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த பரபரப்பை பயன்படுத்தி, 'நம்பர் ஒன்' நடிகர்களுடன் கலக்கல் ஆட்டம் போட துடிக்கும் நடிகை, அவர்களை எங்கு பார்த்தாலும், தன் ஆட்டம் போடும் ஆசையை அவிழ்த்து விடுகிறார். அதேசமயம், கதாநாயகியாக நடிப்பதற்கு கேட்கும் சம்பளத்திற்கு இணையாக, ஒரு பாட்டுக்கு ஆடவும் அம்மணி கேட்பதால், அவரை நெருங்கவே தயங்குகின்றனர், தயாரிப்பாளர்கள்.
'அன்ன நடை நடக்க போய், தன் நடையும் போச்சாம்... என்ற கதை போல், குருவி வால் போல் கூந்தல் வச்சிருக்கிற நீ எதற்கடி, ஓவியா மாதிரி, கூந்தல் அலங்காரம் செய்துக்கணும்ன்னு ஆசைப்படறே...' என்றாள், தோழி.
சினி துளிகள்!
* பொன்மாணிக்கவேல் படத்தை அடுத்து, தேள் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், பிரபுதேவா.
*களவாணி படத்தில், பள்ளி மாணவியாக நடித்த, ஓவியா, களவாணி -- 2வில், கல்லுாரி மாணவியாக நடிக்கிறார்.
அவ்ளோதான்!