PUBLISHED ON : ஜன 17, 2021

விரதங்கள் என்றாலே, அது பெண்களுக்கு மட்டும் தான் என்ற நிலைமை இருக்க, ஆண்களுக்கென்று ஒரு விரதம் இருப்பது, மக்கள் மத்தியில் தெரியாமலே போய் விட்டது. அது தான், பிள்ளையார் நோன்பு.
காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சை பகுதி நகரத்தார் மத்தியில், தற்போதும் இந்த விரதம் பழக்கத்தில் உள்ளது.
இந்த விரதம் இருப்பதற்கான காரணம் தெரிந்தால், எல்லா ஆண்களுமே இதை அனுஷ்டிக்க வேண்டியதன் அவசியம் புரியும்.
ஒரு காலத்தில், நகரத்தார் சமூகத்தினர், காவிரி பூம்பட்டினத்தில் இருந்து கடல் வணிகத்துக்கு வெளிநாடு செல்வர்.
ஒரு சமயம், இவர்களில் சிலர், வணிகத்தை முடித்து, ஊர் திரும்பிய போது, கடலில் புயல் அடித்தது. அன்று, திருக்கார்த்திகை திருநாள்.
இஷ்ட தெய்வமான மரகத விநாயகரைத் தவிர, தங்களை யாரும் காப்பாற்ற முடியாது என கருதியவர்கள், அவரை மனதில் எண்ணி, வணங்கினர். கார்த்திகையில் இருந்து, 21 நாட்கள் இந்த பூஜை நடந்தது.
எத்தனை நாளில் தங்களுக்கு தீர்வு கிடைக்கிறது என்பதை அறிய, தங்கள் வேஷ்டியில் இருந்து ஒவ்வொரு நுால் வீதம் எடுத்து வைத்தனர். 21 நாட்களுக்கு பிறகு, ஒரு தீவில் கரை ஒதுங்கினர்.
தங்களைக் காத்த விநாயகருக்கு நன்றி தெரிவிக்க, உணவுக்காக வைத்திருந்த மாவுடன், சர்க்கரை, நெய் சேர்த்து, விநாயகர் போல் பிடித்தனர். அதில் சிறு குழி போட்டு, தாங்கள் எடுத்து வைத்திருந்த, 21 நுாலிழைகளைத் திரியாக்கி, தீபம் ஏற்றினர். அந்த நாள், தை வளர்பிறை சஷ்டி திதி நாளாக அமைந்தது.
இதன் அடிப்படையில், ஊருக்கு திரும்பிய பின்பும், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்துக்கு பின், 21வது நாளில், இந்த விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்தனர்.
தங்கள் வீட்டு ஆண்களிடம் இருந்து, தீப மாவு விநாயகரை, பெண்கள் வாங்கிக் கொள்வதை பெருமையாகக் கருதுவர்.
ஒருவேளை, இந்த விரத நாளில், வீட்டில் ஆண்கள் இல்லையென்றால், ஒரு வயது ஆண் குழந்தை கையில் இந்த விளக்கைக் கொடுத்து, அவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளும் வழக்கம் உள்ளது.
நகரத்தார் இல்ல திருமணத்தில், பெண்ணுக்கு, மரகத விநாயகர் சிலை சீர் வழங்குவதும் வழக்கத்தில் உள்ளது.
மற்றொரு வரலாறும் இந்த விரதத்துக்கு உண்டு. நகரத்தார் ஒருவரின் மகள், சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளானாள். அவள் மீது திருட்டு பட்டமும் சுமத்தப்பட்டது.
விரக்தியடைந்த அவள், தற்கொலைக்கு முயன்ற போது, மரகத விநாயகர் அருளால் தப்பினாள்; திருட்டு பட்டமும் நீங்கி, சிற்றன்னையும் மனம் திருந்தினாள். ஆக, பெண்களின் துன்பம் தீரவும், இந்த விரதம் அனுஷ்டிக்கலாம்.
ஜன., 19ல், இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று, மாவு விநாயகர் பிடித்து, 21 இழை நுால் திரியில் தீபமேற்றி, அப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளை பணியாரம், அதிரசம், பொரி வகை படைத்து, விநாயகரை வழிபடுங்கள். விபத்தின்றி பயணிக்க, ஆண்கள், இந்த விரதத்தை அவசியம் அனுஷ்டியுங்கள்.
தி. செல்லப்பா

