
உறவுக்கு கை கொடுப்போம்!
என் பெற்றோருக்கு, இரு ஆண், இரு பெண் என, நான்கு பேர். நால்வருக்கும் திருமணம் முடிந்து, அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம்.
பெற்றோர் மறைவுக்கு பின், சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், சில ஆண்டுகளாக மூத்த அண்ணன், மற்ற மூவருடன் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை.
சமீபத்தில், என் வீட்டுக்கு, மூத்த அண்ணனின் மகள் வந்து, 'அத்தை... என்னை காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள, அப்பா சம்மதித்து விட்டார். ஆனால், ஒரு பிரச்னை...
'நெருங்கிய உறவினர்களான, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி போன்றோர் கட்டாயம் திருமணத்திற்கு வந்து, நலங்கு வைப்பது, ஆரத்தி எடுப்பது போன்ற அனைத்து சடங்குகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று, கூறி விட்டார், மாப்பிள்ளையின் அப்பா.
'அப்பாவுக்கும் இந்த வரனை விட மனமில்லை. 'ஈகோ' காரணமாக, அப்பா வரவில்லை. தயவுசெய்து நீங்கள் அனைவரும் வந்து, இந்த திருமணத்தை நடத்திக் கொடுக்க வேண்டும்...' என, காலில் விழுந்து அழுதாள்.
இதேபோல் மற்ற சகோதரன், சகோதரி வீட்டுக்கும் சென்று பேசியிருக்கிறாள்.
நாங்கள் மூவரும் கலந்து பேசி, எங்களுக்குரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு, திருமணத்துக்கு செல்ல முடிவு செய்தோம்.
திருமணம் இனிதே நடந்தேறியது.
திடீரென, மூத்த அண்ணன் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். உடனே மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்ததில், இதயக் கோளாறு இருப்பது தெரிய வந்தது. அந்த நேரத்தில் உடன் பிறந்தோர் அனைவரும், ஆளுக்கொரு வேலையாக செய்து முடித்தோம்.
பெரிய அண்ணன், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும், எங்கள் மூவரையும் கூப்பிட்டு, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, எங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களைப் பிரித்து கொடுத்தார்.
மேலும், 'வெகு நாட்களாக மனதில் நான் கொண்ட காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, கோபம் ஆகியவையே, இதய நோய்க்கு காரணமாக இருக்கலாம் என, மருத்துவர் கூறினார். இனி, நான் திருந்தி விட்டேன்; அன்பால் உறவுகளை அரவணைப்பேன்...' என்றார்.
உறவுகளுக்கு பாலம் அமைத்துக் கொடுத்த சம்பந்தியை, நாங்கள் அனைவரும் மனதார வாழ்த்தினோம்.
- கலா ஜெயக்குமார்,
சென்னை.
பாராட்டத்தக்க, ஆசிரியையின் செயல்!
எங்கள் பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவர், அங்கு பயிலும், ஆயிரம் மாணவர்களுக்கும், பென்சிலை, பரிசாக கொடுத்தார். அவர், பென்சிலை கொடுத்தது அதிசயமில்லை. ஒவ்வொரு பென்சிலின் அடியிலும், சில தாவர விதைகளை ஒரு குப்பியில் வைத்து பொருத்தியிருந்தார்.
'மாணவர்கள் அனைவரும், தாவர விதைகளை வீட்டிலோ அல்லது பள்ளியிலோ விதைத்து, வளரும் செடிக்கு, தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும்...' என்று அறிவுறுத்தினார்.
மரம் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை, வாயால் சொல்லிக் கொண்டிருக்காமல், செயலில் காட்டியது அனைவரின் பாராட்டையும் பெற்றது.
ஒவ்வொரு மாணவரும், அவருக்கு கொடுக்கப் பட்ட விதைகளை மரமாக்கினால், இவரின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். இவரின் இந்த முயற்சியை போன்று, எல்லா பள்ளிகளிலும் ஆசிரியர்கள் செய்தால், வளரும் இளம் தலைமுறையினர், மரம் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்வர்.
இதனால், மண் வளம் பெருகுவதோடு, மழை வளமும் பெருகும்.
- கே.கே. வெங்கடேசன்,
செங்கல்பட்டு.
போற்றுதலுக்குரிய திருநங்கை!
பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தேன். குடிபோதை தலைக்கேறிய நிலையில், நடுத்தர வயதுடைய ஒருவர், படுத்துக் கிடந்தார். நான் உட்பட, யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
அப்போது, யதார்த்தமாக அங்கு வந்த திருநங்கை ஒருவர், குடிபோதைக்கு உள்ளானவரை துாக்கி, தான் வைத்திருந்த பாட்டில் தண்ணீரை முகத்தில் தெளித்து, வாயினுள் கொஞ்சம் ஊற்றினார். அருகிலிருந்த கடைக்கு சென்று, பழச்சாறு வாங்கி வந்து கொடுத்தார்.
கொஞ்ச நேரத்தில், மயக்க நிலையிலிருந்து மீண்டெழுந்த போதை ஆசாமி, திருநங்கைக்கு நன்றி கூறி, 'இனிமேல், அளவுக்கு அதிகமாக குடித்து, இதுபோன்று, கண்ட இடங்களில் வீழ்ந்து கிடக்க மாட்டேன்.
'முடிந்தவரை, குடும்பத்தை கெடுக்கும் இந்த குடி பழக்கத்தை அறவே மறக்கப் போகிறேன்...' என்று உறுதி அளித்து, அங்கிருந்து மெதுவாக நடையை கட்டினார்.
'ஆபத்து யாருக்கோ, நமக்கேன் வம்பு...' என நின்றிருந்த என்னைப் போன்ற அனைவருக்கும், நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது, திருநங்கையின் செயல்.
படுத்து கிடப்பவர், குடிகாரன் என்றில்லாமல், அவரும் மனிதர் தான் என்று நினைத்து, உதவி செய்த திருநங்கையை, அதன்பின், எங்கு பார்த்தாலும், வணக்கம் சொல்லி, மரியாதை கொடுக்கிறேன்.
- ரா. ராஜ்மோகன், திண்டிவனம்.

